வேறு எந்த மீடியாவிலும் செய்தி வரவில்லை. கார்டியன் ஒரு துணுக்குச் செய்தியை மாத்திரம் வெளியிட்டது. அதுவும்கூட முழுமையான ஒரு பதிவு அல்ல.
பிப்ரவரி 28, 2008 அன்று தொடங்கியிருக்கிறார்கள். காஸா முனைக்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்பு அது. ஒட்டினாற்போல் ஒரு திறந்தவெளி மைதானம். குழந்தைகள் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அதிகம் சத்தம் எழுப்பாதபடி அவர்கள் தலைக்கு மேலே படர்ந்த அந்த விமானம் சட்டென்று குண்டுகளை வீசிவிட்டு கடந்து சென்றுவிட்டது. நான்கு சிறுவர்கள் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டனர். மேலும் மூன்று பேர் ரத்தம் சொட்டச்சொட்ட அலறிக்கொண்டு ஓடிபோயிருக்கிறார்கள். இறந்து போனவர்களில் எட்டு வயது குழந்தையும் அடக்கம்.
தாக்கியிருப்பது இஸ்ரேல் ராணுவம். விளையாடிக்கொண்டிருப்பவர்கள் சிறுவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகே குண்டுகள் வீசப்பட்டிருக்கவேண்டும். காரணம், அந்தப் போர் விமானங்கள் தலைக்கு மேலே மிக அருகில் பறந்து சென்றிருக்கின்றன. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் காலம் காலமாக யுத்தம் தொடர்ந்துகொண்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால், சமீப காலமாக மீடியாவில் செய்திகள் அதிகம் வராததால், பாலஸ்தீனம் அமைதியாகத்தான் இருக்கிறது போலும் என்று உலகம் நினைத்துக்கொண்டிருந்தது.
பாலஸ்தீனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்த வெள்ளை அறிக்கை இந்த அனுமானத்தைச் சிதறடித்திருக்கிறது. ஜூன் 2007 தொடங்கி ஜூன் 2008 வரை கிட்டத்தட்ட 70 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில், கவனிக்கப்படவேண்டிய விஷயம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகள். விளையாடிக்கொண்டிருந்தவர்கள். பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள். கடைத்தெருவில் ஓடிக்கொண்டிருந்தவர்கள். தெரு முனையில் கூடி கதை பேசிக்கொண்டிருந்தவர்கள்.
எனில், இஸ்ரேல் அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? குழந்கைளைத் தேர்ந்தெடுத்துக் கொல்லும் ராணுவ ஆபரேஷன் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள்? இத்தனைக் குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும்போது, செய்தித்தாள்களும் இணையத்தளங்களும் டிவி சானல்களும் என்ன செய்துகொண்டிருந்தன?
அல் ஜசீராவைப் பற்றி இங்கே அவசியம் குறிப்பிட்டாகவேண்டும். மத்தியக் கிழக்குச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிடும் நிறுவனம் இது. பாலஸ்தீன குழந்தைகள் தாக்குதல் குறித்து விரிவாக அல் ஜசீரா செய்தி ஒளிபரப்பியது.சில வீடியோ காட்சிகளையும் இணையத்தளத்தில் இணைத்திருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகளும். ஒரு குழந்தை திக்கித்திணறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டது. என் பெயர் இன்னது. நான் இங்கே குடியிருக்கிறேன். என் கண் முன்பே என் அப்பாவை அவர்கள் சுட்டுக்கொன்றுவிட்டார்கள்.
இஸ்லாமியர்களின் குரல், அல் ஜசீரா. ஆனால், பிபிசி போல் உலகெங்கும் பிரபலமான அமைப்பு அல்ல இது. அல் ஜசீராவின் இணையத்தளத்தை தினந்தோறும் கவனித்து வருபவர்களுக்கு மாத்திரமே அது தரும் செய்திகள் சென்றடையும். பாலஸ்தீன் குறித்து அல் ஜசீரா அவ்வப்போது செய்திகளை வெளியிட்டு வந்தபோதும் பரவலான உலகக் கவனத்தை அவை ஈர்க்கவில்லை.
மீடியா லென்ஸ் என்னும் நிறுவனம் இதற்கு விடை கண்டுபிடிக்கப் புறப்பட்டது. மீடியா என்று வந்துவிட்டால் எந்த வித சமரசமும் செய்து கொள்ளாமல் அனைத்து செய்திகளையும் வெளியிடுவதுதானே தர்மம்? எந்தச் செய்தியை வெளியிடவேண்டும் எந்த செய்தியை வெளியிடக்கூடாது என்று யார் முடிவு செய்கிறார்கள்? ஏன்?
கார்டியனில் பாலஸ்தீன் குறித்து எழுதிய கட்டுரையாளருக்குச் செய்தி ஒன்றை அனுப்பியது மீடியா லென்ஸ். ஐயா, உங்கள் கட்டுரையை வாசித்தோம். பலரும் வெளியிடாத அந்தச் செய்தியை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். நன்றி. ஆனால், இத்தனைக்கும் காரணமான இஸ்ரேல் ராணுவத்தைப் பற்றி நீங்கள் ஒரு வரி கூட எழுதவில்லையே. ஏன்? குழந்தைகள் இறந்துபோனார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். எப்படி, யாரால் என்பதையும் எழுதியிருக்கவேண்டாமா? கட்டுரையாசிரியரிடம் இருந்து பதிலில்லை.
அடுத்து, பிபிசியைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அன்புள்ள ஜெரிமி போவன், பிபிசியின் மத்திய கிழக்கு எடிட்டர் நீங்கள்தானே? சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து வெளிவந்திருக்கும் வெள்ளை அறிக்கையை வாசித்தீர்களா? எத்தனைக் குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா? நீங்கள் ஏன் இந்த அறிக்கையைப் பற்றி ஒரு வரி கூட விவாதிக்கவில்லை? சமீப காலங்களாக, பாலஸ்தீனில் நடைபெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை கிட்டத்தட்ட தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருவதற்கு என்ன காரணம்? தொலைக்காட்சியில் மட்டுமல்ல, இணையத்தளத்திலும் ஒரு செய்தியையும் நீங்கள் வெளியிடவில்லை. ஏன் என்று தெரிந்துகொள்ளலாமா? உங்களை விட எத்தனையோ மடங்கு சிறிய நிறுவனம் அல் ஜசீரா. அவர்களுக்கு இருப்பும் பொறுப்புணர்வில் ஒரு சிறிய அளவாவது உங்களுக்கு இருக்கவேண்டாமா?
பதிலில்லை. வெள்ளை அறிக்கையை வாசித்து அதிர்ந்து போன பலரும் பிசியைத் தனித்தனியாகத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். செய்திகளை எந்த அடிப்படையில் பிபிசி தேர்ந்தெடுக்கிறது? எந்த அடிப்படையில் ஒளிபரப்புகிறது? தவறு செய்தது இஸ்ரேல் என்பதால் கண்டும்காணாமலும் இருந்துவிட்டீர்களா? அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இல்லை. அமெரிக்கா இல்லாமல் பிரிட்டன் இல்லை. எனவேதான் அடங்கிபோய்விட்டீர்களா?
எந்தவொரு விளக்கத்தையும் பிபிசி அளிக்காததால், க்ளாஸ்கோ மீடியா க்ரூப் என்னும் நிறுவனம் பிரிட்டனில் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. மத்திய கிழக்கு பற்றி வெளிவரும் செய்திகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இஸ்ரேல், பாலஸ்தீன் இரு தரப்புச் செய்திகளும் உங்களை வந்தடைகின்றதா? 2000 பேரிடம் கருத்து கேட்டிருக்கிறார்கள். பாலஸ்தீன் பற்றி எங்களால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரேல் பற்றிய ஒரே சார்பான செய்திகள்தான் கிடைக்கின்றன. பாதிக்கப்படுபவர்கள் பாலஸ்தீனர்கள் என்பதால் அவர்களை நிறைய ஃபோகஸ் செய்யவேண்டும். 95 சதவீதத்தினரின் வருத்தம் இது.
எனில், மக்கள் எதைத் தெரிந்துகொள்ளவேண்டும் எதைத் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதை மீடியா உலகம்தான் முடிவு செய்கிறது. மீடியா என்றால் பிபிசி போன்ற பெரும் நிறுவனங்கள். அவர்கள் எதை அளிக்கிறார்களோ அதை மட்டுமே பெற்றுக்கொள்ளக்கூடிய கட்டாயத்தில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பலமான ஓர் இனத்தால் மட்டுமே இன்னொரு இனத்தை ஒடுக்கிவைக்கமுடியும். பாலஸ்தீனை இஸ்ரேல் ஒடுக்குவது போல. இஸ்ரேலுக்கு ராணுவ பலம் மாத்திரமல்ல உலகளவில் செல்வாக்கும் இருப்பதால்தான் மீடியாவை அவர்களால் தேவைக்கேற்ப உபயோகித்துக்கொள்ள முயல்கிறது.
பாதிக்கப்படுபவர்களின் செய்திகளை வெளியிட்டுவருவதால் அல் ஜசீரா இதுவரை சந்தித்துள்ள பிரச்னைகள் ஏராளம். அவர்கள் அலுவலகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். தொலைபேசி மிரட்டல்கள் வந்திருக்கின்றன. அனைத்தையும் கடந்துதான் இயங்கிக்கொண்டிருக்கிறது அந்நிறுவனம்.
நாங்கள் தருவதுதான் செய்தி. நாங்கள் அளிக்கத் தவறும் செய்திகளை வேறு யார் அளித்தாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுதான் மீடியா உலகம் வழங்கும் நீதி. பிபிசி போன்ற பெரும் நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு இருக்கிறது. மக்களிடையே நல்ல பெயரும் செல்வாக்கும்கூட இருக்கிறது. மாறுபட்டு சிந்திக்கும் இணையத்தளங்கள் கண்காணிக்கப்படுகின்றன. வலைப்பதிவாளர்களின் தளங்கள் கடத்தப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. செல்வாக்கில்லாத சிறு பத்திரிகை அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன. பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவான உண்மை இது.
பிபிசி, சிஎன்என், டைம், கார்டியன் போன்ற நிறுவனங்களிடம் இருந்துதான் பாலஸ்தீன் பற்றியும் இராக் பற்றியும் ஆப்கனிஸ்தான் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகம் தினம் தினம் தெரிந்துகொள்ளமுயல்கிறது.
Wednesday, January 7, 2009
மீடியாவை நம்பலாமா?
மீடியாவை நம்பலாமா?
நியாயமாகப் பார்த்தால் பிபிசி ஒளிபரப்பியிருக்கவேண்டும். நாங்கள் எந்த விதச் சார்பு நிலையையும் எடுக்கமாட்டோம். நடுநிலையுடன் செய்திகளை அளிப்போம் என்றெல்லாம் வாய் கொள்ளாமல் தன்னைத்தானே புகழ்ந்துகொள்ளும் அந்நிறுவனம் அப்படி ஒரு சம்பவமே நடக்காதததுபோல் அமைதியாக இருந்துவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment