பழிக்கு பழி வாங்குவதாக சொல்லி டெல்லியில் கடந்த சனியன்று (13 செப் 2008) 30 அப்பாவிகளை மதச்சாயம் பூசிய சில மிருகங்கள் வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தது - அடிப்படை மனித நேயத்திற்கு முரனானது. வன்மையாக கண்டிக்கப்படவேண்டியது.
கொலைகாரர்களும்-கயவர்களும் ஹிந்து-முஸ்லிம் சாயம் பூசிக்கொண்டு கோழைத்தனமாக அப்பாவி பொதுமக்களை கொல்வதை உடனடியாக தடுக்கவேண்டும். அரசு மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர் பொதுமக்கள்.
சுதந்திரமடைந்ததிலிருந்து மும்பை, மீரட், மாலியானா, கோயம்புத்தூர், குஜராத், ஒரிஸ்ஸா என்று ஒவ்வொரு இடத்திலும் நடந்த படுகொலைகளிலிருந்து கலவரம் உருவாக அடிப்படையான காரணங்கள் என்னவென்று தெரிந்தும் - அதை களைய மறுத்த புறக்கணித்ததுதான் தேசமெங்கும் குண்டுகளாய் வெடித்து பரவுகிறது.
அப்பாவிகளைக் கொல்லும் மனித நேயமற்ற குரூரமான குண்டு வெடிப்புகள்-திட்டமிட்ட கலவரங்கள் இவற்றின் அடிவேரை ஆராய்ந்து குற்றவாளிகளைக் கண்டு பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் பொது மக்களின் வரிப்பணத்தில், அமல் செய்யப்படாத வெற்று அறிக்கைகளைத்தான் தயாரித்து போட்டன.
தீவிரவாதத்தை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டு ஒரு சாரருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது - தீவிரவாதத்தையே அதிகரிக்க செய்தது.
அரசு மத தீவிரவாதத்தை ஒழிக்கும் என்று இனிமேலும் நாம் நம்பிக் கொண்டிருக்கலாமா?
’எல்லை தாண்டிய தீவிரவாதம்’ என்ற கூப்பாடினாலோ அல்லது ’இஸ்லாமிய பயங்கரவாதம் ’ என்ற குற்றச்சாட்டினாலோ அழியாது மதவெறி..
‘பதிலடி’ என்ற சப்பைக்கட்டுடன் அரங்கேற்றப்படும் மனிதப்படுகொலைகளை கண்டு ’ஐயோ பாவம்’ என்று ’உச்சு’கொட்டிவிட்டால் பறிக்கப்பட்ட மனித உயிர்கள் திரும்ப வராது..
குற்றவாளிகள் இரும்புகரம் கொண்டு தண்டிக்கப்படவேண்டும்- அதற்கேற்ற சட்டம் வேண்டும் என்ற அரசியல் கலந்த அலங்கார முழக்கங்களோ சடங்குக்காக நடத்தப்படும் கண்டனப் பேரணிகளோ எதையும் சாதிக்காது..
அப்படியென்றால், மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளுக்கு-அட்டூழியங்களுக்கு முடிவே இல்லையா?
மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தால் - மதவெறி ஒடுக்கப்படலாம், மனித உயிர்கள் காக்கப்படலாம்.
காவ்ல துறையும் நீதித்துறையும் - சாதி-மத சார்பின்றி, அரசியல் வாதிகளின் இடையூறின்றி இனியாவது செயல்படவேண்டும்.
உளவுத்துறை- காவல் துறை இவைகளின் தொழில் நுட்பம் மற்றும் ஆயுத நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். எந்த இடத்திலாவது தவறு நடந்தால் அவர்களைத்தான் குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டும்.
காவல் துறை - பொது மக்களுக்கு நன்மை செய்து - நம்பிக்கை தரும் நன்பனாக மாறவேண்டும், பாரபடசமில்லாத அவர்களின் செயற்பாடுகளால் பொதுமக்களை குறிப்பாக ‘குற்றப்பரம்பரையாக’ சுட்டப்பட்ட ச்முதாய மக்களின் நம்பிக்கையை பெறவேண்டும்.
தேசம், தேசியம் என்ற போலி வார்த்தைகள், வதந்திகள், மற்றும் வரலாறு திருத்தங்கள், மூலம் மக்களை கூறுபோடும் மதவெறி அமைப்புகள் தயவு தாட்சன்யமின்றி நசுக்கப்படவேண்டும்.
மத்திய-மாநில அரசுகளின் நீதி மற்றும் காவல் துறையினர் தங்களின் கடமைகளை பாரபடசமின்றி செய்தால் தீவிரவாதிகள் அந்தந்த சமுதாயத்தை சார்ந்தவர்களாலேயே புறக்கணிகப்பட்டு, மனித நேயத்திற்கு புறம்பான செயல்களை கைவிட்டு இத்தகைய குரூரமான செய்லகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க் வாய்ப்புண்டு.
மத்திய-மாநில அரசுகள் இத்தனை ஆண்டுகளாக செய்யத் தவறியதை இப்பொழுதிலிருந்து கடைப்பிடித்தேயாக வேண்டும், இல்லையென்றால், தீவிரவாத செயல்களும், உயிரிழப்புகளும், கதைக்கு உதவாத வெற்று ’கமிஷன்களும்’ ‘கண்டன பேரணிகளும்’ முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கும் - மனித உயிர்களற்ற பாலைவனமாய் இந்தியா மாறும் வரை...
1 comment:
"மதவெறி அழிப்போம்..மனிதநேயம் காப்போம்."
Post a Comment