கிறித்துவர்களுக்கு எதிரான
ஒரிசா கலவரத்தில் ஒரு லட்சம் பேர் தொடர்பு
குற்றவாளிகள் பட்டியலில் 12 ஆயிரம் பேர்!
ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில், கடந்த செப்டம்பரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்துத் துறவி கொல்லப்பட்டதை அடுத்து கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாட் கணக்கில் தொடர்ந்த இந்த கலவரத்தில் 39 பேர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து, இப்போது முதல் தகவல் அறிக்கைகளைத் தயார் செய்துள்ளனர். மொத்தம் 698 அறிக்கைகள் தயாரித்துள்ளனர். இவற்றில், 12 ஆயிரம் பேர் மீது நேரடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் 88 ஆயிரம் பேருக்கு தொடர்பு உள்ளதாக பெயர் குறிப்பிடப்படாமல் இந்த முதல் தகவல் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கைகள் தயாரிப்பது இன்னும் முடிவடையவில்லை; இன்னும் 75 அறிக்கைகள் தயார் செய்யப்படும் என்று தெரிகிறது. அப்போது இன்னும் சிலர் நேரடியாக குற்றம் சாட்டப்படுவர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், ஒரிசாவில் நடந்த கலவரங்கள் குறித்து விசாரணை செய்து முடிப்பது, ஆதாரங்களைத் திரட்டுவது, குற்றவாளிகளை தண்டனை பெறச் செய்து சிறைகளில் அடைப்பது என்பது இதுவரை இல்லாத வகையில் பெரும் சவாலான காரியமாக இருக்கும்.
ஒரு லட்சம் பேரை பிடித்து விசாரிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். இப்போதைக்கு நாங்கள் நேரடியான தொடர்புள்ள குற்றவாளிகளைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம் என்று கூறினார்.
நேரடி குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையில் அடைக்க வேண்டுமானால், கந்தமால் சிறை போதாது; அதனால், மற்ற மாவட்ட சிறைகளிலும் அவர்களை அடைப்பது பற்றியும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
கந்தமால் விசாரணை தொடர்பான பணிகளில் 50 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment