அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, May 19, 2009

15வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வீழ்ச்சி!


நடந்து முடிந்த 15 ஆவது மக்களவை தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக பாஜக மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளது. சமீப காலங்களில் பாஜக, வட மாநிலங்களிலிருந்து தென் மாநிலங்களில் தன் ஆதிக்கத்தை வளர்க்கும் வகையில் கவனத்தைத் திருப்பி, பல்வேறு பிரதேச கட்சிகளுடன் கூட்டணிகளை ஏற்படுத்தி வந்தது. இதில் இம்முறை கர்நாடகாவில் சொல்லும்படியான ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடிந்தாலும் தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த தேர்தல்களை ஒப்பு நோக்கும் போது மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளதை அறிய முடிகிறது. கடந்தத் தேர்தல்களில் தமிழகத்திலுள்ள முக்கிய இரு கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவோடு மாறி மாறி கூட்டணி வைத்து தன் இருப்பை உறுதி செய்து வந்தது. இம்முறை தமிழகத்தில் எந்தப் பிரதான கட்சியும் பாஜகவோடு கூட்டு வைக்க தயாராகாத நிலையில் சரத்குமார், கிருஷ்ணசாமி, கார்த்திக் போன்றவர்களின் சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்து களம் கண்டது. ஆனால் பயன் ஏதும் விளையவில்லை.

அதே போன்று கேரளத்திலும் தன் ஆதிக்கத்தை வளர்க்கக் கடந்தப் பல தேர்தல்களில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அதற்குத் தக்க வகையில் ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவுக்குக் கேரளத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்தே வந்தது. ஆனால் இம்முறை, கடந்த 2004 தேர்தலோடு ஒப்பிடுகையில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளை இழந்து பரிதாபமாக நிற்கின்றது.

ஒட்டுமொத்தமாக கேரளத்தில் கடந்த 2004 தேர்தலில் சுமார் 18 இலட்சம் வாக்குகளைப் பெற்ற பாஜக, இம்முறை சுமார் 8 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. அதிலும் குறிப்பாக கேரளாவின் தலைநகரமான திருவனந்தபுரம் தொகுதி மிக முக்கியமானதாகும். இத்தொகுதியில் திரு. இராஜகோபால் தனது கடுமையான கட்சி பணிகளின் மூலம் குறிப்பிடத்தகுந்த வாக்குகளைப் பாஜகவிற்குச் சம்பாதித்து வைத்திருந்தார். கடந் 2004 தேர்தலில் இத்தொகுதியில் பாஜக சுமார், 2,20,000 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இம்முறை தேர்தலில் பாஜக வெறும் 84,094 வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அதாவது கடந்தத் தேர்தலை ஒப்பிடும் போது இம்முறை சுமார் 1,40,000 வாக்குகளை இத்தொகுதியில் மட்டும் பாஜக இழந்துள்ளது.

இதற்கிடையில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்டு கட்சியின் இராமசந்திரன் நாயரை விட 99,998 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சசி தரூர், ஒரு ஆர்.எஸ்.எஸ் அனுதாபி என்றும் அவரை ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வாக்காளர்கள் புறக்கணித்த வேளையில், தங்களுக்குச் சாதமான சசி தரூரை வெற்றி பெற வைக்கும் நோக்கில் பாஜக திட்டமிட்டே தங்கள் வாக்குகளைச் சசி தரூருக்கு வழங்கி வெற்ரி பெற வைத்துள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

எது எப்படியோ, தென்னகத்தில் உறுதியாக கால் ஊன்ற நினைக்கும் பாஜகவிற்கு இத்தேர்தல் மர்ம அடி கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை!

No comments: