அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, June 19, 2011

கயிற்றில் கட்டப்படும் குழந்தைகள் ஒரு தட்டில் மூன்று பேருக்கு உணவு .

விருதுநகர்: விருதுநகர் பாலவநத்தம் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகள், "சேட்டை' செய்தால், அவர்களை கயிற்றால் கட்டி போட்டு தண்டனை வழங்குவதும், ஒரே தட்டிலே மூன்று குழந்தைகளுக்கு உணவு வழங்குவதுமான அநாகரிக செயலால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.

விருதுநகர் அருகே, பாலவநத்தம் அங்கன்வாடியில் இரண்டு மையங்கள் உள்ளன. இங்கு, தலா 25 குழந்தைகள் வீதம் 50 குழந்தைகள் படிக்கின்றனர். தலா ஒரு அங்கன்வாடி பொறுப்பாளர்கள், தலா இரண்டு உதவியாளர்கள் வேலை செய்கின்றனர். ஒரு ஆண்டுக்கு முன் இங்கு வந்த கலெக்டர், ஒரு மையத்தில், ஒரு அங்கன்வாடி மட்டுமே செயல்பட வேண்டும் என, உத்தரவிட்டிருந்தார். ஆனால், அதிகாரிகள் ஆதரவோடு, இன்றும் இரண்டு மையங்கள் தான் செயல்படுகின்றன.அங்கன்வாடி மையங்களுக்கு தனி பொறுப்பாளர்கள் இருந்தும், இரண்டுக்கும் ஒரே சமையல் தான். மூன்று குழந்தைகளுக்கு, ஒரே தட்டில் தான் உணவு வழங்கப்படுகிறது. இதை தான், மூன்று குழந்தைகளும் பிரித்து உண்ண வேண்டும். மேலும், ஒரு முட்டையை பிரித்து மூன்று குழந்தைகளுக்கு வழங்குகின்றனர்.

இதுமட்டுமன்றி, குழந்தைகள், "சேட்டை' செய்தால், கயிற்றால் ஜன்னல் கம்பியில் கட்டிப் போட்டு, தண்டனை வழங்குவதும், இங்கு இன்றும் தொடர்கிறது. இதனாலேயே, பல பெற்றோர், குழந்தைகளை மையத்திற்கு அனுப்புவதில்லை.அங்கன்வாடி பொறுப்பாளர்கள் வெளியூரில் இருந்து வருவதால், இதன் சாவியை உதவியாளர்களே வைத்துள்ளனர். விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க, மையம் திறக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு திறப்பதே இல்லை. சில நாட்களில், விழா நிகழ்ச்சிகளுக்காக மையத்தையே வாடகைக்கு விடுவதும் இங்கேயே சாத்தியம்.

அங்கன்வாடி பொறுப்பாளர் தமயந்தி கூறுகையில்,"நான் பொறுப்பேற்ற நாள் முதல், அங்கன்வாடிக்கான சாவியை, என்னிடம் உதவியாளர்கள் ஒப்படைக்கவில்லை. இதை அதிகாரிகளிடம் கூறியும், ஒரு ஆண்டாகியும் சாவியை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்கின்றனர்' என்றார்.

இது தொடர்பாக, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர் அழகுசெல்வியை தொடர்பு கொள்ள, பல முறை மொபைல் போனில் தொடர்பு கொண்டும், அவர் போனை எடுக்கவில்லை.

No comments: