அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, August 8, 2011

தடையை மீறி கடலில் முற்றுகை போராட்டம் : கோட்டை விட்ட போலீசார்


ராமேஸ்வரம் : படகில் சென்று கடல் முற்றுகைப் போராட்டம் செய்த, பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனை கவனிக்காமல், மரைன் போலீசார் கோட்டை விட்டனர்.

ராமேஸ்வரத்தில் கடல் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், கடலில் இறங்கினால் கைது செய்யப்படுவர் என, போலீசாரால் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதிலும் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ஜ., தொண்டர்கள், ராமேஸ்வரத்திற்கு வந்தனர். போராட்டத்திற்கு முதல் நாள், ராமேஸ்வரம் வந்த பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், வழக்கமாக தங்கும் இடத்தைத் தவிர்த்து, ராமேஸ்வரம் துறைமுகத்தின் தெற்கு கடற்கரை பகுதியில் உள்ள விடுதியில் தங்கினார். நேற்று அதிகாலை விடுதியின் பின்புறமாக வந்த பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலர் சுப.நாகராஜன் மற்றும் தொண்டர்கள் சிலர் அங்கு தயாராக நின்ற சிறிய படகில் ஏறி, ஆழ்கடலுக்குச் சென்றனர். காலை 11.30 மணிக்கு மீனவர்கள் போல் படகிலிருந்து கரையில் இறங்கியவர்கள், மறைத்து வைத்திருந்த கொடியை தூக்கிப் பிடித்து கோஷம் போடத் துவங்கியவுடன், கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், இவர்களை கரையேற்றி மேடைக்கு அழைத்து வந்தனர். மேடைக்கு அருகில் ஆரவாரத்துடன் வந்தவர்களைப் பார்த்ததும், அங்கு கூடியிருந்த தொண்டர்கள், போலீசார் தடையை மீறி படகுகள் கட்டப்பட்டிருக்கும் பகுதிக்குச் செல்ல முயன்றனர். எஸ்.பி., காளீராஜ் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ""காலை 6 மணிக்கு நான்கு பேருடன் படகில் புறப்பட்டு, ஆழ்கடல் பகுதிக்குச் சென்று கரை திரும்பினேன். படகில் இருந்து இறங்கி, கடலில் நின்று கோஷம் போட்ட பின்பே, போலீசார் வந்து எங்களை அழைத்து வந்தனர். 6 மணி நேரம் கடல் முற்றுகை போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்; ஆனால் கைது செய்யவில்லை, என்றார். பொன்.ராதாகிருஷ்ணன் செல்வதற்கு படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறித்து புலனாய்வுத் துறை, முன்பே தகவல் கொடுத்தும், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மரைன் போலீசார், பிடிக்க முடியாமல் கோட்டை விட்டனர்.

No comments: