அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, December 29, 2008

டிவியில் கஸாபை பேச விட்டு 'லைவ்' செய்ய திட்டம்?

டிவியில் கஸாபை பேச விட்டு 'லைவ்' செய்ய திட்டம்?
Ajmal Kasab
டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் தனது பங்கு குறித்து அஜ்மல் கஸாப்பை டிவியில் பேச வைத்து அதை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பான முடிவை செவ்வாய்க்கிழமை நடந்த மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கஸாப் யார், அவர் பாகிஸ்தானியா என்று திரும்பத் திரும்பக் கூறி வருகிறது பாகிஸ்தான். பாகிஸ்தானின் இந்த செயலால் கடுப்பாகியுள்ள இந்தியா, கஸாப்பை விட்டே பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் இந்த துணிச்சலான முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.

மும்பைத் தாக்குதல் சம்பவம் குறித்த திட்டங்களை கஸாப் புட்டுப் புட்டு வைத்து, அதை உலக நாடுகள் அனைத்தும் பார்த்தால், நிச்சயம் பாகிஸ்தான் தப்ப வழியே இல்லை, அது ஒத்துக் கொண்டே ஆக வேண்டும் என்பது இந்தியாவின் கணக்கு.

இதுகுறித்து புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கஸாப்பின் பூர்வாங்கம் குறித்த அனைத்தையும் நிரூபிக்க தேவையான அனைத்தையும் நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்கிறது.



கஸாப்பின் பிறந்த ஊர், அவனது பூர்வீக வீடு, அவன் எங்கெல்லாம் பயிற்சி பெற்றான், அவனுக்கு பயிற்சி கொடுத்தது யார், அவனுடன் இணைந்து செயல்பட்டவர்கள் யார் என்ற அனைத்து விவரங்களையும் நாங்கள் கொடுத்துள்ளோம். ஆனால் நமது அண்டை நாடோ, இது போதாது என்கிறது.

இதை விட முக்கியமாக அஜ்மல் கஸாப் எழுதிய கடிதத்தை, உருதில் எழுதப்பட்ட கடிதத்தையும், பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால் அதற்கு இதுவரை பதில் வரவில்லை.

இந்த முயற்சியும் தோல்வி அடைந்தால், நம்மிடம் வேறு வழியே இல்லை. நேரடியாக கஸாப்பை தொலைக்காட்சி மூலம் பேச வைத்து அதை உலக நாடுகள் முழுவதும் பார்க்கும்படி செய்வதுதான் என்றார்.

கஸாப்பின் வாக்குமூலத்தை ஏற்கனவே புலனாய்வு அமைப்புகள் வீடியோவில் பதிவு செய்து வைத்துள்ளன. ஆனால் நேரடியாக கஸாப்பை விட்டே பேசச் செய்தால், அதை நேரடியாக ஒளிபரப்பு செய்தால் இன்னும் வலுவான ஆதாரமாக, வாக்குமூலமாக அமையும் என்பது இந்திய அதிகாரிகளின் எண்ணமாகும்.

இதன் மூலம் பாகிஸ்தான் கூறி வரும் பொய்கள் அம்பலமாகும், தொடர்ந்து அது கஸாப் யார் என்று கேட்டு வீம்பு பிடிக்க முடியாது என இந்தியத் தரப்பு உறுதியாக நம்புகிறது.

கஸாப்பின் பேச்சின்போது ஆங்கில சப் டைட்டிலுடன் அதை ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இதனால் ஒட்டு மொத்த உலகமும், கஸாப் கூறுவதை புரிந்து கொள்ள முடியும் என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறுகின்றன.

இதுகுறித்து மகாராஷ்டிர டிஜிபி விர்க் கூறுகையில், நிச்சயம் இது இந்தியாவுக்கு சாதகமாக அமையும். ஒருவன் டிவியில் தோன்றி, தனது சொந்த ஊர், சொந்த மக்கள், உறவினர்கள், தனது சகோதரிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று சொல்லும்போது அதை உலக நாடுகள் நிச்சயம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். காரணம், தனது சொந்த, பந்தங்கள் குறித்து யாரும் பொய் பேச முடியாது.

இது வலுவான ஆதாரமாக அமையும் என்பதோடு, நம்பகத்தன்மையும் பல மடங்கு அதிகரிக்கும். உலக நாடுகள் அனைத்தையும் இந்தியாவின் பக்கம் திரும்பச் செய்யவும் இது வழி வகுக்கும். பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய நெருக்கடியை இது கொடுக்கும் என்றார்.

விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments: