இந்த கூட்டத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தலைமை வகித்தார். கூட்டம் முடிந்ததும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ். அலுவாலியா கூறியதாவது: கடந்த சில நாட்களாக, ஊழல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தை பார்லிமென்டில் எப்படி கையாளுவது என்பது குறித்து, இன்று (நேற்று) விவாதிக்கப்பட்டது. எனினும், கூட்டணி கட்சிகளுடனும் இதுகுறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. தே.ஜ., கூட்டணி கட்சிகளின் கூட்டம், இன்று நடக்கிறது. இதில், இந்த விவகாரங்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். காமன்öவ்ல்த் போட்டிகளில் நடந்த முறைகேட்டில், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது, மத்திய தணிக்கை கணக்கு அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. எனவே, அவர், தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற, எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம்.இவ்வாறு அலுவாலியா கூறினார்.
சி.பி.ஐ., விசாரணை: பா.ஜ., தகவல் அறியும் உரிமைப் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விவேக் கார்க் கூறியதாவது: டில்லி காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலில், முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு தொடர்பு இருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. சாலைகள் அமைத்தது, தாழ்தள பஸ்கள் வாங்கியது, தெரு விளக்குகள் அமைத்தது, வீரர்கள் தங்குவதற்கு விடுதிகள் அமைத்தது போன்ற விஷயங்களில், டில்லி மாநில அரசு முறைகேடு செய்ததாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து டில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு எதிராக, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்துகிறது. இது தொடர்பான மனுவை, சி.பி.ஐ., இயக்குனர் ஏ.பி.சிங், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய கணக்கு தணிக்கை துறையின் முன்னாள் ஆடிட்டர் ஜெனரல் சுங்குலு ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும், இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கோர்ட்டையும் அணுகவுள்ளோம். இவ்வாறு விவேக் கார்க் கூறினார்.
பதில் அளிக்க முதல்வர் ஷீலா தீட்சித் தயார் : காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக டில்லி அரசு மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, பதில் அளிப்பதற்கான நடவடிக்கைகளை, முதல்வர் ஷீலா தீட்சித் முடுக்கி விட்டுள்ளார். கடந்தாண்டு டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக, புகார் தெரிவிக்கப்பட்டது. போட்டி ஏற்பாட்டுக் குழு தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், காமன்வெல்த் போட்டிகளில் நடந்த முறைகேடுகள் மூலம், டில்லி மாநில அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக, முதல்வர் ஷீலா தீட்சித் மீது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை தாக்கல் செய்தது. இதுகுறித்து, டில்லி மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: காமன்வெல்த் போட்டிகள் தொடர்பாக, ஏற்கனவே சுங்குலு கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதற்கு பதில் அளிப்பதற்காக, சம்பந்தப்பட்ட துறைகள் போதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமும் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், ஒவ்வொரு அலுவலகம் மீதும் கூறப்பட்டுள்ள புகாருக்கு, தகுந்த பதில்களை தயார் செய்யும்படி, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட துறைகள், இதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. ஒவ்வொரு துறையும் இது தொடர்பான விரிவான அறிக்கையை, விரைவில் தயார் செய்யவுள்ளன. இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
No comments:
Post a Comment