அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, August 2, 2011

செம்பைத் தங்கமாக மாற்றும் முயற்சியில் மந்திரவாதி பலி!

நெல்லை அருகே செம்பு பானையைத் தங்கமாக மாற்ற முயன்ற மந்திரவாதி செம்பு வெடித்து பலியானார். அவர் சித்தர்களின் புத்தகத்தைக் காண்பித்து செம்பைத் தங்கமாக மாற்றுவதாக நம்ப வைத்ததால் அழைத்து வந்ததாக விவசாயி காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் அருகேயுள்ள செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் விவசாயி அழகியநம்பி. இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றபோது, அண்ணாநகரைச் சேர்ந்த கணேஷ் பொன்னம்பலம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் தன்னைப் பிரபல மந்திரவாதி எனவும், பில்லி சூனியம் வைப்பதில் கைதேர்ந்தவன் எனவும் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

மேலும் பழங்காலத்தில் சித்தர்கள் மந்திரங்கள் மூலம் நிகழ்த்திய அற்புத சம்பவங்கள் அடங்கிய புத்தகங்களைக் காண்பித்து, அதில் உள்ளவாறு செம்பு, பித்தளை சாமான்களைத் தங்கமாக மாற்றும் வல்லமை தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அழகியநம்பி தனது ஊருக்கு வருமாறு கணேஷ் பொன்னம்பலத்தை அழைத்துள்ளார். அப்போது அவர் ஆடி அமாவாசையையொட்டி மந்திரங்கள் நல்ல பலனளிக்கும். அப்போது வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன்படி மந்திவாதி தனது உதவியாளர்கள் கல்பாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த சங்கர் ஆகியோருடன் நேற்று முன்தினம் அழகியநம்பியின் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனது வீட்டில் இருந்த செம்பு, பித்தளை பானைகளை எடுத்து மந்திரவாதியிடம் கொடுத்தார். செம்பு பானையில் சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட ரசாயன கலவைகளையும், மந்திர பொருட்கள் என்ற பெயரில் சிலவற்றையும் போட்டு பித்தளை மூடியினால் ஆவி வெளியேறாதபடி மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்திய போது பானை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் மந்திரவாதி பலியானார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அழகிய நம்பியிடம் பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும் போது, "சித்தர்களின் வழியில் பித்தளை, செம்பு சாமான்களைத் தங்கமாக மாற்ற முடியும் என்று மந்திரவாதி கூறியதால் தங்கத்திற்கு ஆசைப்பட்டு அவரை இங்கு அழைத்து வந்தேன். அவர் எனது வீட்டின் எதிரில் உள்ள காலிமனையில் அடுப்பு மூட்டி, நான் கொடுத்த செம்பு பானையில் சில பொருட்களைப் போட்டு மந்திரங்கள் செய்தார். திடீரென அந்தப் பானை வெடித்து சிதறியது. இதில் மந்திரவாதி பலியாகிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடைந்த சங்கர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தலைமறைவானதாக கருதப்பட்ட மற்றொரு உதவியாளர் கோவிந்தன் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர்களிடம், இதுபோன்று யார் யாரிடம் தங்கமாக மாற்றும் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர் என்பதைக் குறித்து விசாரணை மேற்கொள்ள காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

No comments: