அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, June 19, 2011

வழக்கறிஞர் சட்டம் 1961 உடனடியாக அமல்: இந்தியாவில் எந்த கோர்ட்டிலும் ஆஜராகலாம்.

ஐம்பது ஆண்டுகளாக இருந்து வரும் கோரிக்கையான, வழக்கறிஞர் சட்டம், 1961ஐ, முழுவதுமாக அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்த எந்தவொரு வழக்கறிஞரும், நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் எந்த வகையான வழக்கிற்கும் ஆஜராகலாம்.

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், பிற மாநிலங்களில் உள்ள கோர்ட்டுகளுக்கு சென்று, வழக்குகளில் வாதாட முடியாத நிலை உள்ளது. அதனால், வழக்கறிஞர் தொழிலை நெறிபடுத்துவதற்கும், சட்டக் கல்வியை மேம்படுத்துவதற்கும், "வழக்கறிஞர் சட்டம் 1961' ஐ மத்திய அரசு உருவாக்கியது. இந்த சட்டப்பிரிவு, 30ன் படி, எந்தவொரு மாநிலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞர் சென்று, வழக்கு விசாரணைகளில் ஆஜராகலாம். 1961, மே 19ம் தேதியன்றே இந்த சட்டம் இயற்றப்பட்டாலும், இதற்கான அரசாணையை பிறப்பிக்காமல், பல்வேறு காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் தரப்பிலும், இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை இருந்து வருகிறது. அகில இந்திய பார் கவுன்சில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பார் கவுன்சில்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வழக்கறிஞர்கள், நாடு முழுவதும் பல விதங்களில் போராடியும் வந்தனர்.

நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த இதை, மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சகம் சார்பில், இதற்கான உத்தரவு, கடந்த 15ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. அதில், வழக்கறிஞர் சட்டம், 1961ஐ, உடனடியாக அமலுக்கு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், எந்த கோர்ட்டுகளிலும் எந்தவகையான வழக்குகளிலும் தடையின்றி ஆஜராகி வாதாட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. வழக்கறிஞர்கள், ஏதாவது ஒரு பார் கவுன்சிலில் பதிவு செய்திருந்தால் மட்டும் போதுமானது. ஓரிரு தினங்களுக்குள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலங்களும், இந்த சட்ட நடைமுறையை ஏற்று அதன்படி அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கறிஞர் சட்டத்தை அமல்படுத்தியதற்காக, மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு அகில இந்திய பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.,யும் தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் உறுப்பினருமான கார்வேந்தன் நன்றி தெரிவித்துள்ளார்.

கார்வேந்தன் கூறுகையில், "வழக்கறிஞர் தொழிலில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு இது. வழக்குத் தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், இந்த உத்தரவு இருக்கும். நீதித்துறையில், புதிய மாற்றங்களையும் நல்லவிதமான விளைவுகளையும் உருவாக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு உள்ளது. "வழக்கறிஞர் தொழிலில் இதுவரை இருந்து வந்த முக்கியமான தடைக்கல் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் இதை வரவேற்கின்றனர்' என்றார்.

No comments: