அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 8, 2011

ஸ்பெக்ட்ரம் ஆய்வறிக்கையை மறு ஆய்வுக்கு அனுப்புவதா? : ஜோஷி மீது காங்கிரஸ் பாய்ச்சல்

புதுடில்லி: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஆய்வறிக்கையை, பொதுக் கணக்கு குழு உறுப்பினர்களின் மறு ஆய்வுக்கு அனுப்ப, முரளிமனோகர் ஜோஷி முடிவு செய்துள்ளது, உள்நோக்கம் கொண்டது' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு, ஏற்கனவே ஆய்வு செய்தது. இது தொடர்பாக, ஜோஷி தாக்கல் செய்த அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து, கேள்வி எழுப்பப்பட்டது.
ஜோஷியின், இந்த தன்னிச்சையான அறிக்கையை, பொதுக் கணக்கு குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. சபாநாயகர் மீரா குமாரும் நிராகரித்து விட்டார். இந்நிலையில், பழைய பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழுவின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. புதிய பொதுக் கணக்கு குழுவின் தலைவராக, முரளி மனோகர் ஜோஷியே, மீண்டும் பதவியேற்றுள்ளார். இதையடுத்து, ஏற்கனவே தாக்கல் செய்த அறிக்கையில் திருத்தம் செய்து, பொதுக் கணக்கு குழுவின் உறுப்பினர்களின் மறு ஆய்வுக்கு அனுப்ப, ஜோஷி திட்டமிட்டுள் ளார். இது, உள்நோக்கம் கொண்டது. பாரபட்சமானது. ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அறிக்கையை, மீண்டும் ஆய்வுக்கு அனுப்புவது சரியான நடவடிக்கை அல்ல. ஏற்கனவே இறந்துபோய் விட்ட அறிக்கைக்கு உயிர் கொடுப்பதற்கு, பார்லிமென்ட் பொதுக் கணக்கு குழு தலைவர் ஒன்றும் மருத்துவர் அல்ல. இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.
காங்., மூத்த தலைவரும், பொதுக் கணக்கு குழுவின் உறுப்பினருமான சஞ்சய் நிருபம் கூறுகையில், "முரளி மனோகர் ஜோஷியின் அறிக்கையை, குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும். இந்த விஷயத்தை அரசியலாக்குவதால், ஜோஷி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவருக்கு பதிலாக, வேறு ஒருவரை, பொதுக் கணக்கு குழு தலைவராக நியமிக்க வேண்டும்' என்றார்.

பா.ஜ., ஆவேசம்: பா.ஜ., மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா கூறுகையில், ""ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, நிராகரிக்கப்பட்ட சூழ்நிலையில், அதை மறுஆய்வு செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். அதைத் தான், தற்போது ஜோஷி செய்கிறார். இந்த விஷயத்தை, காங்கிரஸ் கட்சி, தேவையில்லாமல், அரசியலாக்குகிறது,'' என்றார். 

No comments: