அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

வடமாநிலத் தேர்தல் முடிவுகள் : ஜனநாயகம் பணநாயகமானது

தில்லி சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடாக நடந்து கொண்டிருந்தபொழுது பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் வி.கே.மல்கோத்ரா பற்றி, "மல்கோத்ராவைவிடத் தீவிரவாதம் மேல்'' என்ற நகைச்சுவைத் துணுக்கு அரசியல் வட்டாரத்திலும்

வாக்காளர்கள் மத்தியிலும் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததாம். தில்லி கோட்டையை எளிதாகக் கைப்பற்றிவிடும் என நம்பப்பட்ட பா.ஜக., "அங்கு மண்ணைக் கவ்வியது ஏன்


ஜெய்ப்பூர், அகமதாபாத், தில்லி நகரங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகள், அதனைத் தொடர்ந்து மும்பயில் முசுலீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களால் நான்கு மாநிலங்களிலுமே (தில்லி, இராசஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர்) தனக்கு வெற்றி கிடைத்துவிடும் எனக் கனவு கண்டு வந்தது, பா.ஜ.க. மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வென்று, ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டபோதிலும், தில்லியிலும், இராசஸ்தானிலும் பா.ஜ.க.விற்குக் கிடைத்துள்ள தோல்வி, அக்கட்சியின் நாடாளுமன்றக் கனவை ஆட்டங்காண வைத்துவிட்டது.


முசுலீம் தீவிரவாதிகள் மும்பயில் தாக்குதலைத் தொடங்கிய நான்காவது நாளில் தில்லி சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதற்கு ஒரு வாரம் கழித்து இராசஸ்தான் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. ஏற்கெனவே தீவிரவாத அபாயம், பொடா, கையாலாகாத காங்கிரசு என்ற பிரச்சாரத்தின் மூலம் இந்து மதவெறியைத் தூண்டிக் கொண்டிருந்த பா.ஜ.க.விற்கு, மும்பய்த் தாக்குதல் கூடுதல் உற்சாகத்தை அளித்தது. மும்பய்த் தாக்குதலுக்குப் பிறகு, "தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடு; பா.ஜ.க.விற்கு ஓட்டுப் போடு'' என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் ஒரே முழக்கமாக மாறியது.


மும்பய் தாஜ் விடுதியில் பதுங்கியிருந்த முசுலீம் தீவிரவாதிகளுக்கும் தேசிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்தபொழுதே மும்பய்க்குப் பறந்து வந்தார், அத்வானி. முசுலீம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் தனக்கு நிகர் யாரும் இல்லை எனக் குண்டு மழைகளுக்கிடையே ஓலமிட்டுவிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்குப் பறந்து போனது, இந்தக் கிழட்டு நரி.


அத்வானியைத் தொடர்ந்து நரேந்திர மோடி மும்பய்க்குப் பறந்து வந்தார். "மும்பயில் சண்டை நடந்து கொண்டிருக்கும்பொழுது தன்னால் அகமதாபாத்தில் உட்கார முடியவில்லை'' என்ற "டயலாக்கை'' எடுத்துவிட்டார், அவர். "தியாகியான ஒவ்வொரு சிப்பாய்க்கும், போலீசுக்கும் ஒரு கோடி ரூபாய் சன்மானம் அளிக்கப் போவதாக'' வாக்குறுதியை அள்ளிவிட்டார், அவர். குஜராத்தில் உள்ள அக்சார்தாம் கோவிலில் தாக்குதல் நடந்தபொழுது மோடி எட்டிக்கூடப் பார்க்காததையும் அத்தாக்குலின்பொழுது அறிவிக்கப்பட்ட சன்மானத்தை இன்னமும் பட்டுவாடா பண்ணாமல் மோடி அரசு மெத்தனமாக இருப்பதையும் சுட்டிக்காட்டி மோடியின் வீரத்தையும் தயாள குணத்தையும் நையாண்டி செய்தது, காங்கிரசு.


தீவிரவாதிகளின் தாக்குதலில் விழும் பிணங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தனக்கு ஓட்டு விழும் எனக் கனா கண்டுகொண்டிருந்த பா.ஜ.க.விற்கு தில்லி சட்டமன்றத் தேர்தல் தோல்வி பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. பா.ஜ.க.வின் பரம்பரை ஓட்டு வங்கி எனக் கருதப்படும் தில்லி வாழ் "இந்து' நடுத்தர வர்க்கமும் வியாபாரிகளும்கூட இந்த முறை காங்கிரசுக்கு வாக்களித்திருப்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகள் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்து எழுதியுள்ளன.


பா.ஜ.க., மத்தியப் பிரதேசத்திலும் சட்டிஸ்கரிலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதற்குக்கூட, அக்கட்சியின் முசுலீம் தீவிரவாத எதிர்ப்பு காரணமாக அமையவில்லை. சட்டிஸ்கரில் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து மக்களைக் கவருவதில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே நாய்ச் சண்டையே நடந்தது. பா.ஜ.க., மூன்று ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தை அறிவிக்க, காங்கிரசு இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுவோம் என வாக்குறுதி அளித்தது. உடனடியாக பா.ஜ.க., ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசித் திட்டத்தையும் இலவச உப்புத் திட்டத்தையும் அறிவித்தது. இந்தக் கவர்ச்சி அறிவிப்புகளும், காங்கரசுக்குள் நிலவிய உட்கட்சிப் பூசலும் சட்டிஸ்கரில் பா.ஜ.க.வின் வெற்றிக்குச் சாதகமாக அமைந்தன.


மத்தியப் பிரதேசத்தைப் பொருத்தவரை, தெரியாத சிறீதேவியைவிட தெரிஞ்ச மூதேவி பரவாயில்லை என்ற அடிப்படையில்தான் அம்மாநில மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்துள்ளனர். குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரசு தலைவர்கள் கமல்நாத், திக் விஜய்சிங், அர்ஜுன் சிங், சிந்தியா ஆகியோருக்கு இடையே நடந்த அதிகாரப் போட்டியும்; மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரசுக்கு கிடைக்க வேண்டிய தாழ்த்தப்பட்டோரின் ஓட்டுக்களைப் பிரித்ததும் பா.ஜ.க.வின் வெற்றியை எளிதாக்கின.


இராசஸ்தானில் தீவிரவாதத்தைவிட, பா.ஜ.க. முதல்வரும் முன்னாள் மகாராணியுமான வசுந்தரா ராஜேயின் காட்டு தர்பாரும் (அம்மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 22 முறை பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது) ஊழலும்தான் அம்மாநில மக்களுக்கு அபாயகரமானதாகத் தெரிந்ததால், காங்கிரசால் வெற்றி பெற முடிந்தது.


···


பா.ஜ.க. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், தீவிரவாத எதிர்ப்பு என்ற ஒரு கோஷம் போதுமானது அல்ல என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார், ஆர்.எஸ்.எஸ்இன் ஆஸ்தான ஆலோசகர் "சோ'' ராமஸ்வாமி. மேலும், "சோ'' உள்ளிட்ட முதலாளித்துவ ஆய்வாளர்கள் அனைவரும், "வளர்ச்சியைத் தரக்கூடிய ஆட்சியாளர்களால் மட்டும்தான் ஆட்சியைப் பிடிக்கவோ, தக்க வைக்கவோ முடியும்'' என்ற "கண்டுபிடிப்பை' உதிர்த்திருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக, காங்கிரசின் ஷீலா தீட்சித் தில்லியில் மூன்றாம் முறையாக ஆட்சியைப் பிடித்திருப்பதை அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.


ஷீலா தீட்சித்தின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் தில்லியில் நடைமுறைப்படுத்தப்பட்ட "மெட்ரோ ரயில் திட்டம், போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கக் கட்டப்பட்ட பாலங்கள், பேருந்து போக்குவரத்துக்கான விரைவுப் பாதைகள், வாகனங்களை இயற்கை எரிவாயுவில் மட்டுமே ஓட்ட வேண்டும் என்ற விதி, சமையல் எரிவாயுவிற்கு ரூ.40 மானியமாக அளித்தது'' போன்றவை அவரின் சாதனைகளாகக் கூறப்படுகின்றன.


முதலாளித்துவ அறிஞர்களால் போற்றப்படும் இத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் பொதுமக்களுக்கு எந்த விதத்தில் நேரடியாகப் பலன் அளித்திருக்கிறது? இந்த "வளர்ச்சி' விலைவாசி உயர்வைக் குறைத்திருக்கிறதா? வேலையில்லாத் திண்டாட்டத்தை மட்டுப்படுத்தியிருக்கிறதா? விவசாயமும் சிறு தொழில்களும் நசிந்து போய்க் கொண்டிருப்பதைத் தடுத்திருக்கிறதா? கார் வைத்திருப்பவன் வேண்டுமானால் வழுக்கிச் செல்லும் சாலை இல்லையே என்று கவலைப்பட முடியும்; ஆனால், வேலையில்லாப் பட்டாளத்தின் கவலையோ வேறு மாதிரியாகத்தான் இருக்க முடியம். எனவே, பொருளாதார வளர்ச்சி என்பதை எல்லோருக்கும் பொதுவானதாகப் பார்க்க முடியாது.


பல்வேறு முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட இந்த வளர்ச்சியை "வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி'' என்றுதான் குறிப்பிட்டு வருகிறார்கள். தில்லிக்கு வளர்ச்சியைத் தந்திருக்கும் ஷீலா தீட்சித்கூடத் தேர்தலுக்கு முன்பாக விலைவாசி உயர்வு தங்களைக் கவிழ்த்துவிடுமோ என்றுதான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒருவேளை ஷீலா தீட்சித் தோற்றுப் போயிருந்தால், இந்த முதலாளித்துவ நிபுணர்கள் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டியிருப்பார்கள்.


···


இந்த "வளர்ச்சி' சட்டமன்றத்தின் முகத்தையே மாற்றிவிட்டது. இராசஸ்தான், மத்தியப் பிரதேசம், தில்லி, சட்டிஸ்கர், மிஜோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 629. இந்த 629 இடங்களில் வெற்றி பெற்றவர்களில் 40 சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்கள். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தில்லி சட்டமன்ற உறுப்பினர்களில் 31 சதவிகிதப் பேரின் சொத்து மதிப்பு ஐந்து கோடிக்கும் அதிகம். பின்தங்கிய மாநிலமான சத்திஸ்கரில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கோடீசுவரர்கள்.


இது, ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டதைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கோடீசுவர உறுப்பினர்கள் விவசாயம் நசிவடைவதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். விவசாயத்தை நாசமாக்கும் "ரியல் எஸ்டேட்'' வியாபாரம் பற்றியும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியும்தான் அக்கறை காட்டுவார்கள். ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்வதைவிட, பங்குச் சந்தை வீழ்வதுதான் இவர்களுக்கு அச்சமூட்டுவதாக இருக்கும். கிரிமினல்கள் அரசியலில் புகுந்திருப்பது எத்தகைய அபாயமானதோ, அதற்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இந்தக் கோடீசுவரர்களின் ஆதிக்கம். இந்தக் கோடீசுவரர்கள் தேர்தலில் வெற்றிபெற எவ்வளவு பணம் செலவழித்திருப்பார்கள், ரவுடிகளை இறக்கிவிட்டிருப்பார்கள், சாதி பலத்தைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்பதெல்லாம் மூடிமறைக்கப்பட்டு, "வளர்ச்சி'யால் இவர்கள் வெற்றி அடைந்திருப்பதாகக் கூறுவது மோசடித்தனமானது.


"மார்க்சிஸ்டு'களோ மூன்றாம் அணி வெற்றி பெற்றால் இந்த நிலைமை மாறிவிடும் என உடுக்கை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இராசஸ்தானில் சி.பி.எம்., மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருப்பதையும்; பகுஜன் சமாஜ் கட்சி தில்லி, இராசஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் 16 இடங்களில் வெற்றி பெற்றிருப்பதையும் காட்டி, மூன்றாம் அணி என்ற மண் குதிரையை முன் நிறுத்துகிறது, சி.பி.எம்.


காங்கிரசு மற்றும் பா.ஜ.க.வின் கொள்கைகளிலிருந்து இந்த மூன்றாம் அணியின் கொள்கை, எந்த விதத்தில் மாறுபட்டது என்பதுதான் அடிப்படையான கேள்வி. போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு, இந்த "மூன்றாம்'' கட்சிகள் அனைத்தும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பது ஏற்கெனவே நிரூபணமாகியிருக்கிறது. ஓட்டுக்களைப் பிளந்து, அதன் மூலம் காங்கிரசின் வெற்றிக்கோ அல்லது பா.ஜ.க.வின் வெற்றிக்கோதான் இந்தக் கட்சிகள் பயன்படும் என்பதையும் இந்தச் சட்டமன்றத் தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. ஒருவேளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்த மூன்றாம் அணி மாற்று சக்தியாக உருவெடுத்தால்கூட, எம்.பி.க்களை விலைக்கு வாங்கும் குதிரை வியாபாரமும், சந்தர்ப்பவாத கூட்டணிகளும் தான் உருவாகுமேயொழிய, "தேசிய' அரசியலில் வேறெந்த மாற்றத்தையும் காண முடியாது.

No comments: