அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, February 3, 2009

உலகமயமாக்கலும், இலங்கையில் பாசிசமயமாகலும்

இலங்கை கொந்தளிப்பான யுத்த சூழலுக்குள் சிக்கி பாசிசமாக சிதைகின்ற போதும், உலகமயமாதல் அதனூடாகத்தான் அமுலுக்கு வருகின்றது. பயங்கரவாதம் என்ற போர்வையில், ஏகாதிபத்திய அனுசரணையுடன் இலங்கையில் யுத்தம் திணிக்கப்படுகின்றது. இதை பேரினவாதம் புலி ஒழிப்புக் கோசத்தின் கீழ், தமிழின அழிப்பாக நடத்துகின்றது. இதன் மூலம் இலங்கை தழுவிய பாசிசத்தை நிறுவிவருகின்றது.

இப்படி பேரினவாதம் கட்டமைக்கும் பாசிசம், தனக்கு எதிரான அனைத்தையும் புலிமுத்திரை குத்தி, அதன் மேல் அரச பயங்கரவாதத்தை ஏவிவிட்டுள்ளது. இலங்கை என்றுமில்லாத ஒடுக்குமுறைக்கு ஊடாகத்தான், உலகமயமாக்கலை திணித்து வருகின்றது.


இந்தவகையில் உலகமயமாதல் தன் இலக்கை அடைய வேண்டும் என்றால், சமூகத்தை விழிப்பற்ற நிலைக்குள் வைத்திருப்பது அவசியமாகின்றது. இது கோரமாக மக்களை அழிக்கும் யுத்தம் முதல் தொலைக்காட்சி சீரிஸ் வரை அடங்கும்;. மக்கள் தம் வாழ்வை புரிந்துகொண்டு எதிர்வினையாற்றாத சூழல்தான்;, உலகமயமாதலின் முன்நிபந்தனையாகும். இந்த வகையில் இலங்கையில் அது தலையிட்டுள்ளது. எம் உழைப்பினையும், எம் வளத்தையும் சூறையாடிச் செல்லுகின்றது. இதை மக்கள் புரியாது இருக்கும் வகையில், அதை புரியவிடாமல் வைத்திருத்தல் தான், பயங்கரவாத ஒழிப்பு முதல் சீரிஸ் தொடர் வரையான அன்றாட நிகழ்ச்சிகளாகும்.

உலகமயமாதல் என்பது என்ன?

உலகமயமாதல் என்பது செல்வத்தை வைத்திருப்பவன், அதை மேலும் மேலும் பெருக்க உதுவுவது. மற்றவன் உழைப்பை சூறையாடுவது மட்டுமின்றி, மற்றவனிடம் இருப்பதை, பறிக்கும் முயற்சிதான் உலகமயமாதல். இது பற்றிய புரிதல் தான், உலகமயமாதல் பற்றிய அடிப்படையான புரிதலாகும். உலகம் தழுவியளவில், மனித உழைப்பையும், உழைப்பிலான கூலியையும் திருட முனைவது தான், உலகமயமாதல். இதற்கு ஏற்ப உலகம் தழுவிய வகையில் சுரண்டும் உரிமையை இலகுபடுத்தி, அதற்கு தடையான அனைத்து சமூகக் கூறுகளையும் ஓழித்துக்கட்டுவது தான் இன்றைய அரசுளின் 'ஜனநாயக" கடமையாகிவிட்டது.

இந்த உலக ஒழுங்கில் ஜனநாயகம், சுதந்திரம் என்று நம்பப்படும் அனைத்தும், சுரண்டிக் குவிப்பவனின் குறுகிய நலனுக்கு உட்பட்டது தான். அதை மீறினால், அது ஜனநாயக மீறலாகவும் பயங்கரவாதமாகவும் முத்திரை குத்தப்படுகின்றது.

இப்படி இதற்கு எதிரான தடையான கூறுகள் தகர்க்கப்படுகின்றது. மக்கள் கூட்டம் தன்னகத்தே கொண்டுள்ள பண்பாடுகள், கலாச்சாரங்கள், பொருளாதார வாழ்வியல் முறைகள் என்று எதுவாக இருந்தாலும், அதை உலகமயமாதல் விட்டு வைப்பதில்லை. அதாவது உலகமயமாதல் சுரண்டலுக்கு ஏற்ப இருக்கும் பட்சத்தில் அதை உள்வாங்கி அதன் தனித்துவதை இல்லாதொழிக்கின்றது. உலகமயமாதல் சுரண்டலுக்கு தடையாக இருந்தால் அதை முற்றாக அழித்தொழிக்கின்றது.

இந்த வகையில் உலகளாவிய சூறையாடலுக்குள், உலகம் அழிக்கப்படுகின்றது. இயற்கை முதல் மனிதனின் காலில் ஓட்டியுள்ள தூசு வரை, அதன் தனித்துவம் அழிக்கப்படுகின்றது. இவை அனைத்தும் செல்வத்தைக் குவிப்பது என்ற ஒரேயொரு காரணத்துடன் மட்டும் நடக்கின்றது. எம்மையும், எம்மைச் சுற்றியும் நடக்கும் மனித அவலங்கள் அனைத்தும் இந்த எல்லைக்குள் அரங்கேறுகின்றது.

இயற்கையினதும், மனிதனதும் தனித்தன்மையை அழித்து செல்வத்தை திரட்டமுனையும் அதே தளத்தில், சமூக பிற்போக்குக்கூறுகள் அல்லது முற்போக்குக்கூறுகள் தம் சுரண்டலுக்கு இசைவாக இருந்தால் அந்த எல்லைக்குள் அதை பாதுகாக்கின்றது. இதை நாம் இலகுவாக புரிந்துகொள்ள, பிரிட்டிஸ்சார் இந்தியாவை சுரண்ட சாதியையும் பார்ப்பனரையும் பயன்படுத்திய அதேநேரம், சில சீர்திருத்தத்தை செய்து முற்போக்கு வேசம் போட்டுக்கொண்டு அம்பேத்கர் முதல் பெரியார் வரை தன்னை எதிர்க்காத வகையில் கவர்ந்து வைத்திருந்தது.

இப்படித்தான், சூழலுக்கு ஏற்ப உலகமயமாதல் இயங்குவதன் மூலம் சுரண்டுகின்றது. உலகத்தின் ஒரு மூலையில் இருந்து அடுத்த மூலையை சுரண்டும் உரிமையை, நெளிவு சுழிவாக மூடிமறைத்தபடி செய்யமுனைகின்றது. இதற்காக அது வேசம் போடுகின்றது. இதனால் இதை புரிந்து கொள்வதில், கோட்பாட்டு ரீதியான பிறழ்சி நடக்கின்றது. உலகமயமாதல் என்பது சுரண்டிக் குவிக்கும் செல்வத்தின் நலன் மட்டும்தான் என்ற, உலகமயமாதலின் நோக்கம் மறுக்கப்படுகின்றது. இப்படி இங்கு உலகமயமாதல்; தத்துவமோ திரிக்கப்படுகின்றது.

உலகமயமாதல் பற்றிய திரிபு

அடுத்தவன் உழைப்பை திருடியும், சுரண்டியும் தனதாக்க உருவான உலகமயமாதலை, அதுவல்ல என்று திரிக்கின்ற போது, அது உலகமயமாதலின் நன்மை பற்றிய பிதற்றலாகின்றது

இப்படி உலகமயமாதல் நன்மை பற்றிய இடதுசாரி வேடங்களும் உண்டு. தலித்திய பிதற்றலும் உண்டு. பெண்ணிய புலம்பல்களும் உண்டு.

இப்படி இவை அனைத்தும் உலகமயமாதலால் மக்கள் நன்மை அடைவதாக கூற முனைகின்றனர். இதன் மூலம் உலகமயமாதலை ஆதரிக்க கோருகின்றனர். இதற்கு எதிரான வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்க கோருகின்றனர். இதனடிப்படையிலான அபத்தங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

1. உலகமயமாதல் சமூகத்தில் நிலவும் அனைத்து தப்பபிப்பிராயங்களையும் களைந்து விடுமென்கின்றனர். வர்க்கம் தவிர்ந்த இனம், மதம், சாதி, பால் என எல்லாவற்றையும் களைந்து விடும் என்கின்றனர். இதனால் இதை ஆதரித்து, இது நிகழும் வரை வர்க்கப் போராட்டத்தை நடத்தக் கூடாது என்கின்றனர்.

சுரண்டலல்லாத சமூக முரண்பாடுகள் உலகமயமாதலில் தானாக அற்றுப் போகும் வரை, அது நிகழ்வதற்காக பொறுத்திருக்க வேண்டும் என்கின்றனர். இதனால் இதற்கு எதிராக போராடக் கூடாது என்கின்றனர். சில அதி இடதுசாரிகள்(திரொக்கிசியவாதிகள் …), உலகத்தை தொழிலாளி வர்க்கமாக உலகமயமாதல் உருவாக்குகின்றது, எனவே உலகமயமாதல் 'உலக புரட்சி" க்கு இட்டுச்செல்லும்; என்கின்றனர். இதனால் உலகமயமாதலை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர்.

மனித சமூகத்தை உலகம் தழுவிய வகையில் சுரண்டி, அவனின் கூலியைத் திருடி அவனை எதுவுமற்ற அனாதையாக்கி அவனே மந்தையாவதைத்தான் கோருகின்றனர். இதைத்தான் இந்த புத்திசாலிகள், அங்குமிங்குமாக ஆதரிக்க வைப்பதற்காக உலகமயமாதலை தம் அரசியல் கோசமாக்குகின்றனர். மனித வாழ்வில் அன்றாடம் இழப்பதற்கு எதிராக, வாழ்வதற்காக போராடக் கூடாது என்கின்றனர். என்னையும் அடுத்தவனையும் திருடிச் சுரண்ட அனுமதிப்பதே, இன்றைய சமுதாயக் கடமை என்கின்றனர். இது புரட்சிகர வர்க்க சூழலை உருவாக்கக் கூடியது, எனவே உலகமயமாதலை ஆதரிக்க வேண்டும் என்கின்றனர்.

2. உலகமயமாதல் தேசங்களின் எல்லைகளை ஒழித்துவிடும் என்கின்றனர். இதன் மூலம் எங்கும், எவரும் எப்படியும் சென்று வாழமுடியும் என்கின்றனர். தேசம் தேசியம் என்ற குறுகிய கண்ணோட்டம் ஒழிந்துவிடும். தேசம் தேசியம் எல்லாம் கற்பிதம் என்கின்றனர்.

இதனால் உலகமயமாதலுக்கு எதிராக நடக்கும், தேசியவிடுதலைப் போராட்டத்தை எதிர்க்க வேண்டும் என்கின்றனர். சிலர் தேசியம் கிடையாது என்கின்றனர். சிலர் இதை கற்பிதம் என்கின்றனர். இப்படி உலகமயமாதலை ஆதரிக்க கோருகின்றனர். தேசங்கள், தேசிய கூறுகள், அதன் சமூக பொருளாதார பண்பாட்டு விழுமியங்கள் அனைத்ததையும் அழிக்க வேணடும் என்கின்றனர். இப்படி இதனூடாக சிலர் செல்வத்தை திருட, மக்கள் அதற்கு உதவ வேண்டும் என்கின்றனர். திருடன் திருட தேசம் தேசியம் தடையாக இருக்கக் கூடாது என்கின்றனர்.

இவர்கள் எல்லாவற்றையும் சுரண்டிய பின், எல்லை இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன? இதன் பின் நிலைமை எங்கும் ஒன்று தான். அதுவரை எல்லைகளை மூலதனம் வைத்திருக்கும். அவர்கள் சுரண்டி மக்களை அடிமையாக்கி எல்லையைத் திறக்கும் வரை, தேசத்துக்காக போராடக் கூடாது. இது எல்லைகளை தகர்க்க அனுமதிக்காது என்கின்றனர்.

3. உலகத்தின் ஒரு மூலையில் உற்பத்தியாகும் பொருட்கள், மறு மூலைக்கு உடன் கிடைத்துவிடும்;. இதனால் தேவை, நுகர்வு, தேர்வு பகிரப்படும் என்கின்றனர். இதனால் தேவை, நுகர்வு, தேர்வு ஏற்றத்தாழ்வு பெரும்பான்மை மக்களிடையே இருக்காது என்கின்றனர்.

இப்படி பொருளை திணிக்கின்றனர். மற்றவனின் தேவையை, நுகர்வை, தேர்வையும் மூலதனம் சொத்தைக் குவிக்கும் தன் நலன் சார்ந்து தீர்மானிக்கின்றது. இதன் மூலம் நிலவிய தேவை, நுகர்வு, தேர்வு என்பன மறுக்கப்பட்டு, மற்றொன்று திணிக்கப்படுகின்றது. இதன் மூலம் பெரும்பான்மை அதை அடையமுடியாது போகின்றது. உலகமயமாதல் சந்தைப் பொருளாதாரம் விளம்பரம் செய்யும் எந்தப் பொருளையும், பெரும்பான்மை மக்கள் நுகர முடிவதில்லை. ஆனால் விளம்பரத்தில் காட்டப்படும் பொருள்தான், சந்தைப் பொருளாதாரமாக மிதக்கின்றது.

4. செல்வம் குவிந்தால் நல்லது. இதைச் சுற்றி பணச் சுழற்சி ஏற்படும். இதனால் அந்த பணம் மக்கள் மத்தியில் வாழ்வைப் பெருக்கும். இப்படி மக்கள் எல்லோரும் பொறுக்கி வாழமுடியும் என்கின்றனர்.

இப்படி பல காரணங்களை கூறுகின்றனர். இவர்கள் இந்த 'நன்மைகள் ஊடாக" இதற்கு எதிராக புரட்சி செய்யப் போவதாக பாசாங்கு செய்கின்றனர்.

எதார்த்த மனிதவாழ்வின் மீது, போராடுவதை இவை மறுக்கின்றது. மனித வாழ்வு சார்ந்த அன்றாட அடிமைத்தனங்களையும், அடிமைப்படுத்தலையும் மனிதன் தானாக முன் வந்து ஏற்றுக் கொள்ளக் கோருகின்றது. எதிர்கால நன்மை கருதி இதை அங்கீகரிக்க வேண்டும் என்கின்றனர்.

அடிமைகள் எப்படி எஜமானரை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனரோ, தாழ்ந்த சாதிகள் உயர் சாதியத்தை எப்படி ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனரோ, அப்படி இந்த உலமயமாதலை முழு உலகமும் ஏற்றுக்கொள்ளக் கோருகின்றனர். இதை சொல்லும் விதம்தான், வித்தியாசம். பெண்ணியம், தலித்தியம், இடதுசாரியம், மார்க்சியம் என்ற பல்வேறு பெயர்களில், திரித்துப் புரட்டி இவை வைக்கப்படுகின்றது. வேடிக்கை என்னவென்றால், எதார்த்த மனித வாழ்வில் சந்திக்கின்ற ஒடுக்குமுறைக்குள், தமது கருத்துகளை பொருத்திப் பார்ப்பதில்லை. மாறாக கற்பனையான அறிவியல் விளக்கங்கள், எதிர்காலத்தில் புரட்சி பற்றி கற்பனை கோட்டைக்குள் இதை நியாயப்படுத்த முனைகின்றனர். மூலதனமோ இதை தனது சுதந்திரம், ஜனநாயகம் ஊடாகக் கோருகின்றது.

மூலதனத்தின் அடிப்படை உரிமைதான், ஜனநாயகமும், சுதந்திரமும்

இன்றைய அரசுகள் முதல் பொதுவான சிந்தனைத் தளம் வரை, எமது உழைப்பை திருடுவதையும் சுரண்டுவதையும் அங்கீகரிக்கின்றது. அதாவது அங்கீகரிக்க வைக்கின்றது. ஊடகவியல் முதல் தனி மனித கண்ணோட்டம் வரை இதற்கு அமைய மனிதனை மூளைச்சலவை செய்கின்றது.

திருடுவதும், சுரண்டுவதும் மறைமுகமாக, மனித அறிவுக்கு புலனாகாத வகையில் சூக்குமமாக உள்ளது. நான் சுரண்டப்படுவதும், திருடப்படுவதும் எனக்குத் தெரிவதில்லை.

இன்று சிலரிடம் செல்வம் குவிகின்றது என்பது வெளிப்படையான உண்மை. இது எங்கிருந்து எப்படி வருகின்றது? செல்வம் என்றால் என்ன?

செல்வம் என்பது மனித உழைப்புதான். இதற்கு வெளியில் செல்வம் உருவாவதில்லை. இதை புரிந்துகொள்ள, நான் என்ற தனிமனிதன் எனக்கு உழைத்தால் தான் எனக்கு செல்வம் வரும். இந்த உழைப்புத்தான் செல்வத்தின் அடிப்படை. இந்த செல்வத்தை நான் உற்பத்தி செய்ய, மற்றவன் அதை பிடுங்கிக்கொள்வதுடன், அதன் ஒரு பகுதியை கூலியாகத் தருகின்றான். இப்படி மனித உழைப்பு சுரண்டப்படுகின்றது. அதை அவன் மூடிமறைக்க மூலதனத்தை பற்றி, உபதேசம் செய்வான். அதுவும் சுரண்டப்பட்ட மனித உழைப்புத் தான்;. சுரண்டுவதன் மூலம் செல்வம் குவிகின்றது. கூலியை மீள அபகரிக்கும் திருட்டு நிகழ்கின்றது. நீயும், சக மனிதனும் உற்பத்தி செய்த பொருளை மீண்டும் உன் கூலியைக் கொடுத்தே வாங்குகின்றாய். இப்படி மனித உழைப்பு சிலரிடம் சென்று குவிந்து விடுகின்றது. மறுபுறத்தில் உனது சேமிப்பு, வங்கி மூலம் உன்னைச் சுரண்ட மூலதனமாகி மீள வருகின்றது.

இப்படி உலகம் தனிமனித எல்லைக்குள் சுரண்டவும், திருடவும் கோருகின்றது. செல்வம் சிலரிடம் குவிகின்றது. இதை செய்யும் உரிமையைத்தான், இன்று ஜனநாயகம், சுதந்திரம் என்கின்றனர். இதற்கு எதிராக போராடாத, சுதந்திரம், ஜனநாயகம் என்பது தனிமனிதனுக்கு அதை உரிமையாக்கி, சமூகத்துக்கு அதை இல்லாதாக்குவதுதான். இதன் மூலம் செல்வம் சிலரிடம் குவிந்து விடுகின்றது.

இல்லாத பொருளை வைத்தே சூதாட்டம்

உலக பொருட்களின் விலையேற்றம், இல்லாத பொருளை மீளமீள விற்றல். 'முன்நோக்கு முன்பேர வர்த்தகம் என்பது உண்மையில் கையிருப்பில் வைத்துள்ள பொருட்களை வைத்துக் கொண்டு பேரங்கள் பேசி வாணிபம் செய்வதில்லை. ஒரு மாயையான கையிருப்பைக் காட்டி (கையிருப்பில் உள்ள சரக்கு மற்றும் எதிர்காலத்தில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் சரக்கு மட்டுமல்ல, அவற்றின் மதிப்புகள் தேவைகள் பற்றிய ஊகங்கள் அடிப்படையில்) நடத்தப்படும் சூதாட்டம் ஏசைவரயட வசயனந ழn வாந டியளளை ழக எசைவரயட ளவழஉம. . சான்றாக 20.05.06 ஆம் ஆண்டில் கௌர் தானிய உற்பத்தி 6 இலட்சம் டன்கள்தாம். ஆனால், பண்டப்பரிவர்த்தனையில் 1,692.6 இலட்சம் டன்கள் கையிருப்பில் இருப்பதாக ஊகம் செய்து கொண்டு முன்நோக்கு வர்த்தகம் நடத்தப்பட்டது. 10 இலட்சம் டன் உள்நாட்டு உற்பத்தியும் 5 இலட்சம் டன் இறக்குமதியுமாக மொத்தம் 15 இலட்சம் டன் அர்கர் பருப்பை வைத்துக் கொண்டு 137.39 இலட்சம் டன் இருப்பதாக ஊக வணிகம் நடத்தப்பட்டது. இதிலிருந்து ஊக வணிகம் எவ்வாறு விலைவாசியைத் தாறுமாறாக எகிறச் செய்யும் என்பது புரியும். ஊகவணிகத்தால் தான் சர்வதேச பெட்ரோலிய விலை எகிறியிருக்கிறது. உண்மையில் பெட்ரோலியப் பற்றாக்குறையால் அல்ல" நன்றி பு.ஜ.



'இவ்வாறு அந்நிய, உள்நாட்டு தரகு ஏகபோக முதலாளிகள் முன்நோக்கு முன்பேர வணிகம் மூலம் கொள்ளை இலாபம் அடிப்பதற்காக 'உணவு தானியங்கள் போன்ற அடிப்படைப் பொருட்களைக் கூட அரசு பெருமளவு கொள்முதல் செய்து கொள்ளவும், இருப்பு வைத்துக் கொள்ளவும் கூடாது. அப்படிச் செய்து பொது விநியோகத்தில் ஈடுபடவும் கூடாது. தனியார் பெருமளவில் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று இந்திய அரசை ஏகாதிபத்தியங்கள் நிர்ப்பந்தித்து சாதித்துக் கொண்டுள்ளன. இந்தியாவில் நடக்கும் இவ்வாறான ஊகவணிகத்தின் மதிப்பு நாளொன்றுக்கு 300 கோடி டாலர் (அதாவது 12,000 கோடி ரூபாய்) ஆகும் என்று இலண்டன் எகனாமிஸ்டு மதிப்பிடுகிறது.

ஒரு எடுத்துக்காட்டுக்கு பாருங்கள் 1996-ல் அமெரிக்க கோதுமை உற்பத்தி பூச்சித்தாக்குதலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டது. வேளாண் வியாபாரத்தில் முழு விநியோக சங்கிலியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்க்கில் நிறுவனம் ஒரு டன் 60ரூ முதல் 100ரூ வரை கொடுத்து இந்திய கோதுமையை வாங்கி அதனை சர்வதேச சந்தையில் 230ரூ முதல் 240ரூ வரை இலாபம் வைத்து கொள்ளையடித்தது" நன்றி பு.ஜ.



இப்படி எண்ணை முதல் பொருட்களின் விலையேற்றம் என்பது, பொருளை பலமுறை விற்றல். இல்லாத பொருளை விற்றல். இருக்கும் பொருளை மலிவாக வாங்கி பதுக்கி விற்றல். இப்படி மக்களின் அடிப்படை நுகர்வை செய்ய முடியாத வண்ணம், அதை தாறுமாறாக அதை விற்று கொள்ளையடித்தல். இப்படி பொருள்கள் விலையேறுகின்றது, மறுபக்கம் வாங்கும் திறனற்று பொருள் சந்தையில் குவிகின்றது. தடாரென்று விலை சரிகின்றது.

உலகமயமாதலின் நெருக்கடி

இதுவோ மூலதனத்தின் நெருக்கடி. திருடர்கள் தம் திருட்டை மறைக்க போடும் வே~ம் உல நெருக்கடியாகின்றது. இந்த நெருக்கடி என்பது பொய்யானது, போலியானது. நெருக்கடி செல்வத்தை திருடி குவித்து வைத்திருப்பவனுக்குத் தான்.

சாதாரணமான மக்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். இது நாள் கூலியாக இருந்தாலும் சரி, மாதக் கூலியாக இருந்தாலும் சரி அவன் உழைத்தேயாக வேண்டும். தனக்குத் தேவையானதை நாள்தோறும் கூலிவடிவில் உற்பத்தி செய்தேயாக வேண்டும். மக்களுக்கு நெருக்கடி கிடையாது. அவன் உழைத்து வாழ்பவன்.

நெருக்கடி என்பது என்ன? செல்வத்தை திருடிக் குவித்தவன் அதை இழக்காமல் இருக்கவேண்டும். இதுதான் நெருக்கடி. அதேநேரம் பொதுவான பணத்தை (வங்கி, காப்புறுதி,…) மீள வைப்பில் இட வேண்டும். இதுதான் பொது நெருக்கடி. அரசும், பணத்தை கொள்ளையிட்டுக் குவித்தவர்களும் சேர்ந்து செய்கின்ற சதி நெருக்கடியாகின்றது.

மக்களுக்கு எதிரான அரசு என்ன செய்யும்? இதை மக்களின் நெருக்கடியாக்கி, அவர்களிள் உழைப்பில் இருந்து இதை திருட முனைகின்றது. உலகம் தழுவிய நெருக்கடியாக அதை மாற்றுகின்றது. திருடிய சொத்தை ஈடுசெய்ய, மக்கள் மேலான சுரண்டல் அதிகரிக்கும். கூலியைக் குறைப்பர், கூலியை கொடுப்பதை நிறுத்துவர். இதனால் மக்கள் தம் வேலையை இழப்பர். மக்களின் நுகர்வின் அளவு குறையும். வாழ்வின் தேவை மறுக்கப்படும். இப்படித்தான் செல்வக் குவிப்பால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய முனைகின்றனர். இதைத்தான் நெருக்கடி என்கின்றனர்.

உலக மக்கள் இதற்கு எதிராக போராடுவார்கள். இதையே அவர்கள் தங்கள் வர்க்கத்தின் மீதான பொது நெருக்கடி என்கின்றனர். நெருக்கடி சுரண்டும் வர்க்கத்துக்குத்தான். யாரால் என்றால், உழைக்கும் மக்களால். உலக நெருக்கடி பிரகடனமும், உழைத்து வாழும் மக்களுக்கு எதிரானது.

இந்த நெருக்கடி என்பது அன்றாடம் உழைத்து வாழும் மக்களால் உருவானதல்ல. அவர்களின் வாழ்வியல் முறையால் உருவானதல்ல. இந்த வகையில் இது பொய்யானது, போலியானது. நெருக்கடிக்கான செல்வத்தை திருடியதுதான், நெருக்கடிக்கான அடிப்படையாகும். இந்தத் திருட்டை கண்டுபிடித்து, அதை மீளக் கொடுப்பதை மறுப்பதுதான் இன்று நெருக்கடியாக மாறுகின்றது. உலக பணக்கார திருடர்களும், அதற்கு உதவிய அரசும் தான், இந்த நெருகடிக்கடியை உருவாக்கியவர்கள்.

இந்த நெருக்கடியில் சிக்கிய பல பத்தாயிரம் கோடி பணம் எங்கே போனது? அந்த பணம் எங்கும் காணாமல் போய்விடவில்லை. உலகின் பெரிய பணக்காரர்களிடம் அவை குவிந்து போய் உள்ளது. இப்படி நெருக்கடியை உருவாக்கிய பணம், பெரும் பணக்கார திருட்டுக் கும்பலிடம் போய்ச் சேர்ந்துள்ளது. இப்படி இதை உலகமயமாதல் செய்துள்ளது.



அடுத்தவன் சொத்தை திருட உதவிய அரசுகள்

இது பற்றிய தகவல்கள் இந்தத் திருட்டின் வெளிப்படையாக அம்பலமாக்குகின்றது. புதிய ஜனநாயகம் இதழில் இவை பற்றிய குறிப்புகள் பல வந்துள்ளது.

இந்த திருடர்களுக்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் டபிள்யூ. புஸ் கூறுகின்றார் 'இந்த பூமியிலிருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், குழந்தைக்கும் சுதந்திரம் எனும் உயரிய பரிசினை கடவுள் அளித்திருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். நமது மக்களின் தொழில் முனைவுத் திறனைத் தூண்டிவிடும் வல்லமையினை சந்தை கொண்டிருக்கிறது என்றும் நம்புகிறோம். ஆகையால் சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்." நன்றி பு.ஜ.

ஆம் திருடர்கள் தம் சொத்தை பாதுகாக்க, திருடர்கள் செய்து கொண்ட திருட்டு ஏற்பாட்டுக்கு மக்கள் தியாகம் செய்ய வேண்டுமாம். காணாமல் போன செல்வத்தை தேடக் கூடாது, அதை மக்கள் கொடுக்க வேண்டும்;. எப்படி காணாமல் போனது, யார் அதற்கு உதவியது என்பதை அறிவது ஜனநாயக விரோதம். இதைத் திருடர்களின் சுதந்திரமாக கடவுள் மூலம் அங்கீகரித்து, மக்கள் அதற்கு தியாகம் செய்யவேண்டும் என்கின்றார்.

கடவுளின் பெயரில் சுதந்திரம் என்று உளறும் இந்த மனித விரோதிகள், ஜனநாயகத்தின் பெயரில், அவாகள் நடத்திய திருட்டின் கேவலத்தை பார்ப்போம். '1930ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் இந்த நெருக்கடியைப் போன்றதொரு வீழ்ச்சியைச் சந்தித்தபொழுது, கிளாஸ்ஸ்டீகல் சட்டம் உருவாக்கப்பட்டு, வர்த்தக வங்கிகளும், முதலீட்டு வங்கிகளும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டன. 1930க்கு முன்பு வங்கிகளே பங்குச் சந்தை தரகு நிறுவனங்களையும் நடத்தி வந்ததால், வர்த்தக வங்கிகள் பொதுமக்களிடமிருந்து பெறும் சேமிப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இச்சட்டம் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் சேமிப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் காப்பீடு நிறுவனமும் அமைக்கப்பட்டது. இச்சட்டம், 1999ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த சமயத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதற்கு அடுத்த ஆண்டு, நிதிச் சந்தையில் நடைபெறும் சூதாட்டங்களுள் ஒன்றான 'டெரிவேட்டிவ்" (பங்குகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் மீது நடைபெறும் சூதாட்டத்தின் மீது நடக்கும் சூதாட்டம்) மற்றும் வாராக் கடன்களைக் கைமாற்றிக் கொண்டே போகும் சூதாட்ட வர்த்தகம் ஆகிய இரண்டும், பங்கு பரிமாற்றக் கழகத்தின் கண்காணிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன.

அமெரிக்க முதலீட்டு வங்கிகள், தாங்கள் செய்யும் முதலீடுகள் நட்டமடைந்தால், அதனை ஈடு செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னிருப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி இருந்து வந்தது. 2004ஆம் ஆண்டில், இந்த விதி நீக்கப்பட்டு, முதலீட்டு வங்கிகள் இருப்பு வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்ற சலுகை நடைமுறைக்கு வந்தது. 2004ஆம் ஆண்டு கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஹென்றி ஜெ.பால்சன்தான் இவர்தான் இப்பொழுது அமெரிக்க அரசின் நிதியமைச்சர் இச்சலுகையை வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வங்கிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் ரிசர்வ் வங்கி அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் இயங்கவில்லை. வங்கி முதலாளிகளின் சங்கம்தான், அதற்குத் தலையாக இருந்து இயக்கி வருகிறது. கிருஸ்;ண பகவான் பகவத்கீதையில் 'எல்லாம் நானே" என உரைத்தது போல, அமெரிக்காவில் பங்குச்சந்தை சூதாடியே வங்கி முதலாளியாக இருக்கிறார்; அவரே போலீசாக (கண்காணிப்பாளராக) இருக்கிறார். அவரே நீதிபதியாகவும் (திவாலான பொருளாதாரத்தை மீட்கும் பொறுப்பு) இருக்கிறார்.

அமெரிக்க அரசு, சூதாடிகளின் மீது இருந்த அற்பமான கண்காணிப்புகளை விலக்கிக் கொண்டதோடு, சூதாட்டம் சூடாக நடைபெறுவதற்குத் தேவையான பணத்தையும் வாரிக் கொடுத்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான் அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை ஒரு சதவீதமாகக் குறைத்ததன் மூலம் டாலர் புழக்கத்தைத் தாராளமாக்கினார்.

இதேபொழுதில், அமெரிக்கப் பங்குச் சந்தை வாரியத்தின் வாராக் கடன்களைக் கண்காணிக்கும் பிரிவில் ஊழியர்களின் எண்ணிக்கை 100இல் இருந்து ஒன்றாகக் குறைக்கப்பட்டது. ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து 146 ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். சூதாடிகளுக்கு வழங்கப்பட்ட இச்சலுகைகளை நியாயப்படுத்துவதற்காக, 'அனைவருக்கும் வீடு" என்ற கவர்ச்சி முழக்கம் அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஒரு பக்கம் பணத்தோடு சூதாடிகள்; இன்னொருபுறம் கடன் வாங்கி செலவு செய்யும் நாகரீகத்துக்கு ஆட்பட்டுப் போன மக்கள் பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்ட பின்னணி இதுதான்." நன்றி பு.ஜ.

மக்களின் சேமிப்புகள், காப்புறுதிகள், ஓய்வூதிய நிதிகளை எல்லாம் திருடிய கும்பல், அதை எப்படி சாதித்தது என்பதையே நாம் பார்க்கின்றோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட 'ஜனநாயக" அரசு, சட்டங்களை திருடுவதற்கு ஏற்ப விலக்கியும் திருத்தியும் கொண்டன. திருட்டை விசாரிக்க முடியாத வண்ணம் அதற்கும் சட்டம் போட்டுக்கொண்டன. திருடியதை சட்டத்தின் மூலம் சட்டபூர்வமாக்கியவர்கள், தாம் திருடியதை மக்களைக் கொண்டு ஈடு செய்ய முனைகின்றனர். அதற்கும் தாமே பொறுப்பேற்று சட்டத்துக்கு உட்படாத வண்ணம் அதிலும் திருடமுனைகின்றனர்.



பேய் அரசாண்டால்...

'இந்த 'நெருக்கடி" யின் இரண்டாவது அத்தியாயம் நிதி ஆதிக்கக் கும்பலைக் கைதூக்கி விடும் படலம், முதல் அத்தியாயத்தைவிட மிகவும் சுவையானது. மிரட்டல், கூட இருந்தே குழி பறித்தல், கழுத்தறுப்புப் போட்டியில் ஒரு நிறுவனம் இன்னொன்றை விழுங்குதல், அரசு தூக்கியெறிந்த எலும்புத் துண்டைக் கவ்விக் கொள்ள நாய்ச் சண்டை போடுதல் என்ற முதலாளித்துவத்தின் நவரச 'நற்குணங்களையும்" இதில் காண முடிந்தது.

'சப்பிரைம் லோன்" சூதாட்டம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த சமயத்தில்தான் 2006இல் ஹென்றி ஜெ.பால்சன் என்பவர் அமெரிக்காவின் நிதி மந்திரியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்தில் நடந்த’வாட்டர் கேட்" ஊழலின் முக்கியப் பங்காளியாக இருந்து தண்டிக்கப்பெற்ற ஜான் எர்லிச்மேன் என்ற அதிகாரியின் கீழ் நிர்வாகத்தின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொண்டவர்தான் நிதி மந்திரி பால்சன். 1974இல் கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியில் நுழைந்த பால்சன், 1998இல் ஒரு அதிரடிக் கவிழ்ப்பின் மூலம், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைப்பற்றினார். ஏறத்தாழ 53 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான கோல்டன் சாக்ஸ் நிறுவனப் பங்குகள் பால்சனிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. 'முதலீடு செய்வதில் துணிந்து சவால்களைச் சந்திக்கக் கூடியவர்" என முதலாளித்துவப் பத்திரிகைகள் பால்சனைப் புகழ்ந்து தள்ளுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், நிதி மந்திரி பால்சன் கைதேர்ந்த சூதாடி.பால்சன், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து கோல்டுமேன் சாக்ஸையும், அந்நிறுவனத்தில் இருந்த தனது முதலீட்டையும் பாதுகாத்துக் கொண்டதோடு, கோல்டுமேன் சாக்ஸ{க்கு எதிரான முதலீட்டு வங்கிகளை ஒழித்தும் கட்டினார். லேமேன் பிரதர்ஸ் என்ற முதலீட்டு வங்கி திவாலாகவும்; ஜே.பி.மார்கன்சேஸ், பியர் ஸ்டெர்ன்ஸ் நிறுவனத்தையும்; பாங்க் ஆஃப் அமெரிக்கா, மெரில் லிஞ்ச் நிறுவனத்தைக் கையகப்படுத்தவும் அனுமதித்த பால்சன், இதன் மூலம் கோல்டுமேன் சாக்ஸை அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளுள் ஒன்றாக மாற்றினார். இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்க அரசின் ஆதரவோடு பல நிறுவனங்களை விழுங்கிய பாங்க் ஆப் அமெரிக்கா, ஜே.பி.மார்கன் சேஸ், சிட்டி குரூப் ஆகிய மூன்று வங்கிகளும், அமெரிக்காவின் மொத்த வங்கி சேமிப்பில் மூன்றில் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளன. நெருக்கடிக்கு முன்பாக 21.4 சதவீதமாக இருந்த இம்மூன்று வங்கிகளின் சேமிப்பு, இன்று 30 சதவீதத்தை நெருங்கி விட்டது." நன்றி பு.ஜ.

இப்படி சொத்தை மேலும் குவிக்க, மக்களின் பணத்தை மீளப் பயன்படுத்துகின்றனர். திருடியவர்கள், தொடர்ந்து திருட அனுமதிப்பதே நெருக்கடிக்கான தீர்வு. திருடியவன் நாட்டை தீர்மானிக்கும் நிலைக்கு உயர்ந்து உலகத்தையே மிரட்டுகின்றனர். உலக மக்களை திருடும் திருடர்கள் தான், ஜனநாயகத்தின் பெயரில் உலகை ஆளுகின்றனர்.

மக்கள் கோரிக்கையை மறுக்கும் திருடர்கள்

'வங்கி முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும் என அமெரிக்க மக்கள் நடுத்தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருந்த பொழுது, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ்சும், நிதி மந்திரி பால்சனும் அம்முதலாளிகளைக் கரையேற்ற 70,000 கோடி அமெரிக்க டாலர்களை அவர்களுக்கு மானியமாக வாரிக் கொடுக்கும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க நாடாளுமன்றம், மக்களின் போராட்டத்தால் இந்த மானியத்திற்கு ஒப்புதல் கொடுக்கத் தயங்கிய பொழுது, நிதி மந்திரி பால்சன், 'பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளாதீர்கள்" என்ற தொனியில் மிரட்டியிருக்கிறார். பால்சன் மிரட்டலாகச் சொன்னதை, வங்கி முதலாளிகள் பங்குச் சந்தையைக் கவிழ்த்துச் செய்து காட்டினார்கள்." நன்றி பு.ஜ.

இப்படி தொடர்ந்து திருடும் உரிமையை மிரட்டி பெற்றுக்கொண்டனர். இதை மறுத்தால் அனைத்தையும் தலைகுப்புற தகர்த்துவிடுவோம் என்கின்றனர். இப்படி கொள்யைர்கள் நாட்டை ஆளுகின்றனர்.

இப்படி மிரட்டி ஆள்பவர்கள் தமக்கான சட்டத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். 'சூதாடிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, அதற்காகத் தனிச் சட்டத்தையும் உருவாக்கினார்கள்.

இந்தச் சட்டம், 'மதிப்பிழந்து கிடக்கும் சொத்துக்களை, எந்த வங்கியிடமிருந்தும், என்ன விலை கொடுத்தும் வாங்குவதற்கான அதிகாரத்தை" நிதி மந்திரி பால்சனுக்கு அளிக்கிறது. மேலும், 'பொருளாதாரச் சரிவைத் தடுக்கும் நோக்கங்கொண்ட" பால்சனின் இந்த முடிவுகளை, எந்தவொரு நீதிமன்றமோ, அரசின் வேறெந்தப் பிரிவோ கேள்வி கேட்கவோ, அதனை மறுபரிசீலனை செய்யவோ உரிமை கிடையாது என்ற உள்விதியும் இச்சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது." நன்றி பு.ஜ. இப்படி மக்களின் பணத்தை மானியத்தின் பெயரில் சுருட்டிக்கொள்ள, கொள்ளையிட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர்கள் சட்டத்துக்கு விதிவிலக்குடன் மீளத் திருடும் உரிமையை பெற்றுக்கொண்டனர்.

இந்த மீள் திருட்டை நடத்த, முன்னைய திருட்டை மதிப்பீடு செய்ய அமெரிக்கா ஜனநாயகம் ஒரு திருடனை அமர்த்தியுள்ளது. அவன் யார் என்ற கதையைப் பாருங்கள்; 'வில்லியம் கிராஸ், பால்சனின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, திவாலாகிப் போன ஃபான்னி மே, ஃபிரட்டி மாக் என்ற இரு அடமான நிறுவனங்களை அமெரிக்க அரசு தேசியமயமாக்கிய பொழுது, அதன் மூலம் 1,700 கோடி அமெரிக்க டாலர்களை இலாபமாகச் சுருட்டிக் கொண்ட ஒரு திருட்டுப் பேர்வழி என்பதும் குறிப்பிடத்தக்கது." நன்றி பு.ஜ இப்படிப்பட்ட திருட்டு அயோக்கியர்கள் சேர்ந்து உருவாக்கிய நெருக்கடியை தீர்க்க, அவர்களையே சுதந்திரமாக அனுமதித்திருக்கும் கேவலம். இவர்கள் சட்டத்துக்கு அப்பால் மீளவும் கொள்ளையடித்து செயல்படும் உரிமை. இதன் மூலம் அவர்களின் நெருக்கடிக்கு தீர்வு.

திருடிய சொத்தில் ஒரு பகுதி, வங்கியாளர்களே திருடிக்கொண்டார்கள்


இவர்களில் சிலர் எப்படி திருடினார்கள் என்பதைப் பார்ப்போம்; 'உலகெங்கிலும் 60,000 கோடி அமெரிக்க டாலர் அளவிற்கு கடனை வாங்கிப் போட்டுத் திவாலாகி விட்ட லேமேன் பிரதர்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியான ரிச்சர்ட் ஃபல்ட், கடந்த எட்டாண்டுகளில் எடுத்துக் கொண்ட சம்பளம் மட்டும் 48 கோடி அமெரிக்க டாலர்கள்.

மெரில் லிஞ்ச் நிறுவனம் திவாலாகிக் கொண்டிருந்த சமயத்தில், அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜான் தாய்ன், கடந்த எட்டு ஒன்பது மாதங்களுக்குள் எடுத்துக் கொண்ட சம்பளம் 85 கோடி அமெரிக்க டாலர்கள்.

இந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மட்டும்தான் கொழுத்த சம்பளம் பெற்றார்கள் என்பதில்லை. நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் புசிவதைப் போல, அமெரிக்காவின் மிக முக்கியமான ஐந்து நிதி நிறுவனங்களைச் (அதில் மூன்று திவாலாகி விட்டன) சேர்ந்த 1,85,000 ஊழியர்களுக்கு 2007இல் மட்டும் சம்பளம் மற்றும் போனசாகச் சேர்த்து 6,600 கோடி (சரசரியாக 36 லட்சம் டொலர்) அமெரிக்க டாலர்கள் கொட்டப்பட்டுள்ளது.

இத்தலைமை நிர்வாக அதிகாரிகள் உருவாக்கி நடத்திய சூதாட்டம்தான் இந்தப் பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. எனினும், இக்கிரிமினல் குற்றத்திற்காக எந்தவொரு தலைமை நிர்வாக அதிகாரி மீதும் வழக்குத் தொடரப்படவில்லை இதைவிடக் கேவலமானது, அவர்கள் தங்கள் பதவியில் இருந்து விலகக்கூட நிர்பந்திக்கப்படவில்லை என்பதுதான்." நன்றி பு.ஜ. இந்த திருடர்கள் (ஊழியர்கள்) அனைவரும் 10 லட்சத்துக்கு அதிகமான சொத்து வைத்துள்ள உலகப் பணக்காரப் பட்டியலுக்குள் இயல்பாக வந்துவிடுகின்றனர். இப்படி திருட்டின் மூலம், திருடிய சொத்தின் மூலம் உலக பணக்காரராகி விடுகின்றனர். இவர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவர முடியாது. அதற்கும் இந்த திருடர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

'என்ரான் திவாலானதற்கு நிர்வாகத்தின் மோசடித்தனங்கள்தான் காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தலைமை நிர்வாக அதிகாரிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இப்படிப்பட்ட தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, தற்பொழுது அமெரிக்க நிறுவனங்களில் சேரும் சூதாடிகள், 'தங்களின் நிர்வாகத்தின் கீழ் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால், அதற்குத் தங்களைப் பொறுப்பேற்கச் சொல்லக் கூடாது" நன்றி பு.ஜ. என ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சேருகிறார்கள்." இப்படி மோசடி செய்வதற்கு என்றே திட்டம் போட்டுத்தான் செயல்படுகின்றனர். சட்டங்கள் முதல் அரசு வரை இதற்கு கட்டுப்பட்டே செயல்படுகின்றது.

இந்த திருடர்களே அரசை தீர்மானிக்கின்றனர். தனக்கு தேவையான சட்டங்களை உருவாக்குகின்றனர். இதற்கு லஞ்சத்தை நன்கொடையின் பெயரில் கொடுக்கின்றனர். 'அமெரிக்காவின் அதிபர், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில கவர்னர்கள் உள்ளிட்டு அமெரிக்க ஆளும் கும்பலின் நுனி முதல் அடி வரையிலான அதிகார அங்கங்கள் அனைத்தும் வால்ஸ்ட்ரீட் சூதாட்டக் கும்பலிடம் காசு வாங்கிக் கொண்டு தான் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்துகின்றனர். தற்பொழுது நிதி மந்திரியாக இருக்கும் பால்சன், கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பொழுது, 1998 தொடங்கி 2006 முடியவுள்ள எட்டாண்டுகளில் குடியரசுக் கட்சிக்கு மட்டும் தனது சொந்தப் பணத்தில் இருந்து 3,36,000 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பால்சன் கும்பல் தயாரித்த 70,000 கோடி அமெரிக்க டாலர் மானியத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ஹிலாரி கிளிண்டனுக்கு 4,68,200 அமெரிக்க டாலர்; ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமாவிற்கு 6,91,930 அமெரிக்க டாலர்; குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு 2,08,395 அமெரிக்க டாலர் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கும் கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் 'நன்கொடை" கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது." நன்றி பு.ஜ. திட்டமிட்டே மோசடி செய்து திருடும் கும்பலின் தயவில் நாட்டை ஆளும் கும்பல்கள். இந்த கும்பலுக்கு மக்கள் 'சுதந்திரமாக" வாக்களிப்பதாக கூறி, அதை 'ஜனநாயகம்" என்று பீற்றிக்கொள்ளும் எம் அறிவைத்தான் நாம் செருப்பால் அடிக்கவேண்டும்.

இந்த மோசடியை நெருக்கடியாக்கி, மீண்டும் திருடும் கும்பலின் போக்கிலித்தனத்தை எதிர்த்துப் போராடாது இருக்கும் வரை, இந்த திருட்டுக்கு நாமும் உடந்தைதான்.

உலகமயமாதல் பற்றிய சிறு குறிப்புகள்

'நீ மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டுமென்றால், மற்றவன் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும்.'' இதுவே உலகமயமாதல் என்ற பொருளாதாரத்தின் அடிப்படையான இயங்கு விதி. வெளிப்பார்வைக்கு இது உருத்தெரியாத ஒன்றாக உருத்திரிந்து இயங்குகின்றது. தனிமனித சுதந்திரம், தனிமனித தெரிவு, இருப்பதைக் கொண்டு எப்படியும் வாழ் என்கின்றது. இதுதான், இப்படித்தான் உலகம் என்கின்றது. இதை மாற்ற முடியாது என்கின்றது. இதை இயற்கையானது என்கின்றது. இதையே மனித ஜனநாயகம் என்கின்றது. மனித சுதந்திரம் என்கின்றது. இதன் உள்ளார்ந்த சமூக விதியை கற்றுக்கொள்ளாதே என்பதே, இதன் பொருள்." எனது நூல்.

'இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது. இதனால் கஞ்சிக்கே வழியில்லாத மக்கள் கூட்டத்தின் வயிறோ, மேலும் மேலும் சுருங்கி வருகின்றது. மனித உழைப்பிலான அனைத்து வகை செல்வத்தையும், ஜனநாயகத்தின் பெயரிலும் சுதந்திரத்தின் பெயரிலும் திருடுவதே உலகமயமாதலின் பிழைப்பாகிவிட்டது.

இந்த தனிமனித நலன் சார்ந்த ஒழுக்கக்கேட்டை பீற்றிக் கொள்கின்ற வக்கிரம் தான், பண்பாடாக கலாச்சாரமாக பரப்பப்படுகிறது. இந்த உலகமயமாதலில் கதாநாயகர்களின் நுகர்வு வக்கிரங்களைப் பார்த்தும், கேட்டும் ரசிக்கின்ற ரசிகர் கூட்டமாக, ஒரு கற்பனை உலகில் மக்களை சஞ்சரிக்க கோருகின்றனர். இப்படி மக்கள் கூட்டத்தை அற்ப உணர்வுக்குள் திணிப்பதையும், அதை உணர்வதையும் தான் தனிமனிதனின் சுதந்திர உணர்வு என்கின்றனர்." எனது நூல்.

'இந்த உலகமயமாதல் அறிவியல் நோக்கு என்பது, பொருட்களை வாங்க முடியாதவன், பொருள் உலகில் வாழத் தகுதியற்றவனாக பார்க்கின்றது. உலகமயமாதல் பொருட்களினாலானது. இலாபமே குறிக்கோளாக கொண்டது. இதற்குள்ளேயே நுகர்வு என்று தீர்மானிக்கின்றது. சுதந்திரம், ஜனநாயகம் என அனைத்தும் இதற்குள் அடிமையானதே. இதை மீறி பீற்றிக் கொள்ள எதுவும் கிடையாது. அற்ப வக்கிரத்தை கொட்டி, பீற்றுவதையே சுதந்திரம் என்கின்றன." எனது நூல்.

'பணத்தை தலைக்கு மேலாக குவித்து வைத்திருப்பவன், பணத்தை மேலும் மேலும் பல மடங்காக பெருக்க பிசாசாகி அலைகிறான். இதற்குத் தடையாக உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பதில், தனது முழுமையான இழிவான வக்கிரமான சமூகப் பாத்திரத்தை கையாள்கின்றான்." எனது நூல்.

'இன்று மனித உழைப்பின்றி யாரும் உயிர்வாழ முடியாது. ஆனால் உழைப்பவனுக்கு உண்ண உணவு இல்லை. உழைப்பவன் இயற்கையான நீரைக் கூட குடிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. நீர் கூட சந்தைப் பொருளாகிவிட்டது. இவனுக்குச் சுதந்திரம், ஜனநாயகம் என எதுவும் இல்லை. இந்த அமைப்பால் உன்னதமானதாகக் கூறப்படும் எதையும், உழைப்பவன் பெறமுடியாது. யார் உழைப்பதை மறுக்கின்றானோ, யார் உழைப்பை இழிவானதாகக் கருதுகின்றானோ, அவன்தான் உழைப்பினால் கிடைக்கும் அனைத்து உற்பத்தியையும் நுகர்கின்றான். யார் உழைப்பவனை இழிவாக்கி அவர்களது உழைப்பைத் தனதாக்குகின்றானோ, அவனுடைய இழிவான வாழ்க்கை முறைமை தான், உலகின் உன்னதமான நாகரிகமாகி விடுகின்றது. சமுதாயத்தில் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் இல்லாத இன்றைய எல்லா நிலையிலும், கட்டமைக்கப்படும் ஜனநாயகப் பீற்றல்கள் அனைத்தும், உழைப்பவனின் ஜனநாயகத்தை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டது. அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் ஒரு கருதுகோளேயல்ல அல்லவா? இதற்கு மாறாக ஒருவனுக்கு ஜனநாயகம் இல்லாதபோதுதான், மற்றொருவனுக்கு ஜனநாயகம் இருக்கும். இதுவே இன்றைய எதார்த்தம். இதையே உலகமயமாதல் தனது அடித்தளமாகவும் ஆதாரமாகவும் கொள்கின்றது." எனது நூல்.

'இது தேச எல்லைகளையே அழிக்கின்றது. அனைத்து வகையான சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் அழிக்கின்றது. உலகளவில் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட, மனித விரோதக் கூறுகளைத் தக்கவைத்து ஒருங்கிணைக்கின்றது. மக்களின் சமூகப் பொருளாதாரப் பாரம்பரியக் கூறுகளை ஈவிரக்கமின்றி குறிவைத்து அழிக்கின்றது. பன்மைத்தன்மை வாய்ந்த மனிதனின் சமூக அறிவியல் கூறுகளை அழிக்கின்றது. இப்படி மனிதனின் வாழ்வுடன் தொடர்புடைய அனைத்தையும் விழுங்கி ஏப்பமிட வழி வகுப்பதுதான் உலகமயமாதல் ஒப்பந்தம்." எனது நூல்.

'மனித இனம் சுதந்திரமாக முன்னேறுகின்றது என்றும் ஜனநாயகம் மக்கள்மயமாகி விழிப்புறுகின்றது என்ற எண்ணற்ற உலகமயமாதல் பற்றிய விளக்கங்ளை கடந்து, மனித இனம் அடிமைநிலைக்குள் சிதைந்து விட்டதையும், ஜனநாயகம் என்பது மறுக்கப்பட்டு அவை பரந்துபட்ட பொதுமக்களுக்கு, வெறும் சொற்களுக்கு வெளியே அவசியமற்ற ஒன்று என்பதை எதார்த்தம் நிறுவி வருகின்றது. உயர்ந்தபட்சம் மக்களை சூறையாடுவதற்கு ஏற்றவர்கள் யார் என்பதை வாக்கு போட்டு தெரிவு செய்யும் உரிமையே, உன்னதமான ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. மக்களின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பறிக்க, மக்களே அதற்கு வாக்களிக்கும் உரிமையே சுதந்திரம் ஜனநாயகம் என்பது மாற்ற முடியாத மூலதனத்தின் அடிப்படை விதியாகிவிட்டது. இதைத் தாண்டி மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் சார்ந்த எந்த தேர்வுகளும், எதார்த்தத்தில் மனிதகுலத்துக்கு இருப்பதில்லை." எனது நூல்.



இங்கு தனிமனித உணர்வுகள் சமுதாய உணர்வுக்கு உட்பட்டு இருந்தது. இதனால் தனிமனித நலன்கள், சமுதாயநலனுக்கு உட்பட்டு இருந்தது. தனிமனித முரண்பாடுகள் சமுதாய நலனுக்குட்பட்டு செயலாற்றியது. சமுதாயநலனுக்கு எதிரான முதலாவது தனிமனித முரண்பாடு, தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் இருந்தே உருவாகியது. அதாவது இதன் போதே தனிமனித நலன், சமுதாய நலனுக்கு எதிரானதாக உருவாகியது. இப்படி உருவாகிய தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டம், எப்போதும் சக மனிதனின் உழைப்பைத் தனதாக்கும் இழிவான ஒரு கண்ணோட்டம் சார்ந்தே உருவாகியது. இந்த இழிவான மனித (சமூக) விரோத போக்கு, அனைத்து மனித உழைப்பையும், தனதாக்கும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக விரோத உணர்வின் முதிர்வே உலமயமாதலாகும். இவை உலகளாவிய சமுதாய உணர்வாகவும், பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் உள்ளது. மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டித் தனதாக்கும் செயல், இயல்பில் உலகில் அனைத்தையும் தனதாக்கும் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டது. இது தனிச்சொத்துரிமை உருவானது முதலே, அதனை இறுதி இலட்சியமாகக் கொண்டு செயலாற்றுகின்றது." எனது நூல்.

No comments: