Friday, February 6, 2009
நீதி மறுக்கப்பட்ட தமிழக முஸ்லிம்கள்
மிழகச் சிறைகளில் வாடுகிற தண்டனைக் கைதிகளில் எட்டாண்டுகாலம் சிறையில், முழுமையாய் தண்டனை கழித்தவர்களைப் 'பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு தொடக்கவிழா'வை ஒட்டி (செப். 15,2008) விடுதலை செய்ய இருப்பதையறிந்து மகிழ்ச்சியில் திளைத்தவர்கள் கோவையை சார்ந்த முஸ்லிம் தாய்மார்கள்.
கடந்த 10 ஆண்டு காலமாக, தலைவனை இழந்து தவித்த குடும்பம், மகனை இழந்த பெற்றோர், தந்தையின் முகம் மறந்த குழந்தைகள், என அனைத்து விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளான இஸ்லாமியக் குடும்பங்கள் அல்லவா? அதனால் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் இனிப்பான செய்தியாக நம்பிக்கை கொள்ள வைத்தது.
1998இல் கருனாநிதி ஆட்சியின்போது கோயம்புத்தூரில், காவித்துறையின் எடுபிடியாக செயல்பட்ட காவல்துறை, அதன் கட்டுக்கடங்கா அத்துமீறல் மூலம் முஸ்லிம்களின் மனித உரிமைகளை நசுக்கியது. மதவெறி அமைப்புகளின் துணையோடு கோவை முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதரமே அழிக்கப்பட்டது. மனிதர்கள் உயிரோடு தீ வைத்துக் கொளுழுத்தப்பட்டனர். பல சகோதரிகள் மாணப் பங்கப்படுத்தப்பட்டனர். அவர்களின் வனிக நிறுவனங்களும் குடியிருப்புகளும் சூறையாடப்பட்டன. முஸ்லிம்களுக்கெதிரான அட்டூழியங்கள் எல்லை மீறி நடந்தபோது அரசின் சட்டம் கைக்கட்டி- கைக் கொட்டி நின்றது; காவல்துறை காவிகளோடு கைகோர்த்துக் கொண்டு கோவை முஸ்லிம்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது.
பாதிக்கப்ப்ட்டவர்கள் நியாயம் கேட்ட போது - காதுகளை பொத்திக்கொண்டது அரசு நிர்வாகம். வன்முறையாட்டம் ஆடிய, சட்டத்தின் மூலம் தண்டனை பெற வேண்டிய கொலைகாரக் காவிகள் வெகு சுதந்திரமாக வெற்றிக் களிப்போடு நடமாடினர். ஒரே நம்பிக்கையான நீதித்துறையாலும் புறக்கணிக்கப்படுகிறோமே என்று உணர்ச்சிவசப்பட்ட இளைஞர்கள் சிலர் நீதி கேட்டு 'வெடித்த' குண்டுகள் - 'பயங்கரவாத'மாக திரிக்கப்பட்டது.. பட்டாசு வெடித்தால்கூட முஸ்லிம்கள் மீது பொய்வழக்குப் போடக் காத்திருக்கும் காவல் துறை - வெடி குண்டு என்றால் விடுமா?. குற்றவாளிகளைத் தேடுகிறோம் என்று நள்ளிரவு நேரங்களில் கோவை முஸ்லிம்களின் வீட்டுக்கதவுகளை உடைத்துக்கொண்டு தேடியது, படுக்கை அறையிலிருந்து கக்கூஸ் வரை மூக்கை நுழைத்துப் பார்த்தது. இஸ்லாமிய வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள் என்று அனைத்து இடங்களிலும் பூதக்கண்ணாடி வைத்துக்கொண்டு தேடி முஸ்லிம்களை 'ஒசாமா பின் லேடனாக ' முத்திரை குத்தியது.
தீவிரவாதிகளைத் தேடுவதாக 'கோஷா' அணிந்த பெண்களையும் முதியவர்களையும் மிரட்டியது, முஸ்லிம்கள் வீட்டில் காய்-கறி நறுக்க வைத்திருக்கும் கத்திகள், ஷேவிங் செய்ய வைத்திருக்கும் பிளேடுகள் போன்றவைகளைக்கூட கைப்பற்றிப் 'பேரழிவு ஆயுதங்களாகப் ' பட்டியலிட்டு சமூகங்களிடையே பதட்டத்தை விளைவித்தது.
கோவையில் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்த நடுநிலைவாதிகளின் குரல்கள் சங்பரிவாரால் நசுக்கப்பட்டன. நியாயம் கேட்ட இந்துச் சகோதரர்களைப் 'போலி சமயசார்பின்மைவாதிகள்' என்றும் 'இந்து மத விரோதி' என்றும் முத்திரை குத்தினர். அதனால் அப்பொழுது முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்ப முஸ்லிம்கள பயந்தது போல - இந்து நடுநிலைமைவாதிகளும் பயந்தனர்.
விசாரனை என்ற பெயரில் வீட்டில் படுத்துறங்கிக் கொண்டிருந்தவர்களை, கடைக்கு சாமான் வாங்கச் சென்றவர்களை, தெருவோரம் தூங்கிக்கொண்டிருந்த்வர்களை - பதின்ம வயதினர் - இளையர்-முதியர் என்ற பேதம் பார்க்காது அழைத்து சென்றது காவல்துறை.
பத்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. குற்றஞ்சாட்டப்பட்டட் பதின்மவயதினர் - இளைஞர்களாகி, இளைஞர்கள் முதியோராகி, முதியோர் 'மவுத்தா'க்கள் ஆகி விட்டார்கள்.
தமிழகச் சிறைகளில், கோவை வெடிகுண்டு வழக்குத் தீர்ப்பை ஒட்டி விடுதலைபெற்றுச் சென்றவர்களை தவிர, சுமார் 170 முஸ்லிம்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் பத்தாண்டுகளாகியும் பிணையில் விடுதலை செய்யப்பட்டதில்லை. தண்டிக்கப்பட்டவர்களுக்கு "பரோல்", "எஸ்கார்ட்" இல்லாத பரோல் போன்ற சட்டம் அனுமதித்த சலுகைகளும் முஸ்லிம்களுக்கு மட்டும் வஞ்சகமாக மறுக்கப்பட்டன. இவற்றை நினைத்து இன்றும் முஸ்லிம்களின் நெஞ்சில் கசிகின்ற இரத்தம் நிற்கவில்லை.
தாமதமாக வழங்கப்படும் நீதியை, மறுக்கப்பட்ட நீதியோடு ஒப்பிடுவார்கள்.(Justice Delayed is Justice Denied) அதனால் சிறுபான்மையினரின் காவலராகக் கூறிக்கொள்ளும் முதல்வர் கருணாநிதியிடமிருந்து காலந்தாழ்ந்தாலும் நிச்சயம் நியாயம் கிடைக்கும் என்று நிர்க்கதியாய் நின்ற குடும்பங்களின் நம்பிக்கையைத் தூள் தூளாக்கி விட்டது தமிழக அரசு.
ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் மட்டும் எத்தனை ஆண்டுகாலம் சிறையில் கழிக்க வேண்டும் என்று சரியான விளக்கம் ஏதுமில்லை. முஸ்லிம் கைதிகள் மட்டும் 'ஆயுள் முழுவதும்' சிறையில் வாடவேண்டும்; அவர்களின் குடும்பத்தினர் எல்லோரும் காலம் முழுவதும் கவலையோடு வாட வேண்டும் என்று உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது அரசின் முடிவு. அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கோவை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 296 ஆயுள்தணடனைக் கைதிகளில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை.
ஏன் இந்த பாகுபாடு?
கலைஞர் ஆட்சியில் சிறைச்சாலைகளில் முஸ்லிம்கள் எவரும் வாடவில்லை என்று பொய்த் தோற்றம் காட்டுவதற்கு அரங்கேற்றப்பட்ட நாடகமா இது? அல்லது வருகிற தேர்தலில் தி.மு.க தனிப்பெரும்பான்மையோடு வென்றால் எஞ்சியுள்ள 'முஸ்லிம் சிறைக்கைதிகளை' விடுதலை செய்வோம் என்று பிரச்சாரம் செய்வதற்காகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பலி ஆடுகளா முஸ்லிம் கைதிகள்?
கோவை தொடர் குண்டு வெடிப்பிற்குக் காரணம் என்று, "அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொடும் மதக் கலவரங்களில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுதான்" என்று அரசே சொன்னது. ஆனால் குண்டு வெடிப்பிற்கு அடிப்படைக் காரணமான மதக்கலவரக் குற்றத்தில் ஈடுபட்ட காவிகளில் காவல்துறைக் கறுப்பாடுகளில் பலர் கைதாகவே இல்லை. கைதான மிகச் சிலக் காவிகளில் ஒருவர்கூட இன்று சிறையில் இல்லை. எல்லோரும் அப்போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.
முஸ்லிம்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி?
கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளில்,சுமார் 600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டபோதும் ஒருவர் கூட கோவை தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்ட முஸ்லிம்கள் இல்லை. இது குறித்து, பொது மன்னிப்பில் விடுதலையாக தகுதிகளை/வரையறைகளைக் கொண்டும் விடுதலை செய்யப் படாத ஜாஹிர் என்கிற கைதி தகவலறியும் சட்டத்தின் மூலம் காரணம் வினவியபோது, "அவர் புரிந்த குற்றத்தின் தன்மை கருதி 15-09-2007 அன்று வழங்கப்பட்ட பொது மன்னிப்பின்போது விடுதலை செய்யப்பட வில்லை" எனக் கூடுதல் சிறைத் துறை இயக்குனர் பதிலளித்தார். (மு.மு.எண்.51493/பி.எஸ்.1/2007-3 தேதி 26-12-2007). கலைஞர் அரசு செய்த அநீதிக்கு இந்த ஆண்டில் பரிகாரம் தேடிக்கொள்ள இருந்த வாய்ப்பையும் அரசு இழந்து, முஸ்லிகளுக்கு 'அல்வா' கொடுத்து அநீதி இழைத்து விட்டது.
தொப்பியோ முக்காடோ போட்டுக்கொண்டு 'நோன்பு கஞ்சி' குடிப்பதையும், யாருடைய பேச்சையும்-எழுத்தையும் வைத்தோ சிறுபான்மையினரின் நண்பராகக் காட்டி வேஷம் போட்டதை முஸ்லிம்கள் நம்பிய காலம் மலையேறிவிட்டது.
அது மட்டுமல்ல, முஸ்லிம்களுக்கான இயக்கம் என்ற பெயரில் 'இயங்காமல்'முடங்கிக் கிடக்கும் மற்றும் சகோதர இயக்கங்களை மட்டும் எதிர்த்து இயங்கிக்கொண்டிருக்கும் அமைப்புகளுக்கு எச்சரிக்கை செய்யும் நேரம் வந்து விட்டது.
இட ஒதுக்கீட்டையும், டிசம்பர் ஆறையும் தவிர தமிழக இஸ்லாமியர்களுக்கு வேறு பிரச்சினைகளே இல்லை என்று 'படம்' காட்டுவதை நிறுத்தச் சொல்லி, இஸ்லாமியர்களின் அடிப்படை வாழ்வுரிமை பற்றிய பிரச்சினைகளை முன்னெடுத்து அவற்றை எப்படித் தீர்ப்பது?, அதில் அரசின் பங்கென்ன?, சமுதாயத்தின் பங்கென்ன? என்ற செயல் திட்டத்தை வரையக் கட்டாயப் படுத்தும் காலம் வந்துவிட்டது.
நீண்டகாலமாக விசாரணை முடிக்கப்படாத முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை உடனடியாக முடிக்கவும் விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் உரிமை கோரியும் மறுபரிசீலனைக்குழு நியமிக்கப்படவேண்டிய வழக்குகளில் உடனடியாக அதைச் செய்யவும் வலியுறுத்தி, பல ஆண்டுகளாக - வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் குடும்பங்களை இஸ்லாமிய அமைப்புகள் காப்பாற்ற வேண்டும்.
அதற்கு முன்பாக அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்? எந்த வரையறையைக் கொண்டு கைதிகள் விடுதலையாகும் தகுதி நிர்ணயிக்கப் பட்டது? எட்டு ஆண்டுகள் எனக் கணக் கிட்டால் சுமார் 70 முஸ்லிம் கைதிகள் பொது மன்னிப்பிற்குத் தகுதியாக இருக்கும்போது, ஏன் ஒரு முஸ்லிம்கூட விடுதலை செய்யப்படவில்லை? என்ற நியாயமான வினாக்களை எழுப்ப வேண்டிய உரிமை சமுதாய அமைப்புகளுக்கும் - விடையளிக்க வேண்டிய கடமை ஆளும் அதிகார வர்க்கத்துக்கும் உள்ளது.
வினாக்கள் எழும்புமா? விடைகள் வெளிவருமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment