அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, June 24, 2011

சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்வு: மண்ணெண்ணெய், டீசலும் தப்பவில்லை

புதுடில்லி: டீசல், சமையல் காஸ், கெரசின் விலை குறித்து முடிவு செய்வதற்காக, அமைச்சர்கள் அதிகார குழு கூட்டம், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் இன்று நடந்தது. இதில் சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம், கெரசின் ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வழங்கியுள்ளது. அதேநேரத்தில், மக்களை நேரிடையாக பாதிக்கக்கூடிய, டீசல், காஸ் சிலிண்டர் மற்றும் கெரசின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும், பல்வேறு அமைச்சர்களை உள்ளடக்கிய அதிகாரக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு மத்திய நிதியமைச்சர் தலைமை வகிக்கிறார். மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலை காரணம் காட்டி, "அமைச்சர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றுள்ளனர்; சில அமைச்சர்கள் டில்லியில் இல்லை' எனவும், மேலும், பணவீக்கமும் பயமுறுத்தி கொண்டிருந்ததால், முடிவு எடுக்க முடியாமல் அரசு திணறியது. இதுபோன்ற பல்வேறு காரணங்களுக்காக, அமைச்சர்கள் குழு கூட்டமும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து, அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டி முடிவு செய்யும்படி பெட்ரோலிய அமைச்சகம் வலியுறுத்தி வந்தது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி சமீபத்தில் சந்தித்தார். அப்போது, "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதால், டீசல் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. மேலும், எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீட்டை சரிக்கட்ட வழங்கப்படும் சலுகைகள் குறித்து முடிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார். தற்போது, மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 490 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இவற்றை சமாளிக்க முடியாததால், டீசல், கெரசின் மற்றும் காஸ் சிலிண்டர் விலையை உடனே அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் நெருக்குதல் காரணமாக, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அதிகாரமிக்க அமைச்சர்கள் குழு, இன்று கூடியது. இதில் சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3ம், கெரசின் ரூ. 2ம் உயர்த்தப்படுகிறது.

அரசு விளக்கம்: கேஸ், டீசல் விலை உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணம் என மத்திய அரசு விளக்கமிளத்துள்ளது.

No comments: