அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, March 3, 2009

அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும் - 2

வியாட்நாமிற்கு படைகளை அனுப்ப அமேரிக்கா சொன்ன காரணம், அமேரிக்க கடற்படைகள் மீது வியாட்நாம் டோர்பிடோ படகுகள் தாக்குதல் நடத்தின என்று. அது முழுக்க முழுக்க பொய் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.

வியாட்நாமை களோபரப் படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வியாட்நாமிற்கு சுதந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரால் நடத்திய படுகொலைகளுக்கு இன்றுவரை என்ன பரிகாரம் செய்ய்பப்பட்டுள்ளது?

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் சாதாரண மனிதன் கூட தன்னால் இயன்ற அளவு எதிரிகளை எதிர்த்து போரிடத்தான் செய்வான். தனது நாட்டின் மீது படையெடுத்த எதிரிகளை எதிர்க்க அந்நாட்டின் புழுக்கள்கூட போராடத்தான் செய்யும். அதுதான் அந்நாட்டின் தன்மானம். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. ஒட்டு மொத்தமாக தீவிரவாதம் என்ற பட்டத்தை எல்லோருக்கும் சுமத்தி சம்மட்டியால் அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கும் பயித்தியக்காரணத்தைத்தான் இப்போது அமேரிக்க செய்துவருகிறது. அதை மற்ற நாடுகளும் கைகட்டி பார்த்து வருகின்றன. ஐ.நா.வில் 1978ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி, சுதந்திரத்திற்காக போராடும் எந்த நாடும், அதன் மக்களும் தனது சுதந்திரத்திற்காக எல்லா வழிகளிலும் போராடலாம், அது ஆயுதப் போராடமாக இருந்தாலும் சரி. போராடும் உரிமை அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அவர்களை அரசு தீவிரவாதத்தின் மூலம் மட்டும் பணிய வைக்கவேண்டும் என்று நினைப்பது போராளிகளை இன்னும் அதிகமாக்குமே தவிர்த்து போராட்டத்திற்கு முடிவு கிடைக்காது.

ஈராக்கியப் போராளிகளை தீவிரவாதிகள் என்ற பெயரால் ஈராக்கில் ஒயிட் பாஸ்பரஸ் மற்றும் நாப்பளம் எனப்படும் கெமிக்கல் ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன அமேரிக்கப் படைகள். இந்த உலகமும் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர்தான் மனிதாபிமானம், சுதந்திரம், மனித உரிமைகள்!

நல்ல வேளையாக இந்தியாவிற்கு 1947 லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. இல்லையென்றால் இந்தியாவின் மீதும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி, நம் சுதந்திர போராளிகள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று தூற்றியிருப்பார்கள்.

சென்ற வாரம் அமேரிக்கப் படைத்தலைவர், ஈராக்கில் ஏறக்குறைய 3000 போராளிகள் இருப்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தார். (உண்மை நிலவரப்படி, கிட்டத்தட்ட 30,000 - 50,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது). இவர்கள் ஈராக்கிற்கு எதற்காக வந்தார்கள்? போராளிகளை உருவாக்கவா? அல்லது சதாம் மறைத்து வைத்திருக்கும் WMD கண்டுபிடிப்பதற்கா?

மதிப்பிற்குரிய டொனால்டு ரம்ஸ்பீல்டு என்ன சொன்னார்? ஈராக்கில் அமேரிக்கப் படைகள் நுழையும் போது ஈராக்கிய மக்கள் கைகளில் மலர்க் கொத்துகளுடன் வரவேற்பார்கள் என்று கதை அளந்தார். நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு சாதாமின் மகன்கள் இருவரும்தான் அமேரிக்கப் படைகளுக்கு எதிராக தீவிரவாத செயல்கள் செய்கின்றனர், அவர்களை ஒழித்தால் எல்லாம் முடிந்துவிடும் என்றார்கள். அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அத்தோடு விடவில்லை. சிதைந்த அவர்களின் முகங்களை Wax மூலம் திரும்பவும் உருவாக்கி ஈராக்கியர்களுக்கு இறந்தது அவர்கள்தான் என்று உறுதிப் படுத்தினார்கள். அதன் மூலமாவது சதாம் திரும்பி பதவிக்கு வந்தாலும் வந்துவிடுவார் என்று பயந்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சமாதானமடைந்து அமேரிக்கப் படைகளுக்கு பூக்கொத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்!

ஆனால் சதாமின் மகன்கள் கொல்லப்பட்ட விதமும் இறந்த அவர்களின் உடல்களை அவமானப்படுத்திய விதமும் ஈராக்கில் சும்ம இருந்த ஒரு பகுதியினரை போராளிகளாக மாற தூண்டியது.

அதற்கு பின், சதாமை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் பதவியிழந்த பாத் பார்ட்டியினரின் தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று பாத் பார்ட்டியினரை ஈராக்கின் புதிய அரசில் சேர்த்துக் கொண்டதோடு அல்லாமல் சதாமையும் எலிக் குகைகளிலிருந்து தூசுத் தட்டி எடுத்து வந்தனர். போராட்டம் முற்று பெற்றதா? பூக்கொத்து கொடுக்கப் பட்டதா? அமேரிக்க அதிபரும் திடீரென ஒரு இரவில் பாக்தாத் விமான நிலையத்திற்கு விஜயம் செய்து பூக்கொத்து கிடைக்கிறதா என்று பார்த்தார்!

ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் 'ஜர்க்காவி' என்று இல்லாத ஒரு புதியப் படைப்பை உருவாக்கி நடக்கின்ற அட்டூழியங்களை எல்லாம் அவன் தலையில் சுமத்தி அவனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருப்பதாக உலகிற்கு அறிமுகப்படுத்தி ஈராக்கில் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இப்படி நாளொன்றிற்கு ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி சாதாரண மனிதர்களை கொன்று குவித்து ஈராக்கில் எதிரிகளைத்தான் உருவாக்கி வருகிறார்களே தவிர்த்து சரியான தீர்வை நோக்கி ஈராக்கின் தற்போதைய அரசாங்கமோ அல்லது அமேரிக்க நிர்வாகமோ ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.

தற்போது ஈராக்கின் உள்துறைக்கு சொந்தமான ஒரு பாதாளச் சிறைச்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து 170க்கு மேற்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களை வெளிக் கொணர்ந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் எலும்பும் தோலுமாக எப்போது மரணம் வரும் என்று காத்திருக்கும் நடைப் பிணங்களாக காட்சி அளிக்க.. ஈராக்கின் அரசாங்கம் எண்ணெய் கிணறுகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களுக்குத் தெரியாது.. நாங்கள் விசாரணைக் கமிஷன் நியமிக்கப் போகிறோம் என்று சொல்லி வருகின்றனர். இந்த 170 பேர்களும் ஈராக்கின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

ஈராக்கின் அபு கரீப் சிறைச் சம்பவமும் அங்கிருந்து வெளியான படங்களும் உலகமே வெட்கிக் குனிந்த அமேரிக்கா ஜனநாயகத்தின் சிறப்புகள்! கனாடவில் அடைக்கலம் தேடி ஓடிய முன்னால் அமேரிக்க வீரர் (Ex marine staff Sgt. Jimmy Massey) கனடாவிற்கு அளித்த சத்தியப் பிரமானத்தில் அவரும் அவருடன் இருந்த மற்ற வீரர்களும் சேர்ந்து முப்பது ஈரக்கிய அப்பாவிகளை, எந்தவித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணிகளை, பெண்களை, குழந்தைகளை, இளைஞர்களை சுட்டுக் கொன்றதாக கூறியிருக்கிறார். We fired at a cycle rate of 500 bullets per vehicle. (Robert Fisk, The Independent, AN 27/12/2004).

அமேரிக்கப் படை 82nd Airborne சேர்ந்த ஜெர்மி ஹிண்ஜ்மென் தனது வாக்குமூலத்தில் 'we were told to consider all Arabs as potential terrorists... to foster an attitude of hatred that gets your blood boiling' என்று கூறியிருக்கிறார். (Robert Fisk, The Independent, AN 27/12/2004).

அக்டோபர் 16 அன்று ஈராக்கின் போராளிகள் ஐந்து அமேரிக்க வீரர்களை வெடிகுண்டு தாக்கிக் கொன்றார்கள். அதற்கு பழி வாங்கும் முகமாக, அமேரிக்க படைகள் விமானத்தாக்குதல் நடத்தியது. போராளிகள் என்ன கூட்டம் கூட்டமாக நகரத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்களா, நினைத்த மாத்திரத்தில் அவர்கள் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிந்து கொல்வதற்கு. விமானத்தாக்குதல்களில் அதிகம் பாதிக்க்பபடுவது அப்பாவி மக்கள்தான் என்று புரிந்துக் கொள்வதற்கு சாதாரண அறிவு போதும், ஆனால் அமேரிக்காவின் முற்றுகையாளர்களுக்கு அத்தனை பயம் போராளிகளை நேரில் சென்று தேடுவதற்கு. அமேரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இறந்தவர்கள் மொத்தம் 70 பேர், அவர்கள் அனைவரும் போராளிகள் என்று அமேரிக்க அரசாங்கம் அறிவித்தது. இது மற்றுமோர் பொய். இதுவரை அமேரிக்க விமானப்படைத் தாக்குதலில் இறந்தவர்களில் 70 சதவிகிதம் அப்பாவி மக்களே!

இறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் (அமேரிக்காவை பொறுத்தவரை அவர்கல் போராளிகள்) நான்கு வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பிள்ளைகளில் மூன்று பேர். ஆறு வயது முஹம்மது சாலிஹ் அலி முகம் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு மற்ற உடல் பகுதிகளெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடக்கம் செய்யப்பட்ட குழந்தை. நான்கு வயது சாத் அஹமது ஃபவாத் மற்றும் அவனது மூத்த சகோதரி எட்டு வயதான ஹைஃபா. இவர்கள்தான் போரளிகளா? (Haifa Zangana, The Guardian, AN Nov 20, 2005. (Haifa Zangana is an Iraqi born novelist and former prisoner of Saddam Hussain) இவர்களைத்தான் பொதுமக்கள் கிடையாது என்று அறிக்கை விடுகிறது அமேரிக்கப் படைகள், ஜனநாயகத்தின் காவலர்கள்!

என்ன அருமையான அமேரிக்க சுதந்திர வாழ்க்கை! இதைப் பார்த்துதான் முஸ்லீம்களுக்கு பொறாமையாம்! அதனால்தான் அவர்கள் 9/11 தாக்குதல் நடத்தினார்களாம்! இந்த அமேரிக்காவையும் அது செய்வதையும் துதி பாடும் அடிமைக் கூட்டங்கள் அங்கங்கு முஸ்லீம்களுக்கு அறிவுரைகள் வேறு சொல்லி வருகிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த சுதந்திரக் காவலர்கள் உலகிற்கு சுதந்திரத்தைக் கற்றுத்தரவுள்ளார்கள்.

ஏற்கனவே அனுபவித்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து எப்போது தப்பிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த ஈராக்கியர்களுக்கு அமேரிக்கா கற்றுக் கொடுத்த தீவிரவாதக் கலாச்சாரம் அமேரிக்க சாதித்த மிகப்பெரும் வெற்றியாகும். சதாம் என்ன காரணம் சொல்லி தனது மக்களை கொடுமைப் படுத்தினானோ அதே காரணங்களைச் சொல்லித்தான் அமேரிக்கா அப்பாவி ஈராக்கியர்களை ஒழித்துக் கட்டுகிறது. சதாம் செய்ததை அமேரிக்கா தட்டிக் கேட்ட போது பெரும்பாலோருக்கு அமேரிக்காவின் சுதந்திரக் கருத்துக்கள் மீது அபரிதமான காதல். இப்போது எங்கே போனார்கள் அந்த அடிமைக் கூட்டங்கள். ஈராக்கியர்கள் சதாமிடம் அனுபவித்ததைவிட அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். முடிவு என்ன என்று தெரியாமல் ஈராக் சம்பந்தப்பட்ட எல்லோரும் குழப்பிப் போய் உள்ளனர்.

அமேரிக்கா அரசாங்கம் ஒரு அதிகாலை திடீரென தனது படைகளை விலக்கிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மூச்சுவிடக் கூட முடியாத சூழல் என்று வரும்போது தலை தப்பித்தால் போதும், ஈராக்கிற்கு என்ன நிலை ஏற்பட்டால் எனக்கென்ன என்று ஒரு நாள் ஓடத்தான் போகிறது. ஐ.நாவும் தனது நிலை என்ன என்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. அப்படியே ஐ.நா ஏதாவது செய்வதென்றாலும் அதற்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் செய்வதற்கு ஆசிய நாடுகளைத்தான் நம்பியாக வேண்டும். முஸ்லீம் நாடுகள் கூட ஈராக்கில் கால் வைக்க தயங்கின்றன.

இதுதான் உலகை வழிகாட்டி அழைத்துச் செல்லும் சூப்பர் பவர் அமேரிக்காவின் கேடு கெட்ட நிலை. இதற்கு பின்னால் ஒரு கூட்டம் டாலருக்கு அடிமைப்பட்டு, அதனுடைய ராணுவத்தின் வீரதீர பராக்கிரமங்களுக்கு பயந்து தலையாட்டி பொம்மைகளாக பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டதில் இந்தியாவையும் எப்படிப்பட்டாவது சேர்த்துவிட வேண்டும் அமேரிக்காவும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

No comments: