அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது

நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது


நாட்டறம்பள்ளி, ஜன.16-

நாட்டறம்பள்ளியில் போலீசார் போல நடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது :-

நகை வியாபாரம்

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள முருகன் கோவில் அருகே நேற்று காலை போலீஸ் உடை அணிந்த 2 பேர் பொதுமக்களை அணுகி, தங்களிடம் உள்ள விலை உயர்ந்த தங்க நகைகளை மலிவான விலைக்கு வழங்குகிறோம் எனக் கூறி வியாபாரம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டவே, பொதுமக்கள் நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உண்மையான போலீசாரை கண்டதும், அந்த 2 பேரும் மற்றும் உடன் வந்திருந்த 2 பேரும் தப்பி ஓடுவதற்கு முயற்சி செய்தனர். அதற்குள் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

கைது-பறிமுதல்

பின்னர் 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், ஒருவர் காட்பாடியைச் சேர்ந்த பெருமாள் (வயது 42) என்பதும், இன்னொருவர் லத்தேரியைச் சேர்ந்த பாலு (49) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் கூறுகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

அது பற்றிய விவரம் வருமாறு :-

நாங்கள் (பெருமாள், பாலு) 2 பேரும் பொதுமக்களை அணுகி நகைகளை விற்றுக் கொண்டிருக்கும் போது, உடன் வந்திருக்கும் வேலூரை அடுத்த வேலப்பாடியைச் சேர்ந்த குமரவேல் (42) என்பவர் போலீஸ் உயர் அதிகாரி போன்றும், காட்பாடியைச் சேர்ந்த பிரபு (26) என்பவர் கார் டிரைவர் போன்றும் சம்பவ இடத்திற்கு விரைந்து வரச் சொல்லி இருந்தோம்.

பின்னர் அவர்கள் 2 பேரும் நகையை வாங்கியவரிடம் இருந்து நகையையும், எங்கள் 2 பேரையும் போலி போலீஸ்காரர்கள் என்று கூறி நாங்கள் வைத்திருக்கும் பணத்தையும் பறிமுதல் செய்துவிட்டு, எங்கள் 2 பேரையும் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து செல்வது போன்றும், அதன்பிறகு அங்கிருந்து தப்பி ஓடுவது என்றும் திட்டம் தீட்டி இருந்தோம். அதற்குள் நாங்கள் 4 பேரும் உங்களிடம் (உண்மையான போலீசாரிடம்) மாட்டிக் கொண்டோம்.

இவ்வாறு அவர்கள் 2 பேரும் கூறினர்.

விசாரணை

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, போலீஸ் உடையில் இருந்த பெருமாள், பாலு மற்றும் உயர் அதிகாரி போன்று வேடம் அணிந்த குமரவேல், கார் டிரைவர் பிரபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கார், நகைகள் போன்றவற்றை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: