அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 2, 2009

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 1)


"(ஆங்கிலேயரின் வருகைக்கு முந்தைய) மத்தியக் கால இந்திய வரலாறு, இந்து குடிமக்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள் நிறைந்ததாக இருந்தது; இஸ்லாமிய ஆட்சியில் இந்துக்கள் பெரும் அவமதிப்பிற்கு உள்ளானார்கள். (இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில்) சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்வில் பொதுவான அம்சங்கள் எதுவுமே இல்லை." - இத்தகையப் பொய்களும் புனைந்துரைகளும் ஆங்கிலேயர்களால் இந்திய வரலாற்றுப் பாட நூற்களில் திட்டமிட்டு வலிந்து திணிக்கப் பட்டன. - பேராசிரியர் பி.என். பாண்டே பாராளுமன்ற மேல்சபையில் 29 ஜூலை 1977-ல் ஆற்றிய உரையிலிருந்து...

பேராசிரியர் டாக்டர் பி.என்.பாண்டே தேச விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்; 1983-லிருந்து 1988 வரை ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநர் பதவி வகித்தவர்; பாராளுமன்ற மேல்சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணி புரிந்தவர்; சிறந்த வரலாற்று ஆய்வாளர்; ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமாக சுமார் 45 புத்தகங்கள் எழுதியிருப்பவர்.

1927-28-ல் பேரா. பாண்டே, அலகாபாத்தில் திப்பு சுல்தான் பற்றி சில ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். ஒருநாள், ஆங்கிலோ பெங்காலி கல்லூரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் அக்"கல்லூரியின் வரலாற்றுச் சங்கத்தை துவக்கி வைக்க வேண்டும்" என்ற கோரிக்கையோடு அவரைச் சந்திக்க வந்திருந்தனர். கல்லுரியிலிருந்து நேராக வந்திருந்த அவர்களின் கைகளில் அவர்களின் வரலாற்றுப் பாட புத்தகங்கள் சில இருந்தன.

அந்தப் புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்டிய பாண்டேவின் கண்கள் ஒரு பக்கத்தில் நிலைகுத்தி நின்றன. 'திப்பு முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்' என்ற அந்த வரிகள், திப்புவைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த திரு. பாண்டேவுக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது.

அந்தப் புத்தகத்தை எழுதியவர் கல்கத்தா பல்கலைக் கழக சமஸ்கிருதப் பிரிவின் தலைவரான டாக்டர் ஹரி பிரசாத் சாஸ்திரி என்பவர். திரு. பாண்டே உடனே டாக்டர் சாஸ்திரியைத் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரத்தைத் தரும்படி கோரினார். பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பிய பிறகு, அது மைசூர் கெசட்டில் இருப்பதாக அவர் பதில் எழுதினார். மைசூர் கெசட்டின் பிரதி அலகாபாத்திலோ கல்கத்தா இம்பீரியல் நூலகத்திலோ இல்லாததால் திரு. பாண்டே மைசூர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு டாக்டர் சாஸ்திரியின் கூற்றை உறுதிப் படுத்தும்படி கேட்டார். துணை வேந்தரின் சார்பில், அச்சமயம் மைசூர் கெசட்டின் புதிய பதிப்பைத் தொகுத்து வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரிகந்தையா திரு. பாண்டேவுக்கு பதில் எழுதினார். '3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை. மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை', என்று தெளிவு படுத்தியது அவரது பதில்!

அக்காலத்தில், டாக்டர் சாஸ்திரியின் இந்தப் புத்தகம் வங்காளம், அஸ்ஸாம், பீஹார், ஒரிஸ்ஸா, உ.பி, ம.பி, மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வரலாற்று பாடப் புத்தகமாக அங்கீகரிக்கப்பட்டு கல்லூரி பாடங்களில் இணைக்கப்பட்டிருந்தது. திரு. பாண்டே கல்கத்தா பல்கலைக் கழக துணைவேந்தருடன் தொடர்பு கொண்டு, அவரிடமிருந்த ஆதாரங்கள் அனைத்தையும் தந்து, அந்தத் தவறான தகவலைப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கிவிடக் கோரினார். அவற்றை ஆய்ந்து உண்மையை அறிந்த துணை வேந்தர் அந்தப் புத்தகத்தையே பாடப் புத்தங்கள் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டதாக பதில் எழுதினார்.

திரு. பாண்டே அவர்கள் அன்று இந்த மகத்தான செயலைச் செய்திருக்கவில்லை எனில், ஒருவேளை இன்று "இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம்" என்ற இஸ்லாமிய எதிரிகளின் ஆயிரம் டன் பொய்யினை இந்தியாவில் நிறுவுவதற்கான முக்கிய ஆதாரமாக சாகாக்களில் இது எடுத்தாளப்பட்டிருக்கும்.

சென்ற மாதம் (மார்ச் 2008) சென்னையில் இந்துத்துவ அமைப்புகளின் ஆதரவோடு முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் பற்றிய ஓவியக்கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில் ஔரங்கசீப்பின் உத்தரவின்படி இந்துக் கோவில்களை இடித்துப் பள்ளிவாசல்கள் கட்டப்படுவது போன்ற ஓவியங்கள் வரைந்து வைத்திருந்தனர். மதத் துவேஷத்தைப் பரப்பும் இக்கண்காட்சிக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் உடனே அது மூடப்பட்டது.

இந்துக்களின் விரோதி என்றே இந்திய வரலாற்றுப் பாட நூல்களில் சித்தரிக்கப் பட்டிருப்பவர் ஔரங்கசீப். இவர் மீது சுமத்தப்படும் பிரபலமான குற்றச்சாட்டுகளுள் ஒன்று, இவர் காசி விஸ்வநாதர் கோவிலை இடித்தார் என்பதாகும். இக்குற்றச்சாட்டையும் பேராசிரியர் பாண்டே ஆதாரங்களுடன் மறுக்கிறார்.

ஔரங்கசீப்பின் படை வங்காளத்தை நோக்கிச் செல்லும் வழியில் வாரணாசி வந்தடைந்தது. அவரது படையில் இடம் பெற்றிருந்த இந்து மன்னர்கள், "வாரணாசியில் ஒருநாள் தங்கிச் சென்றால் தங்கள் ராணிகள் கங்கையில் முழுகி விஸ்வநாதரைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என ஔரங்கசீப்பிடம் விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

ராணிகள் கங்கை நதியில் முழுகி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்று வழிபட்டுத் திரும்பினர். ஆனால் அவர்களுடன் சென்ற கட்ச் மகாராணி மட்டும் திரும்பவில்லை. தகவல் அறிந்து கோபமடைந்த ஔரங்கசீப் ராணியைத் தேடிக் கண்டுபிடிக்க தனது அதிகாரிகளை அனுப்பி வைத்தார். இறுதியில் அவர்கள் விஸ்வநாதர் கோவில் சுவற்றில் இருந்த ஒரு சிலை நகரும் வகையில் அமைக்கப் பட்டிருந்ததைக் கண்டனர். அச்சிலையை நகர்த்தியபோது அதன் கீழே பாதாள அறை ஒன்றிற்குச் செல்லும் படிக்கட்டுகள் இருந்தன. கட்ச் ராணி அந்த அறையில்தான் மானபங்கம் செய்யப்பட்டு அழுது கொண்டிருந்தார். அந்த அறை விஸ்வநாதர் சிலை இருந்த இடத்திற்கு நேர் கீழே இருந்தது.

அதிர்ச்சி அடைந்த இந்து மன்னர்கள் இக்குற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் எனக் கோரினர். கற்பக்கிருகத்தின் நேர் கீழே இது நடந்ததால் கோவிலின் புனிதம் கெட்டு விட்டதாகவும் கருதப்பட்டது. அதனால் விஸ்வநாதர் சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படவும், அந்தக் கோவில் இடிக்கப்படவும், குற்றவாளியான கோவில் பூசாரி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் ஔரங்கசீப் உத்தரவு பிறப்பித்தார்.

டாக்டர் பட்டாபி சீதாராமையா, டாக்டர் பி.எல்.குப்தா ஆகியோர் இச்சம்பவத்தை ஆதாரங்களுடன் தங்கள் புத்தகங்களில் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில், கோவில் இடிக்கப்படக் காரணமான சம்பவங்கள் மறைக்கப்பட்டு, அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்த ஔரங்கசீப் குற்றவாளியாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்.

இந்திய வரலாறு எந்த அளவிற்கு பாரபட்சமான முறையில் திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இச்சம்பவங்கள் மிகச்சிறிய உதாரணங்கள்.

ஆக்கம்: இப்னு பஷீர்

No comments: