வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த, பெரிய வெங்காயம், பூண்டு, மளிகைப் பொருட்கள், கோதுமை, சர்க்கரை, உரம் ஆகியவற்றின் வரத்து, முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், பெரிய வெங்காயம், பூண்டு, பருப்பு ஆகியவற்றின் விலையில், நேற்று முதல் ஏறுமுகம் ஏற்பட்டுள்ளது.
லாரி ஸ்டிரைக் தொடரும் பட்சத்தில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலை பல மடங்கு உயர, வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மத்திய தரை வழிப் போக்குவரத்து கமிஷனர் உபாத்யாயா தலைமையில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா, தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கோபால் நாயுடு, தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி ஆகியோருடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. "இந்தப் பேச்சுவார்த்தையில், உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதன் காரணமாக, லாரி ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும்' என, லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும், தற்போது பண்டிகை சீஸன் என்பதால், ஜவுளி, அத்தியாவசியப் பொருட்கள், சர்க்கரை, உரம் உள்ளிட்ட பொருட்கள், தேக்கம் அடைந்துள்ளதால், இவற்றின் விலையும் அதிகரிக்கும் என தெரிகிறது.
தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் சென்னகேசவன் கூறியதாவது: தமிழகத்தில் மட்டுமின்றி, தென் மாநிலங்கள் அனைத்திலும், 95 சதவீத லாரிகள் இயங்கவில்லை. நான்கு நாளில், சேலத்தில் மட்டும், 1,000 கோடி, தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள், குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.
மத்திய அரசு, பொதுமக்களின் நலன் கருதி, இந்த ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, எங்களின் சங்க நிர்வாகிகள், டெல்லியில் முகாமிட்டு, மத்திய தரை வழிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்று மதியம் வரை, பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்பட வில்லை. பொதுவாக, லாரி ஸ்டிரைக் துவங்கும் முதல் இரண்டு நாட்களிலேயே, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஸ்டிரைக் முடிவுக்கு வரும். ஆனால், மத்திய அரசு இந்த முறை மெத்தனமாக இருப்பதுடன், மவுனம் சாதித்து வருவதால், நான்காவது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment