ராம்சே கிளார்க் அமெரிக்க முன்னாள் அட்டர்னி ஜெனரல் (அரசாங்க தலைமை வழக்குரைஞர்). அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். இராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை வெளிப்படையாக எதிர்த்ததோடு, சதாம் ஹுஸைனுக்காக வாதாட முன்வந்த சர்வதேச வழக்கறிஞர்களின் குழுவிலும் முக்கிய அங்கம் வகித்துள்ளார் ராம்சே கிளார்க். சமீபத்தில் கொல்கத்தா வந்த போது அவர் அளித்த நேர்காணலிலிருந்து ஒரு பகுதி…
கேள்வி: இஸ்லாம் குறித்து ஏனிந்த அச்சம்? அமெரிக்க அரசாங்கத்தின் ஒருவித மனப்பிராந்திதான் இந்த அச்சத்திற்கு காரனம் என விமர்சகர்கள் வாதிடுகிறார்கள். பனிப் போரின் (COLD WAR) போது கம்யூனிஸம் குறித்த அச்சம்; இப்பொழுது இஸ்லாம் குறித்த அச்சம் என்று சொல்கிறீர்களா?
பதில்: இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டுமாயின் பொருளாதார மேலாதிக்கமும், பேராசையும், அடாவடித்தனமும் கோலோச்சுகிற இக்காலச் சூழலில் மனித வாழ்க்கையை மேம்படுத்துகின்ற மாற்றுத் திட்டமாக இஸ்லாம் திகழ்கிறது. மதிப்பீடுகளும், கோட்பாடுகளும் முற்றுமாக மறக்கடிக்கப்படுகின்ற தற்காலச் சூழலில் மனித குலத்திற்கு இஸ்லாம் ஆற்றுகின்ற சேவை மகத்தானது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, தெருக்கலவரங்களில் சிக்குண்டு உயிர் வாழ்வதே பெரும் போராட்டம் என்ற நிலையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் பல ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாழ்க்கையில் இஸ்லாம் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் அவர்களைத் தொட்ட மாத்திரத்திலேயே திடீரென கண்ணியமும், அமைதியும் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றன. நம்பிக்கை கொண்டு பின்பற்ற முடிந்த ஒரு வாழ்க்கை நெறியை அவர்கள் கண்டு கொள்கிறார்கள்.
உலகமயமாக்கலின் அபாயம் வெகுநிதர்சனமானது. பொருளீட்டுதலே அதன் அடிப்படை மதிப்பீடாக இருக்கிறது. ‘மார்க் குவைன்’ என்ற நிபுணர் குறிப்பிடுவது போல் ‘தேவையில்லாத தேவைகள்’ பல்கிப் பெருகுகின்றன, அதிகப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அதிகக் கட்டுமானங்கள் நிகழ்கின்றன, அதிகமாகப் பொருட்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டு சிலரது பெட்டகங்கள் மட்டும் நிரம்பி வழிகின்றன.
இந்த அபாயகரமான போக்கால் பணக்காரர்கள் பெரும் பணமுதலை- களாகவும், ஏழைகள் பரம ஏழைகளாகவும் ஆகி விடும் சூழல் எல்லா நாடுகளிளும் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் ஏழைகளின் எண்ணிக்கை படு வேகமாக அதிகரித்து வருகிறது. செல்வம் ஒரு சிலரிடம் மட்டும் முடங்கி கிடக்கிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை சகிக்க முடியாததாக ஆகி விட்டது.
அமெரிக்க அரசாங்கம் எப்போதும் ஒரு எதிரியைச் சுற்றியே செயல் படக் கூடியது. தனது செயல் திட்டங்களின் உண்மையான நோக்கத்தை மூடி மறைக்கவும், அமெரிக்க மக்களை ஒருங்கிணைக்கவும் அமெரிக்கா ஒரு புதிய எதிரியை தேடிக் கொண்டிருக்கிறது. தேசப்பற்றை போற்றுவது அதன் உண்மையான நோக்கமன்று. பிறர் மீது மேலாதிக்கம் செலுத்துவதும், பிறரது வளங்களை அபகரிப்பதும்தான் அதனுடைய உண்மையான நோக்கம்.
அதே வேளை, இவற்றை யாரும் இனம் கண்டு கொள்ளாமல் இருக்க எதிரியை வேட்டையாடுவதாக வெளிவேடம் போடுகிறது. இங்கு தான் அமெரிக்க இராணுவம் தனது முழுமையான பங்களிப்பை செய்கிறது.
இராணுவத் தளவாடங்களுக்காக உலக நாடுகள் ஒட்டு மொத்தமாக செலவிடுவதைவிட அதிகமாக அமெரிக்கா தனது இராணுவத்திற்காகச் செலவிடுகிறது. ‘அணு ஆயுதம்’ உற்பத்தி செய்ய முயன்றாலே அழித்து விடுவோம்’ எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா, புதிய தலைமுறை அணு ஆயுதங்களையும், எந்த இலக்கைஅயும் தாக்கி அழிக்க வல்ல அதிநவீன ராக்கெட்டுகளையும் தயாரிப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
No comments:
Post a Comment