அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, August 4, 2011

கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர் 40 எம்.எல்.ஏ.,க்கள்

 கர்நாடகாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சதானந்த கவுடா முதல் நாளிலேயே சிக்கலை சந்தித்தார். அவரது பதவியேற்பு விழாவை, ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுரங்க மோசடி குறித்த லோக் ஆயுக்தா அறிக்கையை அடுத்து, கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் தனது ஆதரவாளரான சதானந்த கவுடாவை முதல்வர் பதவியில் அமர்த்துவதன் மூலம் கட்சியிலும், ஆட்சியிலும் செல்வாக்கை தொடர முடிவெடுத்தார் எடியூரப்பா. இதற்கு எடியூரப்பாவின் எதிர்ப்பாளர்களான அனந்த குமார், மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா மற்றும் அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டார் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் ஜெகதீஷ் ஷெட்டாரை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் சமரச பேச்சு நடத்தியும் எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, நேற்று ரகசிய ஓட்டெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டு, ஓட்டெடுப்பில் சதானந்த கவுடா வெற்றி பெற்றதாக பா.ஜ., மேலிடம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, கவர்னரை சந்தித்த சதானந்த கவுடா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரது பதவியேற்பு விழா இன்று நடந்தது.

எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிப்பு: சதானந்த கவுடாவின் பதவியேற்பு விழாவை, ஜெகதீஷ் ஷெட்டாரும், அவரது 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்தனர். இதனால் பதவியேற்ற முதல் நாளிலேயே கடும் சங்கடத்தை சந்தித்தார் சதானந்த கவுடா. மேலும் ஜெகதீஷ் ஷெட்டாருக்கு துணை முதல்வர் பதவி மற்றும் முக்கிய துறைகளை எதிர்பார்க்கும் அவர்களால், புதிய அரசு மேலும் சிக்கல்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: