அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

கஸ்ஸா - உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள


கருகும் கஸ்ஸாவின் நிர்கதி நிலைவலிமையானவர்கள் வலிமையற்ற மக்களை ஆயுதம் மூலம் அடக்கி அடிமைகளாக வைத்திருந்த ஒரு காலம் இருந்தது. வரலாற்றில், 'இருண்ட காலம்', 'காட்டுமிராண்டி காலம்' என்றெல்லாம் சொல்லப் பட்ட அக்காலகட்டங்களைக் கதைகளாகவும் வரலாற்றுப் பாடங்களாகவும் படித்திருக்கிறோம். மனித உரிமைகளையும் தனிமனிதச் சுதந்திரத்தையும் பெற்றுத் தரத்தக்க நாகரிகத்தின் உச்சியில் உள்ளதாக மனிதன் பெருமைப்படும் இக்காலகட்டத்திலும் காட்டுமிராண்டி காலகட்டத்தைக் கண்முன் காட்டித்தரும் நிகழ்கால உதாரணமாக ஃபலஸ்தீன் மீதான சர்வதேச சட்டங்களை மீறிய கட்டுப்பாடற்ற இஸ்ரேலின் அட்டூழியம் தொடர்ந்து நடந்து வருகிறது.

கஸ்ஸா - உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்கள்!

சுதந்திரத்திற்காக அடக்கி ஒடுக்கப்படும் மக்கள், ஆக்ரமிப்பாளனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவது மனித இயல்பு. அதுவும் ஒரு நாடே ஆக்ரமிக்கப்படும் பொழுது....?. நாட்டுக்காக, சொந்த நிலத்திற்காகப் போராடும் மக்களை, "தேசப்பற்றாளர்கள்" எனச் சிறப்பிக்க வேண்டியது மனிதப் பண்பாடாகும். ஆனால், இழந்து விட்ட தங்களின் சொந்த மண்ணுக்காகவும் இருக்கும் நிலத்தைப் பாதுகாப்பதற்காகவும் போராடும் ஃபலஸ்தீன் மக்களை, "பயங்கரவாதிகள்" என்றும் அவர்களைக் கொன்றொழித்து அவர்களது நாட்டைச் சிறிது சிறிதாகக் கபளீகரம் செய்து வரும் பயங்கராவதத்தின் மறு உருவம் இஸ்ரேலை "அமைதியின் சின்னம்" என்றும் தலைகீழாகப் பார்க்கும் போக்குப் பரவலாக நிலவுகிறது.

இத்தகைய முரண்பாடான நிலைக்கு, ஃபலஸ்தீனின் உண்மை நிலை என்ன? என்பதும் அங்கு நடப்பது என்ன? என்பதும் முழுமையாக வெளி உலகுக்குத் தெரியாததே முக்கியக் காரணமாகும்.

அழுகுரல்களுக்கும் மரண ஓலங்களுக்கும் மத்தியிலேயே காலத்தை ஓட்டும் ஒரு சமுதாயத்தின் அவலநிலையை இப்பொழுதும் இவ்வுலகம் கண்டுகொள்ளவில்லை எனில், எதிர்கால உலக சமுதாயம் அதற்கு மிகப்பெரிய விலையைப் பகரமாகக் கொடுக்க வேண்டி வரும். எனவே ஃபலஸ்தீனின் உண்மை நிலை வெளி உலகுக்குத் திறந்து காண்பிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இஸ்ரேல் ஃபலஸ்தீன் மீது விதித்திருக்கும் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் மீறி தைரியத்துடன் கப்பல் மூலம் கஸ்ஸாவிற்குச் சென்று திரும்பியுள்ள பிரபல பத்திரிக்கையாளர் யுவான் ரிட்லி, தன்னுடைய ஃபலஸ்தீன் பயண அனுபவங்களை அல்-முஜ்தமஃ என்ற அரபிப் பத்திரிகையின் ஆசிரியர் ஷஅபான் அப்துல் ரஹ்மானுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இப்பேட்டியில் அவர் வெளிப்படுத்தும் பல்வேறு விஷயங்கள், கஸ்ஸாவின் உண்மை நிலையினை ஒருவாறு படம்பிடித்துக் காட்டுகிறது.

இனி அவர் பேட்டியிலிருந்து முக்கிய பாகங்கள்:

- பேட்டி: யுவான் ரிட்லி.

* தடையினை மீறி சைப்ரஸிலிருந்து கஸ்ஸாவிற்குக் கப்பல் மூலம் நிவாரணப் பொருட்களுடன் சென்ற 40 ஐரோப்பியர்கள் அடங்கிய முதல் குழுவில் நீங்களும் இருந்தீர்கள் அல்லவா? உங்களது அனுபவம் எப்படி இருந்தது?

நாங்கள் கடலில் இருக்கும்போது இஸ்ரேல் எங்களைத் திரும்பிச் செல்ல இறுதி எச்சரிக்கை விடுத்தது.. நாங்கள் அதனைச் செவியேற்கவில்லை. இஸ்ரேலியப் படையினரால் எங்களது உயிருக்கு ஆபத்து விளையலாம் எனக் கப்பல் கேப்டன் அறிவித்தார். எல்லா எதிர்ப்புகளையும் கடந்து நாங்கள் காஸாக் கடற்கரைக்குச் சென்றடைந்தோம். எங்கள் கைகளில் எவ்விதத் தற்காப்பு ஆயுதமும் இருந்திருக்கவில்லை. எந்நேரமும் அவர்கள் எங்களைத் தாக்கக் கூடிய நிலை இருந்தது. ஆனால், எங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டதால் காரியங்கள் இலகுவானது.

* கஸ்ஸாவில் நீங்கள் பார்த்தது என்ன? நகரத்தைச் சுற்றி வந்தபொழுது

உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்?

அங்கு ஹமாஸிற்கே எல்லாவற்றிலும் முக்கிய ரோல். நல்ல முறையில் அவர்கள் தங்களின் கடமைகளை நிறைவேற்றுகின்றனர். அரபுப் பிரதேசங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் அவர்களுக்கே ஓட்டளிப்பர்.

* எதனால்?

காஸாவில் ஹமாஸ் தலைமை எளிமையான, பண்பான வாழ்வை நடத்துகிறது. பிரதமர் இஸ்மாயில் ஹனியாவிற்கும் காஸாவின் சாதாரணக் குடிமக்களுக்கும் இடையில் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. தினசரி வாழ்விலும் தடைகளை அனுபவிப்பதிலும் அனைவரும் சமம். மக்களுக்கு இடையே ஒரு சாதாரண வீட்டில் ஹனியா வசிக்கிறார். இதனைப் பார்க்கும் எவருக்கும் ஹமாஸ் ஆதரவு தீவிரமடையும். காஸாவில் நான் பார்த்த ஒரே ஆடம்பர வீடு, 'அபூமாஸின்' என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடைய வீடாகும். அது ஹாலிவுட் வீடுகளுக்கு ஒப்பானதாகும். ஹமாஸ் அதனைத் தகர்க்கவில்லை; அதனைப் பாதுகாத்து வருகிறது.

* நீங்கள் எப்பொழுதாவது அபூமாஸினைப் பார்த்திருக்கின்றீர்களா?

ஆம். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு! அவர் ஒரு குழப்பவாதி. ஓரளவுக்கு அவரை ஜாண் மெக்கெய்னோடு ஒப்பிடலாம். எத்தனை வீடுகள் தனக்கு உண்டு என்பது அவருக்கே தெரியாத அளவிற்கு வீடுகள் உள்ளன. ஃபலஸ்தீன் முன்னாள் அதிபர் யாஸிர் அரஃபாத்தையும் நான் பார்த்திருக்கிறேன். ஃபலஸ்தீனியர்களை ஒரு தலைமையின் கீழ் ஒன்று திரட்ட வல்லவர் என்ற வகையில் அவர் வித்தியாசமானவர்.

* ஹமாஸ் கஸ்ஸாவை ஆளத்துவங்கியது முதல் அது ஒரு சிறைச்சாலை எனவும் அது தாலிபானிஸத்தை அங்கு நடைமுறைப் படுத்துகிறது எனவும் மக்களைச் சிறையிலடைத்துக் கொடுமைப் படுத்துவதாகவும் அரபு பிரதேசத்திற்கே ஹமாஸ் ஒரு தலைவலி எனவும் பரப்பப்படும் பிரச்சாரத்தைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

இவையனைத்தும் உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களாகும். காஸாவில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றனவா? என நாங்கள் ஆய்வு செய்தோம். எங்களில் இருவர் காஸா சிறைசாலைகளைப் பார்வையிட்டனர். அனைத்தும் சாதாரண நிலையிலேயே உள்ளன. மஹ்மூத் அப்பாஸின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மேற்கு கரையில் ஹமாஸ் சிறைவாசிகள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு நேர் எதிராக, குடிமக்கள் மற்றும் கைதிகளின் உரிமைகள் காஸாவில் பாதுகாக்கப் படுகின்றன.

* சிறைசாலைகளிலுள்ள கைதிகளுடன் நீங்கள் நேரடியாகப் பேசினீர்களா?

நான் பேசவில்லை. சைப்ரஸிலிருந்து கப்பலில் வந்த ஒரு தலைவர் கைதிகளுடன் உரையாடினார். அவர் ஹமாஸை வெறுக்கக் கூடியவர் என்பது குறிப்பிடத் தக்கது. சிறைச்சாலைகளில் நடைமுறைகள், மிகுந்த மனிதத் தன்மையுடன் இருப்பதாக அவர்தான் எங்களிடம் கூறினார். எந்த வகையான மனித உரிமை மீறல்களையும் அங்கு அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. மனித உரிமை மீறல்களையும் வருந்தத்தக்க சூழலையும் எதிர்பார்த்து காஸா சிறைசாலையைப் பார்வையிடச் சென்ற அவர், "மிகச் சாதாரணமான சூழல் சிறைச்சாலைகளில் நிலவுவதைப் பார்த்து நான் அதிசயித்தேன்!" எனவும் எங்களிடம் கூறினார்.

* பல்வேறு தடைகளால் கடுமையான கஷ்டம் அனுபவிக்கும், அசாதாராண நிலையிலுள்ள கஸ்ஸாவில் பல நாட்கள் வசித்த உங்களுக்குப் பயம் தோன்றவில்லையா?

அதற்கு நேர் எதிரான பயமின்மையே நாங்கள் அங்கு அனுபவித்தோம். மனம் திறந்து ஒன்றைக் கூறட்டுமா? பல உலக நாடுகளையும் சுற்றி வந்தபோது கிடைக்காத பயமின்மையை காஸாவில் நான் அனுபவித்தேன். நள்ளிரவில்கூட எவ்விதச் சிறு உறுத்தலும் இன்றி நகரத்தில் சுற்றி வரமுடியும் என்பதே இதற்கான ஆதாரமாகும்.

* சாதாரண மக்களை நகரங்களில் நீங்கள் பார்த்தீர்களா? அவர்களுடன் கலந்துறவாட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?

ஆம், சாதாரண மக்களுடன் பலமுறை கலந்துறவாட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. அவர்களில் ஹமாஸை எதிர்ப்பவர்களும் உண்டு. மிக வெளிப்படையாக, எவ்வித பயமும் இன்றிச் சுதந்திரமாக அவர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். அரசாங்கத்தோடு எதிர்ப்புள்ளவர்கள், அதனையும் பயமின்றி வெளிப்படுத்தினர். "உங்களுடைய இச்சுதந்திரத்தைக் குறித்து அரபிகளுக்கிடையே நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும்" என நான் அவர்களிடம் கோரினேன். ஹமாஸ் அதிகாரத்துக்கு வந்த பின்னர் காஸாவில் 80 சதவீதக் குற்றங்கள் குறைந்துள்ளன என்பது சார்பற்ற ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. மக்கள் அவர்களின் ரீதியில் பாட்டுப் பாடுகிறார்கள்; நடனமாடுகிறார்கள்; ஹமாஸ் அவற்றைத் தடையவில்லை.

காஸாவில் ஓர் அதிகாரியுடன் ஒரு பார்ட்டியில் நான் கலந்து கொண்டேன். இது போன்ற சடங்குகள் அங்கு ஹமாஸால் தடை செய்யப்பட்டதாகவே நான் நினைத்திருந்தேன். அதனால் எனக்கு வியப்பு ஏற்பட்டது! "லண்டனில் குற்றங்களைக் குறைப்பதற்கு உதவ நீங்கள் பிரிட்டனுக்கு வரவேண்டும்" என நான் அந்த அரசு அதிகாரியிடம் காமடி செய்தேன். பாதுகாப்புக் காரணங்களால் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் வீட்டை விட்டு வெளியே வரத் தடை செய்யப்பட்ட பகுதிகள் இலண்டனில் உண்டு.

* கஸ்ஸாவில் அரசியல்வாதிகள் யாரையாவது சந்தித்தீர்களா?

பிரதமர் இஸ்மாயில் ஹனியாவுடன் உரையாடல் நடத்தினோம். எனக்கும் கப்பலில் வந்த சிலருக்கும் ஃபலஸ்தீனுக்குள் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது. இதுவன்றி வேறு சில அரசியல் தலைவர்களுடனும் நாங்கள் உரையாடல் நடத்தினோம்.

* ஹனியாவுடனான சந்திப்பு அனுபவம் எப்படி இருந்தது?

இஸ்லாமிய உலகில் உண்மையான ஜனநாயகத்தை நடைமுறைப் படுத்தப்பட முடியாமல் முடக்கப் பட்ட இடம் காஸா மட்டுமே என்பது எனது எண்ணம். மக்களை ஒன்று கூட்டவும் அவர்களைத் தலைமை ஏற்று நடத்துவதற்கும் தகுதியுள்ள முழுமையான அரசியல்வாதியாக ஹனியா திகழ்கிறார். முன்பு அரஃபாத்திற்கிருந்த இப்பண்பு, அவருக்குப்பின் வந்த அபூமாஸினுக்கு இல்லை என்பதே எனது புரிதல்.

* உங்களின் அபிப்பிராயத்தில், அபூமாஸினுக்கும் இஸ்மாயில் ஹனிய்யாவிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?

தடைகளை மீறி ஃபலஸ்தீனுக்குச் சென்ற எங்களிடம் ஒரு வார்த்தை நன்றிகூட அபூமாஸின் கூறவில்லை. அதற்கும் மேலாக, எங்களது நடவடிக்கைகளை, "அத்தனை முக்கியத்துவமுடையதல்ல" என நாங்கள் அங்குச் சென்ற மூன்றாம் நாள் அல்-ஜஸீரா தொலைக்காட்சியில் அவர் வெளிப்படையாகக் கூறினார். தடைக்கு எதிராக நாங்கள் நடத்திய பயணம் வெற்றிப் பயணமாக அமைந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை அவர் குறைத்துக் காண்டுவதிலேயே குறியாக இருந்தார். அவருக்கென்ன ... ரமல்லாவில் இருந்து கொண்டே அவருக்கு மில்லியன் கணக்கான யூரோக்கள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.. அதிலிருந்து ஒரு பைசாகூட காஸாவாசிகளுக்கு அவர் கொடுப்பதில்லை.

இஸ்மாயில் ஹனிய்யா, அவரின் உதவியாளர்கள், அவரின் நண்பர்கள் ஆகியோரது மிகச் சாதாரண நிலையிலுள்ள வீடுகளுக்கு நாங்கள் அழைக்கப் பட்டிருந்தோம். மின்சாரம் கிடைப்பது இஸ்ரேலால் தடை செய்யப்பட்டுள்ளதால் இரவு நேரங்களில் நாங்கள் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்திலேயே இருக்க நேரிட்டது. தண்ணீர் இல்லாத காரணத்தினால், இரவு விருந்தை வேண்டாமென்று கூறி மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சில மாம்பழங்களை இரவு உணவாக உட்கொண்டோம். அங்குக் கஷ்டங்கள் அனுபவிக்கும் மக்களுக்குத் தங்களின் பிரதமரும் அதே கஷ்டங்களை அனுபவிக்கின்றார் என்பது நன்றாக தெரியும்.

* மற்ற அரசியல்வாதிகளைக் குறித்து...?

அரசிலுள்ள மற்றச் சில உறுப்பினர்களையும் நாங்கள் நேரில் சந்தித்து உரையாடியிருந்தோம். ஆனால், அவர்களில் சுமார் 30க்கு அதிகமானோர் இஸ்ரேலின் சிறைசாலைகளில் அடைக்கப் பட்டுள்ளவர்கள் ஆவர்.

* ஃபதஹ் தலைவர்களுடன் நீங்கள் சந்திப்புகள் நடத்தவில்லையா?

அபூமாஸின் எங்களைச் சந்திக்க வரவில்லை. அவரைச் சார்ந்த சில உயர்நிலையிலுள்ள தலைவர்களும் அதே நிலைபாட்டையே எடுத்தனர். அதனால் மூன்றாம் நிலையிலுள்ளச் சிலரையே எங்களால் சந்திக்க முடிந்தது.

* அவர்கள் என்ன கூறினர்?

அபூமாஸினோ அல்லது அவரது சார்பாக ஒரு குழுவோ எங்களைச் சந்திக்க ஆர்வம் காட்டாததால் மூன்றாம் நிலைத் தலைவர்களும் அவர்களது முழுவிருப்பமின்றியே எங்களைச் சந்திக்க வந்திருந்தனர். அபூமாஸினின் நிலைபாட்டையும் அல்-ஜஸீராவில் அவரது பேட்டியையும் குறித்து முன்பே நான் கூறியிருந்தேனல்லவா?. பசியும் நோய்களும் மரணமும் கண்முன்பாகக் கண்டு கொண்டிருக்கும், தடை செய்து கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையிலுள்ளவர்களுக்கு எங்களது பயணம் மிகவும் ஆசுவாசம் கொடுத்திருந்த போதிலும், "அது அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல" என அவர் பேட்டி கொடுத்தார். ஆனால் எங்களது பயணம், காஸாவைக் காப்பாற்றுவதற்கான கடல் வழியைத் திறப்பதற்குக் காரணமாக அமைந்தது.

* தடையை மீறிக் கொண்டு சைப்ரஸிலிருந்து புறப்பட்ட இரண்டாம் பயணக்குழுவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?

-தொடரும், இன்ஷா அல்லாஹ்.

No comments: