அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, May 21, 2009

ஜின்னா சாகிப்

சாதத் ஹசன் மண்ட்டோ
தமிழாக்கம்: ராமாநுஜம்

“1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன். என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.’’

இதைச் சொன்னது, சினிமா நடிகர் அசாத் - இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. நாடு துண்டாக்கப்படுவதற்கு முன்பு பம்பாய் திரைப்படத்துறையில் இருந்தான். அதற்குப் பிறகு லாகூரில் குடியிருக்க, அங்கு மற்ற சக நடிகர்கள் போல வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான். பாகிஸ்தானில் திரைப்படத்துறை அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவன் காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்தவன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்ததால், ஒரு நாள் அவனைத் தேடிச் சென்றேன். அவனுடைய கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு நான் பல சந்திப்புகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இனி அசாத்தே பேசட்டும்.

“ஒரு சமயம் காலிப் இளமையாய் இருந்தது போல் தான் நானும் இருந்தேன். அந்த மாபெரும் கவிஞன் அரசியல் இயக்கத்தால் உள்ளிழுக்கப் பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நான் அகில இந்திய முஸ்லீம் லீக்கினுடைய உறுதியான தொண்டன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். மற்ற எத்தனையோ இளைஞர்கள் போலவே தான் நானும் காஸியாபாத் கிளையின் நேர்மையான உறுப்பினராக இருந்தேன். நேர்மையாக என்று சொல்வதற்குக் காரணம் என்னிடம் இருந்தது எல்லாம் அது ஒன்று தான்.
முகமது அலி ஜின்னா டெல்லி வந்த போது, அதுவரை, அந்த அளவில் எவருமே பார்த்திராத ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டதை என்னால் தெளிவாக நினைவு கூர முடிகிறது. காஸியாபாத் வாலிபர்களான நாங்கள் அந்த நிகழ்வு பெரும் வெற்றியை அடைவதற்குச் சாதாரணமாக பங்காற்றவில்லை.

எங்கள் கிளையை தலைமை ஏற்று நடத்தியவர் பின்னாளில் பாகிஸ்தானின் கவிஞர் என்று அறியப்பட்ட, மிகவும் துடிப்புள்ள வாலிபனான ‘அன்வர் குரேஷி’யேதான். அந்த நிகழ்ச்சிக்குப் பிரத்யேகமான கவிதை ஒன்றை அவர் எழுதித்தர நாங்கள் எல்லோரும் அதை ஊர்வலத்தில் பாடிக்கொண்டு சென்றோம். தாளம் தவறியதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆனாலும் மிகவும் உணர்ச்சிபூர்வமாக நாங்கள் பாடிக்கொண்டு சென்றோம். எங்கள் தொண்டையில் இருந்து வெளியேறிய சுருதி சரியானதா தவறானதா என்றெல்லாம் நாங்கள் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. காலிப் சொன்னதை நினைத்துப்பார்: ‘நீ என்ன பேசுகிறாய் என்பதோ, நீ பேசுவது தாளத்துக்கு உட்பட்டதா, இல்லையா என்பதோ முக்கியமான விசயமே இல்லை. எது முக்கியமானது என்றால் நீ பேச வேண்டும்.’ டெல்லியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஜும்மா மசூதியில் இருந்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட ஊர்வலம் தொடங்கி விண்ணைப் பிளக்கும் கோஷங்களோடு சாந்தினி சௌக், லால் கன்வான், ஹெளக் காஸி மற்றும் சௌரிபஜார் வழியாக சென்று முஸ்லீம் லீக் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்தில்தான் முகமது அலி ஜின்னாவுக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காயிதே அஸாம், அதாவது மாபெரும் தலைவர் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதாக நினைக்கிறேன். ஆறு குதிரைகள் பூட்டிய திறந்த வண்டியில் அவர் இருந்தார். ஒவ்வொரு முஸ்லீம் லீக் தலைவரும் அன்று எங்களோடு ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். ஆண்கள் மிதிவண்டி, மோட்டார் வண்டி, ஏன் ஒட்டகம் இழுத்த வண்டியில் கூட வந்தார்கள். எல்லாம் மிக ஒழுக்கத்தோடு நடந்தது. எல்லாம் கண்டிப்பாக ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நம் தலைவருக்கு அது பெருத்த சந்தோசத்தைக் கொடுத்தது.

என்னைப் பொருத்தமட்டில், அந்த ஊர்வலம் மிகவும் உணர்வு பூர்வமாக என்னைப் பாதித்தது. நான் அதனால் முழுவதுமாக ஆட்கொள்ளப்பட்டேன். என் கண்கள் முதல் முறையாக ஜின்னா சாகிப்பைப் பார்த்த போது எப்படி உணர்ந்தேன் என்பதைக் கூட என்னால் இப்போது சரியாக நினைவு கூர முடியவில்லை. நான் திரும்பிப் பார்த்து அந்த உணர்வுகளை ஆராய முற்பட்டால், நான் அவரை நேரடியாகப் பார்ப்பதற்கு முன்னரே அவர் மீது இருந்த ஈடுபாட்டில் யாரோ ஒருவர் எவரையோ சுட்டிக்காட்டி, “அதோ உன்னுடைய காயிதே அஸாம்’ என்று சொல்லியிருந்தாலும் நான் அதை முழுமையாக நம்பி அவரைப் பார்த்ததில் தடுமாற்றம் கொள்ளும் அளவிற்கு சந்தோசப்பட்டிருப்பேன் என்றே நினைக்கத் தோன்றுகிறது. நம்பிக்கை அப்படிப்பட்டது தான். ஓரு இழை சந்தேகமும் இல்லாமல் மிகச் சுத்தமானது. பழைய டெல்லி சாலைகளில் அந்த ஊர்வலம் சுழன்று கொண்டிருந்த போது, ஜின்னா சாகிப்பைப் பல கோணங்களில் இருந்து பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது திடீரென்று ஓர் எண்ணம் என் மண்டைக்குள் உதித்தது. எப்படி என்னுடைய காயிதே, என்னுடைய மிகப்பெரிய தலைவர் இவ்வளவு பலவீனமாகவும் உடைந்து போகிறாற் போலவும், மெலிந்தும் இருக்க முடியும்!

காலிப் ஒரு முறை, அவரைப் பார்க்க வந்த அவருடைய காதலியைக் கண்டு அதிசயித்துப் போனாராம். ஆச்சரியத்தில் அந்தக் கவிஞர் அவளையும், அவள் நுழைந்த அந்த வீட்டையும் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாராம். ஏறக்குறைய நானும் அப்படித்தான் உணர்ந்தேன். உடைந்து போகிறாற் போல் இருக்கும் காயிதேவின் உடலையும், என்னுடைய திடமான கட்டுமஸ்தான உடலையும் பார்த்து, ஒன்று நான் சுருங்கி விட வேண்டும் அதாவது நான் அவரைப்போல் ஆகி விடவேண்டும் அல்லது அவர் என்னைப்போல் மாறிவிட வேண்டும் என்றே விரும்பினேன். அவருக்குக் கேடு நினைப்பவர்களிடம் இருந்து அதுவும் அப்படி நினைப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று என்னிடம் சொல்லப்பட, அவர் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தேன்.

வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க, கலாப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்னுள் மிக ஆழத்தில் மறைந்துக் கிடந்த துடிப்பும் என் இருப்புக்கொள்ளாமையோடு சேர்ந்துக் கொண்டது. அதனால் பம்பாய்க்கு பயணம் செய்து அந்த நகரத்தில் என் அதிர்ஷ்டத்தைப் பரிசோதித்து பார்ப்பது என்று ஒரு நாள் முடிவு செய்தேன். எனக்கு எப்போதும் நாடகம் நடிப்பு என்று ஈடுபாடு உண்டு அதனால் நான் அங்கு இருந்தேன். தேச சேவை செய்ய வேண்டும் என்ற உந்துதலைக் காட்டிலும் ஒரு நடிகனாக வேண்டும் என்பதே என்னுள் மேலோங்கி இருந்தது. மனிதன் தான் எத்தகைய முரண்பாடுகளின் மொத்தத் தொகுப்பு! நான் பம்பாயை அடைந்த போது, இம்பீரியல் சினிமா கம்பெனி தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தது. ஆனால் அதற்குள் நுழைவது ஏறக்குறைய சாத்தியமில்லாத காரியமாகவே இருந்தாலும் நான் தொடர்ந்து முயற்சித்து, இறுதியில் தினக்கூலியாக எட்டணா வாங்கும் துணை நடிகனானேன். வெள்ளித்திரையில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற என் கற்பனையை இது எவ்விதத்திலும் தடைசெய்யவில்லை.

இயல்பாகவே நான் எல்லோரிடமும் இணக்கமாகப் பழகக்கூடியவன். எனக்கு இனிமையாகப் பேசத் தெரியாமல் இருந்தாலும் விட்டெறிந்து பேசக்கூடியவன் இல்லை. என்னுடைய தாய்மொழி உருதுவாக இருந்ததால் - கம்பெனியில் எல்லா பெரிய நட்சத்திரங்களும் இதை அறியாதவர்களாக இருந்தது, எனக்கு உதவக்கூடியதாக இருந்தது. இந்த மொழி பேசப்படாத பம்பாயில், அது எனக்கு உதவியாக இருந்தது. ஆனால் எங்கு பேசப்படுகிறதோ, அதாவது டெல்லியில் அப்படி இல்லாதது விசித்திரமானது தான். திரைப்படங்களில் பேசப்படும் மொழி பொதுவாக உருது அல்லது இந்துஸ்தானியாக இருந்ததால் பெரிய நட்சத்திரங்களுக்கான வசனங்களை எழுதவும் படிக்கவும் நான் மிகவும் அவசியமானவனாக இருந்தேன். அவர்களுடைய விசிறிகள் எழுதும் கடிதங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டி, அதற்குப் பதில்களும் எழுதிக் கொடுப்பேன் ஆனாலும் இப்படி படிப்பதும், எழுதுவதும் என்னுடைய குறிக்கோளை அடைவதற்கு எவ்விதத்திலும் பயனுள்ளதாக இல்லாமல் இருந்தது. “எக்ஸ்ட்ரா’ தான் நான். ‘எக்ஸ்ட்ரா’வாகவே தான் இருந்தேன்.

அந்த நாட்களில் இம்பீரியல் கம்பெனியின் உரிமையாளர் சேத் அர்தேஷிர் இரானியினுடைய அந்தரங்கக் காரோட்டியாக இருந்தவனிடம் - அவனுடைய பெயர் புதான், நான் நட்புக் கொண்டிருந்தேன். அவன் செய்த முதல் காரியம், எனக்கு வண்டி ஓட்டக் கற்றுக் கொடுத்தது தான். அவனுடைய ஓய்வு நேரங்களில், பொதுவாக அது பெரிய அளவில் கிடைப்பது இல்லை என்றாலும், அதை எனக்குக் கற்றுக் கொடுத்தான். அவன் செய்து கொண்டிருப்பதை, சேட் கண்டு பிடித்துவிட்டால் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார் என்று எப்போதும் பயந்துக் கொண்டிருந்தான். இந்தக் கட்டுப்பாடுகளால், என்னுடைய புத்திசாலித்தனம் மற்றும் உற்சாகத்தை மீறி, மோட்டார் வண்டி ஓட்டுவதில் நான் நிபுணத்துவம் பெற முடியாமல் போயிற்று. என்னால் செய்ய முடிந்தது சந்தர்ப்பம் கிடைத்த போது எல்லாம் பம்பாயில் நூல் பிடித்தாற்போல் நேராக இருந்த சாலைகளில் மட்டுமே சேத் அர்தேஷிர் இரானியின் வண்டியை ஓட்டமுடிந்தது. ஒரு கார் எதனால் ஓடுகிறது என்றோ, அதன் உள்ளே இருக்கும் பாகங்கள் என்னவென்றோ, எனக்குச் சுத்தமாக எதுவும் தெரியாது.

நடிப்பு என்னை முழுமையாய் ஆட்கொண்டது என்றாலும் அது என் மண்டைக்குள் மட்டுமே இருந்தது. என் இதயம் முழுக்க, முஸ்லீம் லீக் மீதும், அதை நடத்திச் செல்லும் சக்தியாய் இருந்த காயிதே அஸாம் முகமது அலி ஜின்னா மீதும் காதலால் நிரம்பியிருந்தது. இம்பீரியல் சினிமா கம்பெனியில் வேலை இல்லாமல் நேரத்தைக் கழித்த போதும், கென்னடி பாலம், பின்டி பஜார், முகமது அலி சாலை, அல்லது விளையாட்டு இல்லம் என்று சுற்றிக் கொண்டிருக்கும் போதும், காங்கிரஸ் முஸ்லீம் லீக்கை எப்படி நடத்துகிறது என்பது பற்றி முடிவில்லாமல் பேசிக்கொண்டே இருப்போம். இம்பீரியல் கம்பெனியில் எல்லோருக்கும். நான் முஸ்லீம் லீக்கின் தீவிர ஆதரவாளன் என்றும், காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் தொண்டன் என்றும் தெரிந்து தான் இருந்தது. அந்த நாட்களில் காயிதே அஸாம் மீது பற்றுக் கொண்டிருப்பதனாலேயே, ஒரு இந்து நம்முடைய எதிரியாகிவிடவில்லை. ஒருவேளை, இம்பீரியல் கம்பெனியில் காயிதே பற்றி எல்லோருக்கும் தெரிந்திராமலும் இருக்கலாம். நான் அவரைப் புகழ்ந்து பேசும் போது, எனக்கு மிகவும் பிடித்த ஒரு சினிமா நடிகரைப்பற்றி பேசிக்கொண்டிருப்பதாகக்கூட சிலர் நினைத்திருக்கலாம்.

அந்த நாட்களில் மிகவும் பிரபலமான கதாநாயகனான நடிகர் டி.பில்லிமோரியா ஒரு நாள், “டைம்ஸ் ஆப் இந்தியா’’ பத்திரிகையை என்னிடம் கொடுத்து, “பார், உன்னுடைய ஜின்னா சாகிப் இதில் இருக்கிறார்’’ என்றான். நான் அவருடைய புகைப்படம்தான் அன்று வந்திருக்கிறது என்று நினைத்தேன். ஆனால் எந்தப் பக்கங்களிலும் அதைக் காண முடியாததால், “அவருடைய படம் எங்கே இருக்கிறது?’’ என்று கேட்டேன். ஜான் கில்பட் பாணியில் தாடி வைத்திருந்த பில்லி மோரியா புன்னகைத்தவாறே, “போட்டோ கீட்டோ ஏதும் இல்லை. ஒரு விளம்பரம் வந்திருக்கிறது’’ என்றான். “அது என்ன விளம்பரம்?’’ என்று கேட்டேன். பில்லி மோரியா என்னிடம் இருந்த பத்திரிக்கையைப் பிடுங்கி ஒரு பத்தியைச் சுட்டிக் காட்டினான். “திரு. ஜின்னாவின் கார் கொட்டகைகளையும், அதில் உள்ள வண்டிகளுக்கும் பொறுப்பானதொரு மோட்டார் மெக்கானிக் தேவை’’ அவனுடைய ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதியை பார்த்தேன். பில்லி மோரியாவுக்கு உருது தெரிந்த அளவிற்குதான் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது என்றாலும், அதில் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நான் அந்த நொடியிலேயே படித்துவிட்டது போல், “.....ஓ!’’ என்றேன்.

‘நான் முன்னரே சொன்னது போல், என்னுடைய கார் ஓட்டும் திறமை, சாலை நூல் பிடித்தாற் போல் நேராக இருக்கும் பட்சத்தில் அதை நகர்த்துவதற்கு மட்டுமே போதுமானது. கார் எப்படி வேலை செய்கிறது என்று ஏதும் அறியாதவனாகவே இருந்தேன். எனக்குத் தெரிந்தது எல்லாம், வண்டியை உயிர் பெற வைக்கும் பொத்தானை அழுத்தினால், இஞ்சின் இயங்கும். சிலசமயங்களில் அது இயங்க மறுப்பதும் உண்டு. ஆனால், யாரேனும் ஏன் என்று கேட்டால், மனிதனுடைய அறிவிற்கு அப்பாற்பட்ட, மாற்றமுடியாத மோட்டார்வண்டி விதிகளில் ஒன்று என்று தான் நான் பதில் தந்திருப்பேன். விளம்பரத்தில் என்ன விலாசம் இருக்கிறது என்று பில்லி மோரியாவிடம் கேட்டு அதை மனப்பாடம் செய்து கொண்டேன். வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக இல்லை என்றாலும், அவரை மறுபடியும் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அடுத்த நாள் காலையில் காயிதே அஸாம் இல்லத்திற்குப் போவது என்று முடிவெடுத்தேன்.

என்னுடைய கரங்களில் நான் வைத்திருந்த ஒரே தகுதி, காயிதே மீது நான் கொண்டிருந்த பற்று மட்டும் தான். மலபார் ஹில்லில், மௌண்ட் பிளசன்ட் வீதியில் இருந்த அவருடைய இல்லத்தை அடைந்தேன். பிரம்மாண்டமான பங்களாவிற்கு வெளியே பெரிய அளவில் தைக்கப்பட்ட அப்பழுக்கற்ற வெள்ளை சல்வாரும், மிகச் சரியாகக் கட்டப்பட்டிருந்த பட்டு டர்பனும் அணிந்திருந்த ஒரு பட்டான் காவல்காரனும் நின்று கொண்டிருந்தான். எனக்கு ரொம்பவும் சந்தோசமாய் இருந்தது. அங்கே திடகாத்திரமாக இன்னொருவனும் இருக்கிறான். மனதிற்குள்ளே அவனை என்னோடு ஒப்பிட்டுப் பார்த்து, எங்களுக்கிடையே ஏதேனும் வித்தியாசம் இருந்தாலும், அது மிக சொற்பமானதுதான் என்று நிம்மதியடைந்தேன்.

அங்கு ஏற்கனவே நம்பிக்கையோடு வந்திருந்த எல்லோரிடமும், இந்த வேலைக்கான தகுதி அவர்களிடம் இருக்கிறது என்று நிரூபிக்கச் சான்றிதழ்கள் இருந்தன. நான் அமைதியாக அவர்களோடு சேர்ந்து கொண்டேன். வண்டி ஓட்டுவதற்கான அனுமதியைக் கூட நான் பெற்றிருக்கவில்லை என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும். காயிதே அஸாமை மீண்டும் ஒரே ஒருமுறை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அங்கு காத்திருந்தேன். எந்த நிமிடத்திலும் அங்கு வரலாம் என்று எதிர்பார்ப்போடு இருந்தேன். திடீரென்று அவர் முன் வாசலுக்கு வெளியே இருந்தார். எல்லோரும் இறுக்கமான நிலைக்கு வர, நான் ஒரு பக்கமாய் என்னை மறைத்துக்கொண்டேன். அவருக்கு அடுத்தாற் போல் மிக உயரமாகவும், நேர்த்தியாகவும் அவருடைய சகோதரி பாத்திமா நின்று கொண்டிருந்தார். பத்திரிக்கைகளிலும், செய்தித்தாள்களிலும் பலமுறை அவருடைய படத்தைப் பார்த்திருக்கிறேன். காயிதேயிடமிருந்து சில அடிகள் தள்ளி மரியாதையோடு நின்று கொண்டிருந்தவர், அவருடைய காரியதரிசி மட்லூப் சாகிப் (மட்லூப் ஹூசைன் சையத்)

காயிதே அவருடைய ஒற்றைக்கண் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு வேலைக்காக வந்திருந்த ஒவ்வொருவரையும் மிகக் கவனமாக அளந்தெடுத்தார். ஒற்றைக் கண் கண்ணாடி அணிந்திருந்த அந்தக் கண்கள், என் மீது நிலைத்து நின்றது. நான் மேலும் சுருங்கிப்போனேன். பிறகு ஊடுருவக்கூடிய அவருடைய குரல், “யூ...’’ என்று சொல்வதைக் கேட்டேன். அந்த அளவிற்கு ஆங்கிலத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றாலும் யார் அந்த ‘யூ?’ எனக்கு அடுத்தாற்போல் நின்று கொண்டிருந்தவன் தான் என்று தீர்மானமாக இருந்ததால், என்னுடைய முழங்கையால் அவனை இடித்து, “அவர் உன்னைத்தான் அழைக்கிறார்’’ என்றேன். என்னுடைய கூட்டாளி திக்கித் திக்கி, ‘சாகிப், நானா?’ என்று கேட்டான். மீண்டும் எழுந்த காயிதே அஸாமின் குரல் “நோ... யூ’’ என்றது. அவருடைய மெலிந்த, ஆனால் இரும்பு போன்ற விரல் என்னைக் குறிபார்த்து இருந்தது.

நான் நடுங்கத் தொடங்கினேன். ‘சார், நானா?’ ‘ஆமாம்’ என்று பதில் தந்தார். அவருடைய இந்த ஒரு வார்த்தை ராயல் என்பீல்ட் 303 துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட தோட்டா போல் என்னுள் பாய்ந்து சென்றது. காயிதேக்காக எவ்வளவோ கோஷங்கள் எழுப்பிய இந்தத் தொண்டை இப்போது முற்றிலும் வறண்டு கிடந்தது. என்னால் பேசமுடியவில்லை. அவர் ஒற்றைக்கண் கண்ணாடியை எடுத்துவிட்டு, “ஆல்ரைட்’’ என்றார். நான் எவ்வாறு உணர்கிறேன் என்பதை எப்படியோ அவர் உணர்ந்து கொண்டதைப் போலவும், என் அவஸ்தைகளை ஓர் முடிவுக்குக் கொண்டுவருவதற்காகவும், ‘ஆல்ரைட்’ என்று சொன்னது போல் தான் எனக்குத் தெரிந்தது. அவர் திரும்பி, இளமையாகவும் அழகாகவும் இருந்த அவருடைய காரியதர்சியைப் பார்த்து ஏதோ சொல்லிவிட்டு, அவருடைய சகோதரியோடு வீட்டிற்குள் சென்றார். நான் அங்கிருந்து ஓடி விட எத்தனித்த போது, மட்லூப் பேசினார்: ‘சாகிப் நாளை காலை பத்து மணிக்கு நீ இங்கு ஆஜராக வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்’ என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றும் என்னால் கேட்க முடியவில்லை, காயிதே அஸாம் விளம்பரம் கொடுத்த வேலைக்கான தகுதி ஏதும் என்னிடம் இல்லை என்றும் என்னால் சொல்ல முடியவில்லை. பிறகு மட்லூப் சாகிப் வீட்டிற்குள் திரும்பிப்போக, நானும் வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் காலை மிகச்சரியான நேரத்தில் அவருடைய இல்லத்தில் ஆஜரானேன். காயிதேவின் காரியதரிசி, சாகிப்புக்கு என்னைப் பிடித்திருக்கிறது என்றும், நான் உடனடியாகக் கார் கொட்டகைக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்றும் சொன்னார். எனக்கு ஏதும் தெரியாது என்றும், காயிதே அஸாம் ஏமாற்றப்பட்டார் என்றும் நான் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய முதல் எண்ணமாக இருந்தது. நான் வெறுமனேதான் வந்தேன் என்றும், எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதையையும் ஒப்புக்கொள்ளாமல் ஏன் மௌனமாக இருந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. கார் கொட்டகையின் சாவிக் கொத்து என்னிடம் கொடுக்கப்பட்டு காயிதேயின் நான்கு கார்களுக்கு நான் பொறுப்பாளனானேன். அவ்வப்போது நான் ஓட்டிய ஒரே வண்டி சேத் அர்தேஷிர் இரானியுடைய பைக் மட்டுமே, அதுவும் நேரான சாலைகளில் மட்டும். ஆனால் மௌண்ட் பிளசன்ட் தலைசுற்றும் வளைவுகளையும் திருப்பங்களையும் கொண்டது. லட்சக்கணக்கான முசல்மான்களின் வாழ்க்கை, எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் சார்ந்திருக்கிறதோ, அவரைப் பாவம் இந்த அசாத் ஓட்டிச்செல்ல வேண்டும் - அதுவும் மிகவும் ஆபத்தான வளைவுகளில், வேறு எங்கெல்லாம் என்று, கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்.

சாவிக்கொத்தை அப்படியே தரையில் போட்டுவிட்டு, நேராக வீட்டுக்கு ஓடி என் பொருட்களையெல்லாம் சுட்டிக்கொண்டு, டெல்லிக்குப் போகும் ரயில் வண்டியில் ஏறிவிடவேண்டும் என்ற எண்ணம் தான் என்னுள் இருந்தது. ஆனால் அது சரியல்ல என்றே நினைத்தேன். ஜின்னா சாகிப்பிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டு, அவருடைய மன்னிப்பை வேண்டி, நான் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன், ஆனால் என்னை நம்பு, ஆறு மாதங்களுக்கு அப்படியொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவே இல்லை’’.

“எப்படி?’’ என்று முகமத் ஹனிஃப் அஸாத்திடம் கேட்டேன்.

“அது அப்படித்தான்’’ என்று சொல்லி விளக்கம் கொடுத்தான். “நான் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, முன் வாசலுக்கு வெளியே காரைக் கொண்டு வந்து நிறுத்தி காத்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நான் ஏறக்குறைய மயங்கி விழுந்தேன் என்றாலும், காயிதே தோன்றியவுடன், அவருக்கு சல்யூட் அடித்து கார் கொட்டகையின் சாவிகளை அவரிடம் கொடுத்துவிட்டு அவருடைய காலில் விழுந்துவிடவேண்டும் என்று தீர்மானித்து என்னை நானே ஆறுதல் படுத்திக்கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. அவர் முன் வாசலில் நுழைந்த அந்த கணத்தில் நான் ஊமையாகிவிட, என்னால் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியவில்லை. அவருடைய சகோதரி பாத்திமா சாகிபாவும் அவரோடு இருந்தார். மண்ட்டோ சாகிப், ஒரு பெண்ணின் முன்னிலையில் எப்படி நம்மால் வேறொருத்தர் காலில் விழ முடியும்? எப்படியிருந்தாலும் அது சரியாக இருந்திராது. ஆக மண்ட்டோ சாகிப், புத்தம் புது பேக்கார்ட் வண்டியை நான் கிளப்ப வேண்டியதாயிற்று. நான் மௌனமாகக் கடவுளை வேண்டியபடியே, எந்தப் பிரச்னையும் இல்லாமல் முன்கதவு வழியே தெருவுக்கு வந்துவிட்டேன். மௌண்ட் பிளசன்ட் வளைவுகளை நல்ல முறையில் தான் கையாண்டு வந்தேன் என்றாலும், பிரதான சாலையில் இருந்த சிவப்பு விளக்கு நிறுத்தத்தில், நான் சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.

என்னுடைய ஆசான் புதான் மிக மென்மையாக வண்டியை நிறுத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருந்தான், என்றாலும் நான் பயந்துக் கிடந்ததால் வெடுக்கென்று பிரேக்கை அழுத்த, வண்டி தூக்கிப்போடப்பட்டது போல் நிற்க, காயிதே பிடித்துக்கொண்டிருந்த சுருட்டு அவருடைய விரல்களில் இருந்து நழுவி கீழே விழுந்தது. பாத்திமா சாகிபா ஏறக்குறைய அவருடைய இருக்கையில் இருந்து தூக்கியடிக்கப்பட, அவர் என்னைச் சபிக்கத் தொடங்கினார். நான் இறந்து விடுவேன் என்றுதான் நினைத்தேன். என் கைகள் நடுங்கத் தொடங்கியது. தலை சுற்றுவது போல் உணர்ந்தேன். காயிதே அஸாம் சுருட்டைத் தரையிலிருந்து எடுத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார். வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்று அவர் சொன்னதாக நான் நினைத்துக் கொண்டேன். நாங்கள் திரும்பியவுடன், அவர் வேறொரு வண்டியும் வேறொரு காரோட்டியும் கேட்டுக் கிளம்பிச் சென்றார். அவருக்குச் சேவை செய்யும் வாய்ப்பு அடுத்த ஆறு மாதங்கள் வரை எனக்குக் கிடைக்கவே இல்லை.’’

“இதே போலத்தான் மறுபடியும் சேவை செய்தாயா?’’ என்று புன்கைத்தவாறே கேட்டேன்.

அசாத்தும் புன்கைத்தான். “விசயம் என்னவென்றால் இத்தனை நாட்களும் சாகிப் என்னை உபயோகிக்க முயற்சி செய்யவேயில்லை. அங்கு இருந்த மற்ற காரோட்டிகளைத்தான் உபயோகித்தார். அவர்கள் எல்லோரும் சாகிப்பின் பணியாளர் அடையாளத்தை அணிந்திருந்தார்கள். அது மிக அழகாக இருக்கும். அடுத்த நாள் யார் கார் ஓட்ட வேண்டும் என்றும், எந்த வண்டியை எடுக்க வேண்டும் என்றும் முந்திய இரவே மட்லூப் சாகிப் எங்களிடம் தெரிவித்து விடுவார். அவ்வப்போது என்னைப்பற்றி அவரிடம் கேட்பேன் என்றாலும், அவர் ஏதும் சொல்லமாட்டார். உண்மை என்னவென்றால், சாகிப் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று யாராலும் தீர்மானமாய்ச் சொல்ல முடியாது. அவரிடம் துணிச்சலாகக் கேட்கவும் முடியாது. விசயத்தைச் சுற்றி வளைத்துப் பேசும் தன்மை அவரிடம் கிடையாது. அவசியமாக இருந்தால் மட்டுமே காது கொடுத்துக் கேட்கக்கூடிய அவர், அவசியமாக இருந்தால் மட்டுமே பேசக் கூடியவர். அதனாலேயே தான் காயிதேவுக்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும், பயன்படுத்தப்படாத உதிரி பாகம் போல் என்னை ஏன் கொட்டகைக்குள் தள்ளி வைத்தார் என்று என்னால் தெரிந்து கொள்ளவே முடியவில்லை’’

நான் என் யூகத்தை வெளிப்படுத்தினேன். “அவர் உன்னை முழுவதுமாக மறந்திருக்கலாம்’’. அசாத் உரக்கச் சிரித்தான். “இல்லை ஐயா, சாகிப் மறந்திருப்பதற்கான சாத்தியமே இல்லை, அவர் எதையும் மறக்கக்கூடியவரும் இல்லை. ஒரு சிறு வேலையும் செய்யாமல் அசாத் ஆறு மாதமாக விருந்து உண்டு கொண்டிருக்கிறான் என்று அவருக்கு மிக நன்றாகத் தெரிந்துதான் இருந்தது. அதுவும் மண்ட்டோ சாகிப், அசாத் சாப்பிட உட்கார்ந்தால் அவனை சந்தோசப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை. என்னையும் என்னுடைய இந்தப் பெரிய உடம்பையும் சற்றுப் பாருங்கள்’’

நான் அவனைப் பார்த்தேன். உண்மையில் திடமான மிகப்பெரிய உடம்பை கொண்டவன் தான். 1937 அல்லது 38ல் அவன் எப்படி இருந்திருப்பான் என்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஒரு சமயம் காயிதேயின் காரோட்டியாக இருந்தான் என்று தெரிந்து கொண்டது முதல், அவனிடம் பேசுவதற்கான சந்தர்ப்பத்தைத் தேடிக்கொண்டிருந்தேன். அவனைப் பலமுறை சந்தித்து, காயிதேவுடன் அவன் கழித்த நாட்களைப் பற்றிக் கேட்க வேண்டியிருந்தது. நான் இதை எழுதத் தொடங்கிய சமயத்தில், கவிஞர் அல்லாமா முகமது இக்பாலுக்கு உயரமான மனிதர்கள் என்றால் பிடித்திருந்ததைப்போல், காயிதே அஸாம் திடகாத்திரத்தை விரும்பினார் என்று என்னுள் தோன்றியது. பலம் - காயிதேவிடம் வேலை பார்த்த எல்லோருமே இந்த தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அசாத் இருந்த சமயத்தில், காயிதேவிற்கு வேலை பார்த்தவர்கள் எல்லோரும் பார்ப்பதற்கு அழகாகவும் திடமானவர்களாவும் இருந்தார்கள். அவருடைய காரியதரிசி மட்லூம் அழகாகவும் திடமான உடலைக் கொண்டவராகவும் இருந்தது போலத் தான், அவருடைய வண்டி ஓட்டுநர்களும் காவல்காரர்களும் இருந்தார்கள்.

திரு. ஜின்னா உடல் ரீதியாக பலவீனமானவராக இருந்தாலும், இரும்புப் போல் திடமான மனதைக் கொண்டவர். பலவீனமானவர்களோடு எத்தகைய தொடர்பும் வைத்துக் கொள்ள அவர் விரும்பாததை, நாம் உளவியல் ரீதியாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். எவர் ஒருவரும் தாம் நேசிப்பதை மிகவும் அக்கறையோடு பாத்துக்கொள்வார்கள். காயிதேவும் இதில் வேறுபட்டவர் அல்ல அவருக்கான வேலை பார்ப்பவர்கள், மிக நேர்த்தியாக வேலைக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார். பட்டான் காவலாளி, எப்போதும் அவனுடைய பாரம்பரிய உடையில் தான் இருக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அசாத் பஞ்சாபியில்லை என்றாலும், ஒரு ஆணை உயரமாகவும், கம்பீரமாகவும் வெளிப்படுத்தக் கூடிய அந்தத் தலைப்பாகையை அணிய வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்பட்டதும் உண்டு. அவன் தலைப்பாகையை ஒழுங்காகவும் அழகாகவும் கட்டியிருந்தால், சில சமயங்களில் அன்பளிப்பாகக் காசு பெறுவதற்கு சாத்தியமும் இருந்தது.

இதைப் பற்றியெல்லாம் சிந்திக்கும்போது, காயிதே அசாமின் திடமான மனதின் ரகசியம் அவருடைய உடல்ரீதியான குறையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்றே தோன்றுகிறது. வலுவற்ற உடல் பலவீனத்தை அவர் எப்போதும் பிரதிபலித்தது. காயிதே அஸாம் மிகக் குறைவாகவே உணவு உட்கொள்ளக்கூடியவர் என்று அசாத் என்னிடம் தெரிவித்தான். “அவர் அத்தனை குறைவாக உண்பதைப் பார்க்கும் போது, எது அவரை உயிரோடு வைத்திருக்கிறது என்று நான் வியந்தது. உண்டு. ஒரு வேளை நானும் அது போல் மிகக் குறைந்த அளவே உணவு உட்கொள்ள வேண்டியிருந்தால், ஒரு சில நாட்களில் கரைந்து காணாமல் போய்விடுவேன். ஒவ்வொரு நாளும் சமையல் அறையில் நான்கைந்து கோழிகள் சமைக்கப்படும் என்றாலும், ஜின்னா சாகிப் உட்கொள்ளுவது எல்லாம் ஒரு பெரிய கிண்ணத்தில் சூப் மட்டுமே. ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய அளவில் புத்தம் புதிய பழ வகைகள் அவருடைய வீட்டிற்கு வந்தாலும், அதை அவர் எப்போதும் உட்கொண்டதே கிடையாது. எல்லாமே வேலைக்காரர்கள் வயிற்றுக்குள் தான் சென்றது. ஒவ்வொரு நாளும் படுக்கப் போவதற்கு முன் அடுத்த நாள் என்ன என்ன சமைக்கப்படவேண்டும் என்று ஒரு பட்டியலில் இருந்து சொல்வார். பொருட்கள் வாங்குவதற்கு என்னிடம் நூறு ரூபாய் நோட்டு கொடுக்கப்படும்’’

“ஒவ்வொரு நாளும் நூறு ரூபாயா?’’ என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன்.

“ஆமாம் ஐயா, நூறு ரூபாய் தான். காயிதே அஸாம் அதற்கான கணக்கை எப்போதும் கேட்டதே கிடையாது. மிச்சப்பணத்தை எல்லாம் வேலை பார்க்கும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம். சில நாட்களில் அது முப்பது ரூபாயாக இருக்கும். வேறு சில நாட்களில் நாற்பது. ஏன் சில சமயங்களில் அறுபது எழுபதாகக் கூட இருக்கும். நிச்சயமாக இதைப் பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் எப்போதும் கணக்குக் கேட்டதே கிடையாது. ஆனால் மிஸ். ஜின்னா வேறு மாதிரியானவர். பொருட்களுக்குச் கொடுக்கும் விலையைக் காட்டிலும் அதிகமாகக் கணக்கு கொடுக்கிறோம் என்றும், நாங்கள் எல்லோரும் திருடர்கள் என்றும் அடிக்கடி சொல்வர். அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருப்போம். ஏனெனில் இது போன்ற விசயங்களில் சாகிப் அக்கறை காட்டுவதில்லை என்று எங்களுக்குத் தெரியும். அத்தகைய சமயங்களில் அவருடைய சகோதரியிடம் “இடஸ் ஆல்ரைட்... இடஸ் ஆல்ரைட்...’’ என்பார்.

இருந்தாலும் ஒரு சமயத்தில், அது “ஆல்ரைட்டாக’’ மாற முடியாமல் போக, மிஸ். ஜின்னா சமையற்காரர்கள் இருவரை வேலையை விட்டு வெளியேற்றும் அளவிற்கு அவர்கள் மீது கோபம் கொண்டார். அதில் ஒருவன் பிரத்தியேகமாக ஐரோப்பிய உணவுகள் சமைப்பதற்காகவே இருக்க, மற்றொருவன் இந்திய உணவுகளுக்குப் பொறுப்பாளனாக இருந்தான். பின்னவன் எப்போதும் வேலை எதுவும் இல்லாமல் இருப்பான் - சில சமயங்களில் மாதக் கணக்கில்கூட. ஆனால் அவனுடைய முறை வரும்போது சுறுசுறுப்பாகக் காரியத்தில் குதிப்பான். காயிதே அஸாம் உண்மையில் இந்திய உணவுகளைப் பெரிதாக விரும்பியது கிடையாது. இருந்தாலும் அவருடைய சகோதரி விஷயங்களில் அவர் எப்போதும் தலையிடாததால், இரண்டு சமையல்காரர்களும் வேலையை விட்டு நீக்கப்பட்ட போது அமைதியாகவே இருந்தார். உணவு உண்பதற்காக அவர்கள் இருவரும் பல நாட்கள் தாஜ் ஹோட்டலுக்குச் சென்று வந்தார்கள். எங்களைப் பொறுத்தவரை இதனால் நாங்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தோம். புது சமையல்காரர்களைத் தேடுகிறோம் என்று நாங்கள் வண்டியை எடுத்துக் கொண்டு, சௌகரியமாக நகர வீதிகளில் வெறுமனே சுற்றிவிட்டு, வேலைக்குத் தகுதியான ஆட்கள் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று திரும்பி வந்தவுடன் எங்களது அறிக்கையைச் சமர்ப்பிப்போம். இறுதியில் மிஸ். ஜின்னா அந்த இரண்டு பழைய சமையல்காரர்களையே திரும்ப வருமாறு அழைத்தார்.

மிகக் குறைவாக சாப்பிடுபவர்கள், அவர்களைக் காட்டிலும் மிக அதிகம் சாப்பிடுவர்களைப் பார்த்து ஒன்று பொறாமைப் படுவார்கள் அல்லது அவர்கள் சிறப்பாகச் சாப்பிடுவதைப் பார்த்துச் சந்தோசப்படுவார்கள். காயிதே இரண்டாவது வகையைச் சேர்ந்த குறைவாகச் சாப்பிடக்கூடியவராக இருந்தார். அதனால் தான் மளிகைப் பொருட்களும் இறைச்சியும் வாங்கியது போக வெளிப்படையாக தெரியக்கூடிய மிச்சப்பணத்தை நாங்கள் என்ன செய்தோம் என்று அவர் எப்போதும் கேட்டதே கிடையாது. நான் உன்னிடம் ஒரு கதை சொல்கிறேன். அது 1939ம் வருடம் கடல் அலைகள் உற்சாகமாய்க் கரை மீது மோதிக்கொண்டிருக்க, நான் காயிதேவை அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியில் மேரின் டிரைவில் மிக மென்மையாக ஓட்டிக்கொண்டிருந்தேன். காற்றில் சற்றே சில்லிட்ட தன்மை இருந்தது. ஜின்னா சாகிப் மிக நல்ல மனநிலையில் இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகும் ஈத் பண்டிகையைப் பற்றிச் சொல்வதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தேன்.

பின் பகுதியைப் பார்க்கக்கூடிய கண்ணாடியில், அவரைப்பார்க்க முடிந்தது. அவருடைய உதட்டில் மிக மெல்லிய புன்னகை தோன்றியது. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. எனக்குக் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அவர் எப்போதும் பிடித்துக் கொண்டிருக்கும் சிகார் அவருடைய உதடுகளுக்கு இடையில் இருந்தது. இறுதியாக அவர், “நல்லது, நல்லது நீ திடீரென்று ஏன் முசல்மானாக மாறிவிட்டாய்... கொஞ்சநாட்களுக்கு கொஞ்சம் போல் இந்துவாக இருப்பதற்கு முயற்சி செய்’’ என்று பேசினார். நான்கு நாட்களுக்கு முன்னர்தான் காயிதே எனக்கு இருநூறு ரூபாய் நோட்டை அன்பளிப்பாகக், கொடுத்து என்னுள் இருந்த முசல்மானைச் சந்தோசப்படுத்தினார். மேலும் பணம் கேட்க நினைத்ததால், நான் இந்துயிசத்தைச் சற்றே தழுவிச் கொள்ளுமாறு இப்போது அறிவுரை கொடுக்கிறார்.

காயிதே அஸாமின் அந்தரங்க வாழ்க்கை எப்போதும் மர்மமாகவே இருந்தது. அப்படியே தான் எப்போதும் இருக்கும். அவருடைய எல்லா நேரங்களும் அரசியலுக்காகக் கொடுக்கப்பட்டதால், அவருக்கு என்று அந்தரங்க வாழ்க்கை என்பது ஏறக்குறைய கிடையாது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது. பல வருடங்களுக்கு முன்பு அவர் மனைவியை இழந்ததோடு, அவருடைய மகளும் அவரின் விருப்பத்திற்கு எதிராக ஒரு பார்சியைத் திருமணம் செய்து கொண்டார்.

“சாகிப்புக்கு அது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எந்த நிறத்தில் இருந்தாலும் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவள் ஒரு முசல்மானைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அவருடைய மகள் அவரோடு விவாதம் செய்தாள். அவரே, மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் அவருடைய சுதந்திரத்தை நிலைநாட்டியிருக்க, அதே சுதந்திரத்தை அவளுக்குக் கொடுக்க அவர் ஏன் மறுக்கிறார் என்று அவள் கேட்டாள்’’ என்றான் அசாத்.

மிகப் பிரபலமான பம்பாய் பார்சி ஒருவருடைய மகளை காயிதே அஸாம் திருமணம் செய்து கொண்டது, அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் கோபம் கொள்ள வைக்க அதற்குப் பழிவாங்கவேண்டும் என்று இருந்திருந்தார்கள். காயிதே மகளுக்கு ஒரு பார்சி உடனான திருமணம் என்பது சிந்தித்துச் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் என்று சிலர் சொன்னார்கள். நான் இதை அசாத்திடம் தெரிவித்த போது அவன், “கடவுளுக்குத் தான் எல்லாம் தெரியும். ஆனால் எனக்குத் தெரிந்தது எல்லாம், அவருடைய மனைவியின் மறைவிற்குப் பிறகு இது தான் காயிதே அஸாமை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியடைய வைத்தது. இந்தத் திருமணம் பற்றிய செய்தியை அவர் தெரிந்து கொண்டபோது, அவருடைய முகத்தில் இருந்த சோகத்தைப் பார்க்க வேண்டும். அந்த விதத்தில் அவர் மிகவும் வெளிப்படையானவர். அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்று அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே சொல்லிவிட முடியும். எளிதில் புண்படக்கூடிய அவரை ஒரு சாதாரண நிகழ்ச்சி கூட பெரிய அளவில் இம்சைப்படுத்தும். அவருடைய புருவங்கள் விரிவதை வைத்தே அவர் கோபமாக இருக்கிறாரா அல்லது குழப்பத்தில் இருக்கிறாரா என்று சொல்லிவிட முடியும். அவரது துக்கத்தை அவரால் மட்டுமே அளக்க முடியும் என்றாலும், அந்த நாட்களில் அவரைப் பார்த்தவர்கள் எவ்வளவு நிலைகுலைந்து இருந்தார் என்று உணர்ந்திருப்பார்கள். இரண்டு வாரங்களுக்கு, அவரைப் பார்க்க வந்தவர்கள் எவரையும் அவர் சந்திக்கவில்லை. சிகார் பிடித்துக்கொண்டு, வெறுமனே அறையில் மேலும் கீழும் நடந்து கொண்டே இருந்தார். அந்த இரண்டு வாரங்களில் அவர் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்திருக்க வேண்டும்.’’

அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றால், எப்போதும் தன்னந்தனியே, பின்னிரவில் மிகச் சுத்தமான அவரது அறையில் அளந்தெடுத்தாற்போல் அடி வைத்து, மேலும் கீழும் நடந்து கொண்டேயிருப்பார். அவருடைய பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலோ இருக்கும், கனத்த தோல் செருப்பு தாள சுதியோடு சப்தம் எழுப்ப, அந்த இரவுகள் நகர்ந்து கொண்டிருக்கும். அது கடிகார துடிப்புப் போல் இருக்கும். காயிதே அஸாம் அவருடைய காலணிகளை மிகவும் விரும்புவார். அதற்குக் காரணம் அது எப்போதும் அவருடைய காலடியிலேயே இருப்பதாலும், அவர் விருப்பப்படுவது போல் மிகச்சரியாக செயல்படக்கூடியது என்பதினாலும் தானா?

இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வெளியே வந்தார். அவருடைய முகத்தில் துக்கத்திற்கான அறிகுறிகளையோ மன அழுத்தத்திற்கான அறிகுறிகளையோ காணமுடியவில்லை. இரண்டு வாரங்களாக தாழ்ந்திருந்த அவருடைய தலை இப்போது மீண்டும் நிமிர்ந்து இருந்தது. ஆனால் இதற்கு நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டார் என்றோ, அந்த அதிர்ச்சியிலிருந்து தேறிவந்துவிட்டார் என்றோ அர்த்தம் இல்லை.

அசாத்துக்கு இது எப்படி தெரியும் என்று கேட்டேன். “பணியாளர்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படுவதில்லை’’ என்று பதில் தந்தான். “சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழைய இரும்புப் பெட்டியை அவரது அறைக்கு எடுத்து வந்து அதன் பூட்டைத் திறக்கச் சொல்வார். அது முழுக்க இறந்து போன அவருடைய மனைவி மற்றும் பிடிவாத குணம் கொண்ட அவருடைய மகள் சிறு குழந்தையாய் இருந்தபோது அணிந்திருந்த துணிமணிகளால் நிரம்பி இருக்கும். அந்தத் துணிமணிகள் வெளியே எடுக்கப்பட, ஒரு வார்த்தையும் பேசாமல் அதை உற்றுப் பார்த்துக்கொண்டு இருப்பார். ஓட்டிப்போய் இருக்கும் அவருடைய முகம் கருத்துப் போகும். “இட்ஸ் ஆல்ரைட் இட்ஸ் ஆல்ரைட்’’ என்று சொல்லி, ஒற்றைக்கண் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்வார்.

காயிதேவுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள். பாத்திமா, ரெஹ்மத், மற்றும் மூன்றாவது சாகோதரியின் பெயர் என் நினைவில் இல்லை. அவள் டோங்கிரியில் வசித்து வந்தாள். ரெஹ்மத் ஜின்னா ‘சினாய் மோட்டர்ஸ்’ அருகில் இருந்த சௌபாத்தி கார்னரில் வசித்து வந்தார். அவருடைய கணவர் எங்கோ வேலை பார்த்து வந்தாலும் பெரிதாக வருமானம் ஏதும் இல்லை. சாகிப் ஒவ்வொரு மாதமும் சீல் வைக்கப்பட்ட உறையை என்னிடம் கொடுப்பார் - அதில் பணம் இருக்கும். சில சமயங்களில் பெரிய பொட்டலத்தைக் கொடுப்பார் - அதில் துணிமணிகள் இருந்திருக்கலாம். நான் இதை ரெஹ்மத் ஜின்னாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அவ்வப்போது சாகிப்பும் மிஸ். ஜின்னாவும் அவரைப் போய் பார்த்து வருவார்கள். டோங்கரியில் இருந்த அவருடைய மற்றொரு சகோதரியும் திருமணமானவர்தான். எனக்குத் தெரிந்தமட்டில் அவர் மிக நல்ல நிலையில் இருந்ததால் அவருக்குப் பொருளாதார உதவிகள் ஏதும் தேவைப்படவில்லை. காயிதேவுக்கு ஒரு சகோதரனும் இருந்தான், அவனுக்கும் அவர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருந்தாலும், அவருடைய வீட்டிற்கு வர மட்டும் அவனுக்கு அனுமதி கிடையாது.

ஒரு முறை நான் அவனைப் பம்பாயில் பார்த்தேன். சவாய் பாரில் தான், பார்ப்பதற்குக் காயிதே போலவே இருந்த அவன், அப்போதுதான் சிறு அளவு ரம் சொல்லியிருந்தான். அதே மூக்கு, அதே முக அமைப்பு, அதேபோல் வாரியிருந்த தலைமுடி அதே போல் நடுவில் நரைத்தமுடி. நான் எவரோ ஒருவனிடம் அந்த மனிதர் யார் என்று கேட்ட போது, அவன் தான் திரு.முகமது அலி ஜின்னாவின் சகோதரன் அகமது அலி என்று சொல்லப்பட்டது. நான் நீண்ட நேரம் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தேன். ரம்மை மிக மெதுவாகக் குடித்தபின் பணம் கொடுத்தான் - அது ஒரு ரூபாய்க்கும் குறைவானதுதான் என்றாலும், ஏதோ பெரிய தொகையைக் கொடுப்பது போல் ஆடம்பரமாகக் கொடுத்தான். அவன் அங்கு உட்கார்ந்திருந்த விதம் மூன்றாம் தர பம்பாய் மதுக்கடையில் தான் என்பது போல் அல்லாமல், தாஜ் மஹால் ஹோட்டலிலேயே அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொடுத்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காந்தி - ஜின்னா பேச்சுவார்த்தைக்கு முன்னர் அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற பம்பாய் முசல்மான்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் என்னுடைய நண்பன் ஒருவனும் கலந்து கொண்டான். காயிதே அஸாம் அவருக்கே உரிய பாணியில் பேசிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய சகோதாரன் அகமத் அலி கூட்டத்திற்குப் பின்னால் ஒற்றைக்கண் கண்ணாடி அணிந்து கொண்டு நின்றபடியே, ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்ததாக என்னிடம் தெரிவித்தான்.

வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுகளில் காயிதே அசாமுக்கு பிடித்தது பில்லியாட்ஸ் மட்டுமே. விளையாட வேண்டும் என்று அவருக்குத் தோன்றும் போதெல்லாம் பில்லியர்ட்ஸ் அறையைத் திறக்கச் சொல்லி உத்தரவிடுவார். ஒவ்வொரு நாளும் அந்த அறை தூசுகள் தட்டப்பட்டு மிகச் சுத்தமாகத் தான் இருக்கும் என்றாலும், பணியாளர்கள் அத்தகைய நாட்களில் மேலும் சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள். அந்த விளையாட்டில் எனக்கும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால், பில்லியர்ட்ஸ் அறையில் நுழைவதற்கு நான் அனுமதிக்கப்படுவேன். பன்னிரெண்டு பந்துகள் சாகிப் முன்பே வைக்கப்பட, அதில் மிகக் கவனமாக மூன்றைத் தேர்ந்தெடுத்து விளையாடத் தொடங்குவார். பல சமயங்களில் மிஸ். ஜின்னாவும் அங்கிருப்பார். சாகிப் தன் உதடுகளுக்கிடையே சிகாரை வைத்துக்கொண்டு, அவர் தாக்கப்போகும் பந்தின் நிலையை உள்வாங்கிக் கொள்வார். பல கோணங்களில் இருந்து அதை ஆராய வேண்டியிருப்பதால் அதற்குப் பல நிமிடங்கள் ஆகும். அவர் கையில் பிடித்திருக்கும் கோலின் கனத்தைப் பரிசோதிப்பது போலவும், ஏதோ தந்தி வாத்தியத்தை வாசிக்க வில்லைப் பிடித்திருப்பது போலும், அவருடைய மெலிந்த நீளமான விரல்களுக்கு இடையே அதை மேலும் கீழும் நகர்த்திக் குறிபார்த்து அடிக்கப்போகும் அந்தத் தருணத்தில் அதை விட மேலும் சிறப்பான கோணம் ஏதோ ஒன்று தோன்றியதால் ஆட்டத்தை நிறுத்திவிடுவார். அவருடைய ஆட்டம் மிகச் சரியானது தான் என்று முழுமையான திருப்தி ஏற்பட்ட பிறகே விளையாடுவார். அவர் திட்டமிட்டது போல் ஆட்டம் நிகழ்ந்து விட்டால், அவருடைய சகோதரியைப் பார்த்து பெருமிதத்தோடு புன்னகைப்பார்.

அரசியலிலும், காயிதே அஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார். அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே அறிந்து தான் இருந்தார்.

அசாத் சொன்னதில் அடிப்படையில், காயிதே அஸாம் வீண் பேச்சுகள் பேசுவதை வெறுத்தவர் என்பதால், வெறுமனே அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை முற்றிலுமாக தவிர்த்தார். சுருக்கமான தேவையான உரையாடல்களுக்கு மட்டுமே அவருடைய காதுகள் இருந்தன. அவரைப் பார்க்க வருபவர்களை வரவேற்கும் அந்தப் பிரத்தியேக அறையில், ஒரே ஒரு சிறிய சோபாவும் அதற்கு அருகில் ஒரு சிறிய மோடா மட்டுமே இருந்தன. அந்த மோடாவில் இருந்த சாம்பல் கிண்ணத்தில், அவருடைய சிகார் சாம்பலைத் தட்டிவிடுவார். எதிரே இருந்த சுவருக்கு முன் கண்ணாடிக் கதவுகள் கொண்ட இரண்டு அலமாரிகளில் அவருடைய ஆதரவாளர்களால் கொடுக்கப்பட்ட புனித குரான் பிரதிகள் வைக்கப்பட்டிருந்தன. அவர் வேலைபார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்களும் அங்குதான் வைக்கப்பட்டிருந்தன. அவருடைய பெரும்பாலான நேரம் அந்த அறையில் தான் செலவழிக்கப்பட்டது. எங்களில் யாரேனும் ஒருவர் கூப்பிட்டு அனுப்பப்பட்டால், கதவருகே நின்று கொண்டுதான், அவருடைய உத்தரவுகளைக் கேட்க வேண்டும். பிறகு அங்கிருந்து நகர்ந்து விடவேண்டும். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் காகிதங்கள், சோபாவில் தாறுமாறாய் இறைந்துக் கிடக்கும். ஏதேனும் கடிதம் எழுதவேண்டியிருந்தால் மட்லுப் அல்லது சுருக்கெழுத்து எழுதக்கூடியவருக்கு அவர் சொல்லி அனுப்பி, தீர்மானமான குரலில், அதிகாரத்தோடு அவர் சொல்ல வேண்டியதைச் சொல்வார். என்னுடைய ஆங்கில அறிவு மிகக் குறைவானது தான் என்றாலும் அழுத்தம் தேவைப்படாத வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் அழுத்தம் கொடுத்ததாகவே நான் எப்போதும் நினைப்பது உண்டு.’’

அசாத் குறிப்பிட்ட ‘அதிகாரத்தோடு’ என்பது ஒருவேளை அவருடைய வலுவற்ற உடலைத் தற்காத்துக்கொள்ளும் உள்மன வெளிப்பாடாக இருக்கலாம் அவருடைய வாழ்க்கை ஓடும் தண்ணீரில் குமிழிப்போல் இருந்தாலும், இந்த உலகத்திற்கு பெரும் நீர் சுழற்சி போல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அந்த உடலில் வலு இல்லாதது தான் அத்தனை காலங்களுக்கும் அவரை உயிரோடு வைத்திருக்கிறது. எவ்வித சம்பிரதாயங்களும் இல்லாமல் காயிதே உறவு வைத்திருந்தது அவருடைய மிகச்சிறந்த நண்பரான நவாப் பஹதூர் யார்த் ஜங்குடன் மட்டும் தான் என்று அசாத் சொன்னான். “அவர் அடிக்கடி சாகிப்பைச் சந்திக்க வருவார். இருவரும் அரசியல் மற்றும் முக்கியமான தேசிய விசயங்களை மணிக்கணக்காயப் பேசிக்கொண்டிருப்பார்கள். நவாப்போடு இருக்கும் போது மட்டும் காயிதே முற்றிலும் வேறுபட்ட மனிதராக இருந்தார். மிக அந்நியோனியமான நண்பர் ஒருவரிடம் பேசுவது போல, அவரோடு மட்டுமே பேசுவார். அவர்கள் இருவரும் குழந்தைப் பருவத்து நண்பர்கள் போலவே தோன்றினார்கள். இருவரும் அறையில் ஒன்றாக இருக்கும் போது அவர்களின் உரக்கச் சிரிக்கும் சத்தத்தை நம்மால் கேட்க முடியும். மக்மூத்பாத் ராஜா சாகிப், ஐ.ஐ.சுந்த்ரிகர், மௌலானா ஸாஹித் ஹ§சைன், நவாப் ஸாதா, லியாகத் அலிகான், நவாப் சர் முகமது இஸ்மாயில், மற்றும் அலி இமாம் போன்றவர்கள் உட்பட மற்றவர்களும் அவரைச் சந்திக்க வருவார்கள். ஆனால் சாகிப் அவர்களை எல்லாம் ஒருவித சம்பிரதாயத்தோடுதான் கையாண்டார். பஹதூர் யார்த் ஜங்கின் வருகையோடு சம்பந்தப்பட்டிருந்த அந்தச் சம்பிரதாயங்கள் அற்ற சுலபமான தன்மை எல்லாம் மற்றவர்கள் வருகையின் போது காணாமல் போய்விடும்’’ லியாகத் அவரைப் பார்க்க அடிக்கடி வருவாரா என்று அசாத்திடம் கேட்டேன்.

“ஆமாம்’’ என்று அசாத் பதில் தந்தான். “மிகவும் திறமை பெற்ற அவருடைய மாணவனைப் போல்தான் காயிதே அவரை நடத்தினார். லியாகத் அவர் மீது பெரும் அளவு மரியாதை வைத்து, அவரது கட்டளைகளின் கடைசி வரிகளைக்கூட நிறைவேற்றினார். சில சமயங்களில் அவர் அழைக்கப்படும் போது, உள்ளே போவதற்கு முன் சாகிப் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார். நான் எப்போதும் அவருக்குப் பதில் சொல்ல முடிந்ததற்குக் காரணம் காயிதே மோசமான மனநிலையில் இருந்தால் அது எல்லோருக்கும், ஏன் மௌண்ட் பிளசன்ட் சுவர்களுக்குச் கூட தெரிந்திருக்கும். காயிதே அஸாம் அவருக்காக வேலை பார்ப்பவர்கள் மற்றும் பணியாட்களின் நடத்தையிலும், தோற்றத்திலும் ரொம்பவும் குறியாக இருந்தார். சுத்தம் இல்லாத எல்லாவற்றையும் அவர் வெறுத்தார் - மனிதர்களின் நடத்தை உட்பட அவருக்கு மட்லூப்பை ரொம்வும் பிடித்திருந்தது என்றாலும், முஸ்லீம் லீக் பெண் தொண்டரோடு அவர் உறவு வைத்திருக்கிறார் என்பது தெரிந்தவுடன், இது போன்ற முறையற்ற நடத்தைகளை எப்போதும் பொறுத்துக்கொள்ள முடியாதவராக அவர் மிகவும் எரிச்சலடைந்தார். மட்லூப் வரவழைக்கப்பட்டு, கேள்விகள் கேட்கப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டார். ஆனாலும் காயிதே பிறகு அவரை எப்போது சந்தித்தாலும், பழைய நண்பர் போலவே அவரை நடத்தினார்.

ஒரு முறை நான் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்தேன். நகரத்திற்குள் சென்று பாரில் பல மணிநேரங்கள் செலவு செய்துவிட்டு திரும்பி வந்தேன். நான் எவ்வளவு தாமதமாக வந்தேன் என்று சாகிப்புக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு. அடுத்த நாள் என்னை அழைத்து நான் என் நடத்தையைப் பாழ்படுத்திக் கொள்வதாக ஆங்கிலத்தில் தெரிவித்தார். பிறகு அரைகுறை உருதுவில், “இப்போது உனக்குத் திருமணம் செய்து வைத்தாக வேண்டும்’’ என்று சொன்னார். நான்கு மாதங்கள் கழித்து முஸ்லீம் லீக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் பம்பாயில் இருந்து டெல்லிக்கு வந்த போது அவர் விருப்பப்பட்டது போலவே உரிய காலத்தில் நான் திருமணம் செய்து கொண்டேன். அவரோடு எனக்குத் தொடர்பு இருந்ததினால் மட்டுமே, சையத் குடும்பத்தில் இருந்து வந்தவள் எனக்கு மனைவியாக முடிந்தது. நான் ஷேக் ஜாதியைச் சேர்ந்தவன் என்றாலும் சையது குடும்பத்தினர் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளக் காரணம் நான் காயிதே அஸாமிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்ததனால்தான்...’’

காயிதே அஸாம் எப்போதாவது ‘என்னை மன்னித்துக்கொள்’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறானா என்று அசாத்திடம் கேட்டேன். அசாத் தலையை ஆட்டினான், “இல்லை. அவரது உதடுகளில் இருந்து தப்பித் தவறியேனும் அந்த வார்த்தைகள் மட்டும் வெளியேறியிருக்கும் பட்சத்தில், அதை அகராதியில் இருந்தே வெட்டியெறிந்திருப்பார் என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும்’’ என்றான். இந்த ஓர் குறிப்பு ஒன்றே காயிதே அஸாம் முகமது அலி ஜின்னாவின் இயல்பின், திறவுகோலைக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன்.
முகமது ஹனீஃப் அசாத் உயிரோடுதான் இருக்கிறான், அவனுடைய காயிதே அஸாம் பரிசாகக் கொடுத்த பாகிஸ்தானில். அந்த நாடு மிகவும் திறமை பெற்ற மாணவரான கான் லியாகத் அலிகானின் தலைமையில் இந்த முரட்டுத்தனமான உலகத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரமான இந்த துண்டு நிலத்தில் தான், பஞ்சாப் ஆர்ட்ஸ் பிக்சர்ஸ் அலுவலகத்திற்கு வெளியே, வெற்றிலை விற்கும் கடைக்கு அருகாமையில் உடைந்து கிடக்கும் கட்டிலில் அமர்ந்து கொண்டு, அவனுடைய சாகிப்புக்காக காத்திருப்பதோடு, குறித்த நேரத்தில் அவனுக்கான ஊதியம் கொடுக்கப்பட போகும் அந்த நாளுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் காயிதே அஸாம் அவனுக்கு அறிவுரை தந்தது போல சற்றே இந்துவாக மாறுவதற்கும் தாயாராக இருந்தான்.

சென்ற முறை நான் அவனிடம் காயிதே பற்றி பேசிய போது, மிகவும் மனம் உடைந்து இருந்தான். வெற்றிலை வாங்குவதற்குக் கூட அவனிடம் ஏதும் இல்லாத நிலையில் இருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். அவனிடம் ஏதேதோ பேசி எப்படியோ அவனுடைய மண்டைக்குள் இருந்த பிரச்சனைகளிலிருந்து அவனை வெளியே கொண்டுவந்தேன்.

அவன் பெருமூச்சு விட்டான். “என்னுடைய சாகிப் இறந்து விட்டார். அவருடைய கடைசி பயணத்தின் போது கூரை அகற்றப்பட்ட அவருடைய வெள்ளை பேக்கார்ட் வண்டியை ஓட்டிக்கொண்டு நான் உடனிருந்திருக்க வேண்டும் என்று எவ்வளவு ஏங்கினேன். அவர் இறுதியாய் அடைய வேண்டிய இடத்திற்கு எவ்வளவு மென்மையாய் வண்டியை நான் ஓட்டியிருக்க வேண்டும் என்று ஏங்கினேன். எளிதில் புண்படக்கூடிய அவரது சுபாவத்திற்கு கரடுமுரடான, தூக்கிப்போடும் பள்ளங்கள் ஏற்றதில்லை. நான் இதைக் கேள்விப்பட்டேன் - அது உண்மைதானா இல்லையா என்று எனக்குத் தெரியாது. அவருடைய கடைசிப் பயணமாக இருந்திருக்க வேண்டியதில் விமானம் மூலம் கராச்சிக்கு அவர் கொண்டுவரப்பட்டுப் பிறகு கவர்னர் ஜெனரல் வீட்டிற்கு அவரை எடுத்துச் செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வண்டி சிறிது தூரம் கடந்த உடனே இஞ்சின் ஏதோ மக்கர் செய்து நின்று போனதாம். என்னுடைய சாகிப் இதனால் எவ்வளவு வருத்தப்பட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும்.’’

அசாத்தின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

No comments: