அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, June 24, 2011

தினகரனின் அயோக்கியத்தனம்!

இன்றைய தினகரன் பத்திரிக்கையில் "LKG க்கு ரூ 10000 க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்" என்றொரு செய்தி பார்த்தேன். நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரைக்குப் பின்னர், தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கட்டணத்தின் உச்சவரம்பைத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பினை மையமாக வைத்து தினகரன் இந்தத் தலைப்பிலான செய்தியில் சென்னையில் 10,000 க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை அச்செய்தியில் போட்டிருந்தது. இதில் முதலிடத்தில் ரூ. 20,000 கட்டணம் வசூலிக்கும் பள்ளியாக எழும்பூரிலுள்ள ஹாரிங்டன் ஹவுஸ் நர்சரி & ப்ரைமரி பள்ளியினைக் குறிப்பிட்டிருக்கிறது.

ஆனால், தமிழக அரசு அறிவித்த பள்ளி கட்டணப்பட்டியல் இடம்பெற்றுள்ள பள்ளிக் கல்வி இணைய தளத்தில்(http://www.pallikalvi.in/schools/Fees/CHENNAI.pdf) வரிசை எண் 203 ல், வேளச்சேரியில் அமைந்துள்ள சன் ஷைன் நர்சரி பள்ளியின் கட்டணம் ரூ 24,000 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

தினகரனின் செய்திப்படி, அதன் பட்டியலில் முதலிடத்தில் வந்திருக்க வேண்டிய பள்ளி இதுதான். ஆனால் அது வெளியிட்டுள்ள பட்டியலில் இந்தப் பள்ளியினையே சேர்க்காமல் மறைத்துள்ளது தினகரன். தினகரன் ஆசிரியர் குழுவின் கவனக்குறைவால் இப்பள்ளி விடுபட்டிருக்கலாம் என நினைக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு உபரித்தகவல்:

வேளச்சேரி சன்ஷைன் நர்சரி பள்ளி, கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் செந்தாமரையின் பள்ளி! இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவெனில், இப்பள்ளியில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி ஆகிய இரு வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. நர்சரி வகுப்புகள் மட்டுமே நடக்கும் இப்பள்ளியின் கட்டணமாக 24,000 ரூபாயை நிச்சயித்த நீதிபதி ரவிராஜ பாண்டியன் கமிட்டி, வேறு உயர் நிலை வகுப்புகள்(11, 12) கொண்ட பள்ளிகளுக்கு அதிகப்பட்சம் 4050 ரூபாய்க் கட்டணத்தை நிச்சயித்துள்ளது.

இவ்வுண்மையை மறைத்துள்ள தினகரன் பத்திரிக்கை யாருடையது என்பதில் தமிழக மக்களுக்குக் குழப்பமேதுமிருக்காது என்று நினைக்கிறேன். தினகரன் செய்து இருப்பது பச்சை அயோக்கியத் தனம். ஊடகதர்மத்தைக் காற்றில்பறக்கவிட்டு, தன் குடும்பங்களுக்காக உண்மையை மூடி மறைக்கும் இதுபோன்ற பத்திரிக்கைகளை ஒட்டுமொத்தமாக தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும்!

No comments: