சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்மதச் சார்பற்ற நாடாக்கியதால் பாரதத்தின் அடையாளம் மாற்றப்பட்டுவிட்டதாம்!
மும்பையில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் புதிய அவதாரம்?
மும்பை, ஜன. 29- பல்வேறு இந்து அமைப்புகள் பல பெயர்களில் இயங்கி வருகின்றன.
இவற்றின் கூட்டமைப்புக்கு தர்ம ரக்க்ஷ மஞ்ச் (தருமப் பாதுகாப்புக் குழு) என்று பெயர். இதன் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மும்பையில் நடந்துள்ளது.
இதில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியான காஞ்சிபுரம் ஜெயேந்திர சரசுவதி உள்பட பல இந்து மதச் சாமியார்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்புகளில் இதுவும் ஒன்று.ஆர்.எஸ்.எஸ். பதாகையின் கீழ் அதன் சின்னம் அடங்கிய பெயர்ப் பதாகையை வெளிப்படையாகக் கட்டி, கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் அசோக்சிங்கால், தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி போன்றோர் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டு நாள்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின் பின்னணியில் இருந்து இதனை இயக்குபவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதன்தாஸ் தேவி ஆவார்.
இதில் கலந்துகொண்டு வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில், இந்தியா புனிதமான பாரம்பரியம் மிக்க நாடு என்றும், ஆன்மிகத்தில் சிறந்த நாடு என்றும், அந்த நாட்டை மதச்சார்பற்ற நாடாக ஆக்கியதன் விளைவாக அந்த அடையாளம் அழிந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படிக்கான மதச் சார்பின்மைக்கு எதிரான கருத்துகளை இவர் தெரிவித்திருக்கிறார்.
அரசியல் கோமாளியான சுப்பிரமணியசாமி இக்கூட்டத்தில் அறிக்கை ஒன்றைப் படித்து அளித்துள்ளார். இந்து மதக் கொள்கை அறிக்கை என்று கூறி, இந்துக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி, இந்து மறுமலர்ச்சிக்கு என்னென்ன செய்யப்படவேண்டும் என்றும் பட்டியலிட்டுள்ளார்.
முக்கியமாக, இந்தியாவின் வரலாறு திருத்தி (திரித்து?) எழுதப்படவேண்டும் என்றும், கல்வி நிலையங்களின் பாடப் புத்தகங்கள் வேறு வகையில் மாற்றி எழுதப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தீவிரவாதிகளிடம் சகிப்புத் தன்மை காட்டவேண்டியதில்லை, அவர்களுடன் பேச்சுவார்த்தை தேவையில்லை, அவர்களைத் திருப்பித் தாக்கி அவர்களின் அரசியல் நோக்கங்களை முறியடிக்கவேண்டும் என்றெல்லாம் வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகள் தெரிவித்துள்ளார்!
நாட்டின் ஆட்சி மொழியாக மீண்டும் சமக்கிருத மொழியை அரியாசனத்தில் அமர்த்தவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை இந்து நாடு (இந்துஸ்தான்) என்றே குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்திற்கு முன்னதாகச் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தயானந்த மகராஜ் எனும் சாமியார், நாட்டில் உள்ள 13 இசுலாமிய அமைப்புகளுக்குக் கடிதம் எழுதி, தீவிரவாதத்திற்கு எதிராக மதக் கட்டளை (ஃபட்வா) பிறப்பிக்கக் கோரப்படும் என்று தெரிவித்தார்.
தீவிரவாதச் செயல்களைக் கண்டனம் செய்து இசுலாமிய அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளனவே எனக் கேட்டதற்கு, அது போதாது, ஃபட்வா கொடுக்கவேண்டும் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார்.
வியாழக்கிழமையும் நடக்க விருக்கும் கூட்டத்தில் 11 அம் சத் திட்டங்கள்பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படுமாம். இந்துப் பயங்கரவாதம் என்பது கிடையாது என்றும், அச்சொல் இந்துக்களைக் கேவலப்படுத்துகிறது என்றும், இந்துக்களுக்குப் பொருந்தாத சொல் என்றும் விசித்திரமான விளக்கம் கூறியுள்ளனர்.
தற்போதைய ஆட்சியில் இருக்கும் கட்சிகள் அகற்றப் படவேண்டுமாம்!
ஆனால், இந்த அமைப்பு எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை என்று கூறிக் கொண்டாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவமான பா.ஜ. கட்சியின் ஆதரவு அமைப்பு என்பது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம் தான்!
மீண்டும் இந்து மதத்தையும், செத்துப்போன சமக்கிருத மொழியையும் ஆட்சியில் அமர்த்திடத் துடிக்கும் இவர்களிடம் இந்திய மக்கள் எச் சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment