அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, May 20, 2009

வறுமையை வென்ற நெல்லை மாணவி

நெல்லை: கீழ் நடுத்தரக் குடும்பத்துப் பின்னணி, தந்தையின் திடீர் மறைவு, கிராமத்து வசதியில்லாத பள்ளி என பல குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி, சிறப்பாக படித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாணவி ஜெசிமா சுலைஹா.

பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் 3வது ரேங்க்கைப் பெற்றுள்ளார் சுலைஹா.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அமலி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்தவர் சுலைஹா.

பிளஸ்டூவில் 1183 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். சாதனை இவருக்குப் புதிதல்ல, பத்தாவது வகுப்பில், 489 மதிப்பெண்களுடன் 2வது ரேங்க் பெற்றவர் சுலைஹா.

தனது சாதனை குறித்து சுலைஹா கூறுகையில், தந்தை சையது சம்சுதீன் அம்பாசமுத்திரம் பஞ்சாயத்து யூனியனில் மேலாளராக இருந்தார். எனக்குத் தங்கை உண்டு. இருவரும் நன்கு படிப்போம். நன்கு படிக்குமாறு எனது தந்தை ஆர்வம் கொடுப்பார்.

நான் 9வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது திடீரென எனது தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். இதனால் குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியது.

இருப்பினும் பத்தாம் வகுப்பு தேர்வை மனதில் கொண்டு சிறப்பாக படித்து 489 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்தேன்.

தொடர்ந்து எனது தந்தையின் நினைவு என்னுள் இருந்து கொண்டே இருந்தது. அவர் என்னுடன் இருப்பது போலவே உணர்வேன். இந்த உணர்வுடனேயே பிளஸ் 2 தேர்விலும் சிறப்பாக படித்தேன். இப்போது இந்த ரேங்க் கிடைத்துள்ளது.

வீட்டில் டிவி கிடையாது. பொழுது போக்கு அம்சங்களையும் நான் விரும்புவது இல்லை. படிப்பு மட்டுமே எனக்கு பிடிக்கும். சுய முன்னேற்ற நூல்களை அவ்வப்போது படிப்பேன்.

எனது தாயார் ரேஹானுக்கு 4 மாதங்களுக்கு முன்புதான் ஆசிரியை வேலை கிடைத்தது. இதற்காக அவர் சென்னை செல்ல நேரிட்டது. எனவே எனது பாட்டி பாத்திமா எனக்கு உறுதுணையாக இருந்தார்.

மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக தற்போது சென்னை வந்துள்ளேன். டாக்டராகி மக்களுக்கு பணியாற்றுவேன். நான் படித்த அமலிப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் என் தங்கை சப்னம் சாஜிதாவும் என்னைப்போல ரேங்க் பெறுவாள் என்றார் சுலைஹா.

No comments: