உலகம் அறிந்து கொல்ல, புதிய போர்முறை» சுல்தான்
தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் தினமும் நிகழும் மிருகத்தன நிகழ்வுகளின் படங்களைக் காணும் போது, நாம் இருபத்தோறாம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என நினைக்கத் தோன்றுகிறது. குழந்தைகளும் முதியவர்களும் அப்பாவிகளும் இரக்கமற்ற வகையில் குரூரமாக கொல்லப் படுகிறார்கள்.
கடைத் தெருக்கள், மருந்துக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிக் கட்டிடங்கள், தனியார் குடியிருப்புகள், பள்ளிவாயில்கள், கலாச்சார மையங்கள், சாலைகள், வியாபாரத் தலங்கள், போன்ற மக்கள் கூடுமிடங்கள் குறி வைத்து தகர்க்கப் படுவதை உலகமே கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
எப்போதும் போல் அரபு நாடுகள் மவுனியாகி விட்டன. இந்த முடியாட்சி நாடுகள் அடுத்த முஸ்லீம் நாட்டில் நடக்கும் இனப்படுகொலையை, மனித உரிமை என்றால் என்னவென்றே உணராமல் வேடிக்கை பார்க்கின்றன.
மனித உரிமைக் காப்பதையே முழுநேரத் தொழிலாக(?)க் கொண்ட ஐரோப்பிய நாடுகள், நடக்கும் நிகழ்வுகளிலிருந்து தம் கண்களை திருப்பிக் கொண்டு ஏதுமே நடக்காதது போல் செயல்படுகின்றனர்.
நாளை அமெரிக்காவை பொறுப்பேற்க போகும் பாரக் ஒபாமாவும் மவுனம். சுதந்திரம், மனித உரிமை முதலியவற்றின் முதல் எதிரியான தற்போதைய அதிபர் போல இவரும் அதே அமெரிக்க பாராம்பர்யத்தை பின்பற்றுபவர்தானோ? வெள்ளை மாளிகையில் வெள்ளைத் தோலுக்குப் பதிலாக கருத்த தோலுள்ளவர் ஆனால் உள்ளங்கள் கருத்தவைதான். மாறப் போவதில்லை.
காஸாவில் இத்துணை அப்பாவிகளின் மரணத்துக்கும் காரணமாகிப்போன ஹமாஸ் போராளிகள் நிலத்தடி சுரங்கங்களில். இந்த மரணங்களில் ஹமாஸூக்கும் பொறுப்பிருப்பதை அவர்கள் உணர்கிறார்களா? அவர்களின் செயல்களுக்குரிய விலையை இந்த அப்பாவிகள் தருகின்றனரே. இது உண்மையான அவமானமில்லையா?
இஸ்ரேலுக்கு தனதான காரணங்கள் இருக்கலாம். ஆனால் அக்காரணங்கள் அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. தன்னுடைய நிலப்பரப்பை, உரிமையைக் காத்துக் கொள்ள நாடுகளுக்கிடையில் போர் மூளலாம். அவை இரு நாட்டு இராணுவ கேந்திரங்களை, படைகளை, தளவாடங்களை மட்டுமே அழிப்பதாக இருக்க வேண்டுமேயொழிய, மக்களின் அன்றாட புழங்குமிடங்களை குறி வைத்து தகர்ப்பதாக இருக்கக் கூடாது. குழந்தைகளை, முதியவர்களை, அப்பாவிகளை குறி வைத்துத் தாக்கும் இஸ்ரேலியத்தனம் மன்னிக்க முடியாதது.
இதுபோன்ற இரக்கமற்ற தாக்குதலை இஸ்ரேலின் வெளியில் வாழும் ஒரு நல்ல மனதுடைய யூதரால் கூட ஏற்றுக் கொள்ள இயலாது.
காஸாவில் இத்தனை நடக்கின்ற போதும் மத்திய கிழக்கலுள்ள அண்டை முஸ்லீம் நாடுகளான சிரியா, சவுதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் முதலிய அனைத்தும் ஊமைகளாய். துருக்கியின் தய்யிப் எர்டோகன், லிபிய அதிபர் முஅம்மர் அல் கடாபி, ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதிநிஜாத் போன்றவர்கள் மட்டும் தங்களின் பலத்த எதிர்ப்பை உலக அரங்கில் பதிவு செய்தது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.
சில நாடுகளில் மக்களின் எதிர்ப்பு பதிவு செய்யப்பட்ட போதிலும், மேற்கத்திய நாடுகள் சுதந்திரம் மற்றும் மனித உரிமைக் கோட்பாடுகளில் தங்களின் இரட்டை வேடத்தை எப்போதும் போல் அப்பட்டமாக்கியுள்ளன.
பொது மக்களும், குழந்தைகளும் முதியவர்களும் காஸாவில் கொல்லப்படுவதை இன்று வேடிக்கை பார்க்கும் எந்த நாட்டுத் தலைவருக்கும் சுதந்திரம், மனித உரிமை என்ற பேச்செடுக்க இனி எந்த தகுதியோ அதிகாரமோ இல்லவே இல்லை.
No comments:
Post a Comment