அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

வீட்டோ' என்ற பேரழிவு ஆயுதம

'வீட்டோ' என்ற பேரழிவு ஆயுதம் அச்செடு மின்னஞ்சல்
வியாழன், 15 ஜனவரி 2009
குழந்தைகள்தாம் குறி
ஃபலஸ்தீனத்தில் பிறந்த பாவம் செய்ததற்காக கஸ்ஸாவாசிகளுக்கு உலகம் முழுதும் வாழும் மனிதாபிமானம் மிக்க ஆட்சித் தலைவர்கள், அமைப்புகள் செய்திருக்கும் பேருதவிகள்தாம் இந்த அறிவிப்புகள்:
"இஸ்ரேல் பொழிந்த பாஸ்ப்பரஸ் குண்டு மழையில் ஃபலஸ்தீன் தீவிரவாத(!)க் குழந்தைகள் செத்துப் போய் விட்டார்களா? இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான (பிணத்திற்கு உடுத்தும்) கஃபன் துணி முதல் அனைத்துச் செலவுகளையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; ஆனால், இறந்து போனவர்களைப் புதைப்பதற்கான இடம் போதவில்லை என்ற உங்களது குறையை எங்களால் தீர்த்து வைக்க முடியாது".
"படுகாயம் அடைந்துள்ள பெண்களுக்கும் முதியவர்களுக்கும் டிஞ்சர் முதல் அனைத்து வகையான மருந்துகளையும் கூடிய விரைவில் நாங்கள் அனுப்பி வைப்போம்; அனைவரையும் தங்க வைத்து மருத்துவம் செய்வதற்கு மருத்துவ மனைகளும் மருத்துவர்களும் இல்லையே என்று நீங்கள் எங்களைக் குற்றம் சொல்லக் கூடாது".
"வசித்த வீடுகளையும் உடுத்த உடைகளையும் இழந்து விட்டவர்கள் எத்தனை ஆயிரத்துக்கு மேற்பட்டு இருந்தாலும் நாங்கள் உபயோகித்த உடைகளை மட்டுமின்றி புதிய உடைகளையும் வாங்கிப் போட்டு, அடுத்த கண்டெய்னரில் அனுப்பி வைப்போம். இஸ்ரேல் அனுமதித்தால் உங்களுக்கு அவை வந்து கிடைத்து விடும்".
"இன்ன, இன்ன ஊடகங்களில் எங்களது கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறோம்".
"நாங்கள் தெரிவித்த வருத்தங்கள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன".
"நாங்கள் நடத்திய பேரணி, வீதிப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கெடுத்துள்ளனர்".
ஆம்! ஃபலஸ்தீனத்தில் பிறந்த பாவம் செய்ததற்காக கஸ்ஸாவாசிகளுக்கு உலகம் முழுதும் வாழும் மனிதாபிமானம் மிக்க ஆட்சித் தலைவர்கள், அமைப்புகள் செய்திருக்கும் பேருதவிகள்தாம் மேற்காணும் அறிவிப்புகள்.
HTML clipboard
டிஸம்பர் 27இல் இஸ்ரேல் தொடங்கிய அக்கிரமத் தாக்குதலால் ஏறத்தாழ கஸ்ஸா நகர் முற்றிலும் அழிந்து கொண்டிருக்கிறது; மஹ்மூத் அப்பாஸுக்கும் அவர் பகுதி மக்களுக்கும் சின்னக் கீறல்கூட ஏற்படாமல் ஹமாஸை அழித்தொழிக்கிறோம் என்ற பெயரில் கஸ்ஸா மக்களை இஸ்ரேல் குறிபார்த்து அழித்தொழிக்கிறது. கஸ்ஸா குழந்தைகளும் பாடசாலைகளும்தாம் இஸ்ரேலின் பிரதானக் குறி; அக்குழந்தைகள் வருங்காலத் தீவிரவாதிகளன்றோ?
***
இத்தனை அநியாயங்களுக்கும் அடிப்படைக் காரணம் 'வீட்டோ' என்ற சர்வாதிகாரப் பேரழிவு ஆயுதம்! 'வீட்டோ' என்ற இலத்தீன் சொல்லுக்கு "மறுக்கிறேன்" என்பது உண்மையான பொருளாம். ஆனால், "அழிக்கப் போகிறேன்" என்பதே நடப்பிலுள்ள, நடைமுறைப் பொருளாக ஆகி விட்டது.
அமெரிக்கா, தனது கள்ளப் பிள்ளையான இஸ்ரேலைக் காப்பதற்காகப் பயன் பாட்டில் வைத்திருக்கும் வீட்டோ என்ற ஜனநாயகக் கேலிக்கூத்துக் குறித்துச் சுருக்கமாக இங்குக் காண்போம்.
189 நாடுகள் அங்கம் வகித்தாலும் அமெரிக்காவின் கைப்பாவைதான் ஐக்கிய நாடுகள் சபை என்பது. ஐ.நா. சபையின் உள் அமைப்பான பாதுகாப்புப் பேரவை United Nations Security Council (UNSC)இல் மொத்தம் 15 நாடுகள் பொறுப்பு வகிக்கின்றன. அந்தப் 15 நாடுகளுள் 'நிரந்தர உறுப்பினர்கள்' என்ற பெயரில்:

1. அமெரிக்கா

2. ரஷ்யா

3. சீனா

4. ஃப்ரான்ஸ்

5. இங்கிலாந்து

ஆகிய ஐந்து நாடுகள் உள்ளன. இவை வல்லரசு நாடுகள் எனச் சொல்லப் படுபவை.
பாதுகாப்புப் பேரவையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக இப்போது ஆஸ்த்ரியா (2010), ஜப்பான் (2010), உகண்டா, புர்கினா ஃபாஸோ, லிபியா, வியட்நாம், கோஸ்டா ரிகா, மெக்ஸிகோ (2010), குரோஷியா, துருக்கி (2010) ஆகியன இடம் பெறுகின்றன. தற்காலிக உறுப்பு நாடுகள் அவ்வப்போது மாற்றத்துக்கு உரியவை.

நிரந்தர-தற்காலிக உறுப்பு நாடுகளின் சில உரிமைகள்:

நிரந்தர (5) உறுப்பு நாடுகள் மற்றவை
அணு ஆயுதங்களை வைத்துக் கொள்ளலாம் - Nuclear Non-Proliferation Treaty (NPT). கூடாது
புதிய அணு ஆயுதச் சோதனை செய்யலாம். கூடாது Comprehensive Test Ban Treaty (CTBT)
தீர்மானங்கள் கொண்டு வரலாம். தீர்மானத்தில் பரிந்துரைக்க மட்டுமே முடியும்.
பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தைக் கூட்டலாம். பாதுகாப்புப் பேரவையில் கலந்து கொள்ளலாம் - பேரவை அனுமதித்தால்.
உறுப்பு நாடுகளில் ஏதேனும் பிரச்சினை என்றால் அது குறித்து விசாரணை நடத்தலாம். முடியாது.
பிரச்சினைகளுக்கான தீர்வைப் பரிந்துரைக்கலாம். கருத்துச் சொல்லலாம்.
'தவிர்க்க முடியாத சூழல்' அல்லது 'பேரழிவு ஆயுதம்' போன்ற ஏதாவது பொய்க் காரணம் கூறி நேரடியாகப் போர் நடவடிக்கையில் ஈடுபடலாம். எடுக்கலாம் (வியட்நாம், வடகொரியா, இராக் போர்கள்). முடியாது.
தற்காலிக உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து, ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தாலும் ஒரேயொரு 'நிரந்தர உறுப்பு' நாடு 'வீட்டோ' என்று சொல்லி விட்டால் எவரும் எதுவும் செய்ய முடியாது.
'வீட்டோ' என்பது, 'ஜனநாயகப் பேரரசு' என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கா, தன் கையில் வைத்துக் கொண்டு தனது செல்லக் கள்ளக் குழந்தையான இஸ்ரேலுக்கு விளையாடக் கொடுக்கும் விளையாட்டுப் பொருளாகும்.
தமக்குள் ஒற்றுமை இல்லாத முஸ்லிம் அரசுகளை ஏமாற்றி, பல கூட்டுத் தந்தைகளால் 'உருவாக்க'ப் பட்டாலும் இஸ்ரேல் என்ற கள்ளக் குழந்தைக்குத் தார்மீகத் தந்தையாகத் திகழும் அமெரிக்கா, தனது நயவஞ்சகத்தின் மூலம் மத்தியக் கிழக்கின் முஸ்லிம் நாடுகளை ஒன்றோடொன்று சேரவிடாமல் பார்த்துக் கொள்வதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.
இஸ்ரேலுக்கு இரத்த வெறி தலைக்கேறும் போதெல்லாம் ஃபலஸ்தீனர்கள் மீது தன் ஓநாய் நாக்கை நீட்டுவதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. எப்போதாவது லெபனான் பக்கம் திரும்பினாலும் ஹிஸ்புல்லாஹ்விடம் அடிபட்டு, வெற்றிகரமாகப் பின்வாங்கி ஓடியிருக்கிறது.
***
கஸ்ஸா மீது (27.12.2008இல்) இஸ்ரேல் தாக்குதல் தொடுத்து மூன்றாவது வாரம் தொடங்கி விட்ட இதுகாறும் 1000க்கும் அதிகமான ஃபலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்; கொல்லப் பட்டவர்களுள் குழந்தைகளே அதிகம். ஐயாயிரம் பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர். ஏறத்தாழப் பாதிக்கு மேல் வீடிழந்து வீதியில் நிற்கின்றனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாக வெளியேறி விட்டனர்.
மனிதாபிமானத்துக்கு எதிராகச் செயல் படுவது இஸ்ரேலுக்குப் புதிய ஒன்றல்ல; இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நா. சபையின் அனைத்துத் தீர்மானங்களையும் படித்தே பார்க்காமல் அது குப்பைக் கூடையில் வீசியெறிந்து விடும். படிக்க வேண்டிய நிலை வந்தால் இருக்கவே இருக்கிறார் 'அமெரிக்க அப்பா'.
உலகின் மற்ற நாடுகளைக் கட்டுப்படுத்தும் ஜெனீவா ஒப்பந்த சரத்துகள் முதல், ஒப்புக்குச் சமாதானப் பேரவை என்ற பெயரில் செயல்படும் அமெரிக்காவின் கைப்பாவை ஐ.நாவின் தீர்மானங்கள் வரை எதையுமே இஸ்ரேல் கண்டு கொள்வதில்லை. உலக நாடுகளின் நெருக்குதலுக்குப் பணிந்துக் கடந்த 9.1.2009ஆம் தேதி இஸ்ரேலுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தில் கூட, ஃபலஸ்தீனுக்குள் அத்துமீறி நுழைந்து அநியாயம் இழைத்து வரும் இஸ்ரேலை உடனடியாக வெளியேற எச்சரிக்கை விடுப்பதை விடுத்து, கவனமாக "இரு தரப்பும் போரை நிறுத்த முன்வர வேண்டும்" என ஐ.நா வெட்கமின்றி முனகியது. இச்சிறு முனகலைக் கூடப் பொறுத்துக்கொள்ளாத இஸ்ரேல் அதற்காக, கஸ்ஸாவிலுள்ள ஐ.நா. அலுவலகக் கட்டடத்தின் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியது.

ஐ.நா. அலுவலகத்தை இஸ்ரேல் தரைமட்டமாக்கியவுடன், "இதுகாட்டுமிராண்டித்தனமாகும்; இதற்காக இஸ்ரேல் மிகப்பெரிய விலை தர வேண்டியிருக்கும்" என தற்பொழுது மத்திய ஆசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பேன் கி மூன் கூறியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் சின்னாபின்னமாக்கிய இஸ்ரேலை எதிர்த்துக் கடுமையாக ஒரு சொல் உதிர்க்க எழாத நாக்கு, அவர்களது ஒரு கட்டிடம் தரைமட்டமானவுடன் எழுந்துள்ளது. முஸ்லிம்களின் உயிருக்கு உலக அமைதிப் பேரவை வைத்துள்ள மதிப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது!

முஸ்லிம் நாடுகள் என்றால் முந்திக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு எழுதப்படாத அனுமதி பெற்றுள்ள அமெரிக்காவினை அனுசரித்துப் போவதையே பெயருக்கு "நடுநிலை நாடுகள்" எனச் சொல்லிக் கொள்ளும் நாடுகளும் கடைபிடிக்கும் நிலையில், எல்லா ஆதரவையும் இழந்து தங்கள் மீது அத்துமீறி அராஜகம் புரிந்து வரும் இஸ்ரேலைக் கல்லையும் வெறும் கையையும் கொண்டு தீரத்துடன் எதிர்த்து நிற்கும் ஃபலஸ்தீனியர்களுக்காக முஸ்லிம்கள் நாடுகள் இதுவரை என்ன செய்திருக்கின்றன?

இரகசியமாகவும் வெளிப்படையாகவும் இஸ்ரேலோடு வணிக உறவு வைத்திருக்கும் வளைகுடா நாடுகள், இஸ்ரேலுடனான தங்கள் வணிக உறவுகளைக்கூட துண்டித்துக் கொள்ள முன்வரவில்லை என்பது வெட்கக் கேடான விஷயம்.

'ஃபலஸ்தீன் பிரச்சனையில் மூன்றாவது மனிதன் போன்று ஒப்புக்கு ஒரு கை கொடுக்கும் நிலைபாடு எடுக்கும் உலக முஸ்லிம்கள், மனப்பூர்வமாக இப்பிரச்சனையில் எவ்வகையில் என்ன செய்ய இயலும் என்பதைக் குறித்துச் சிந்திப்பதோடு ஃபலஸ்தீன் பிரச்சனையில் உலக முஸ்லிம்களின் தலையீடும் பங்கும் எந்த அளவிற்கு ஈடுபாட்டோடு இருக்க வேண்டும் என்பதைக் குறித்தும் ஆராய வேண்டியது அவசியம்.

இன்று, ஃபலஸ்தீன் பிரச்சனை என்றாலே அது, சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் நிலைநிற்பிற்கான போராட்டமாக நிலைப்பாடு எடுப்பதோடு நிறுத்திக் கொள்ளும் நிலை உலக நடுநிலைவாதிகளிடையேயும் ஃபலஸ்தீனர்கள் என்றால் முஸ்லிம்கள் என்ற வகையில் சகோதரர்களுக்கு எதிராக நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்காக மனம் வருந்தி அவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளும் நிலை உலக முஸ்லிம்களிடையேயும் நிலவி வருகிறது.

ஃபலஸ்தீன் பிரச்சனையுடன் உலக முஸ்லிம்களுக்கான தொடர்பு என்பது வெறும் நிலம் சார்ந்த விஷயம் மட்டும்தானா?

இல்லை; நிச்சயமாக இல்லை.

முஸ்லிம்களின் முதல் கிப்லா, - மஸ்ஜிதுல் அக்ஸா - இதுவே இப்பிரச்சனையின் மூலக்கரு.

உலக முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா, ஃபலஸ்தீன் மண்ணில் இருந்த ஒரே காரணத்திற்காக அல்லவா, ஃபலஸ்தீன் சமுதாயம் தன் சொந்த இருப்பிடம் இழந்து, இஸ்ரேலால் அடக்கி ஒடுக்கப்படுகிறது?.

பிரச்சனையின் இந்த யதார்த்த உண்மையை உலக முஸ்லிம்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது.

இதனை மனதில் நிறுத்திச் சிந்தித்தால், ஃபலஸ்தீனுக்கான போராட்டம் என்பது உலக முஸ்லிம்கள் ஒவ்வொருவரின் மீது கடமை என்பது தெளிவாகும்.

இஸ்ரேல் கொன்றொழிக்கும் அப்பாவிக் குழந்தைகளையும் பெண்களையும் கஃபன் பொதியத் தேவையான துணிகளையும் ஏதோ நம்மால் இயன்ற சிறு தொகையையும் அளித்து விட்டு, தினசரித் தொழுகையில் ஒன்றோ இரண்டோ முறை "குனூத்" ஓதிவிட்டால் தன் கடமை முடிந்தது என்பது போன்ற அணுகுமுறை அநியாயம் இழைக்கப்படும் அந்த மக்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தித் தந்து விடுமா?

கூண்டுக்குள் அடைத்து வைத்துக் கூட்டங் கூட்டமாக நரவேட்டை நடத்திக் கொண்டிருப்பது போதாதென்று, "ஃபலஸ்தீன் மக்களுக்கு நிவாரண உதவிகளைச் செய்வதற்காக ஒரு அமைச்சரை நியமித்துள்ளதாக" இஸ்ரேல் இன்று அறிவித்துள்ளது. இதற்கு உண்மையான அர்த்தம் என்னவென்றால், கஸ்ஸா மக்களைக் கொன்றொழிப்பதை மட்டுமே இலட்சியமாகக் கொண்டு ஃபலஸ்தீனில் இரத்த வேட்டை நடத்தி வரும் இஸ்ரேல், அந்த மக்களுக்காக உலகின் மற்ற நாடுகள் அனுப்பும் நிவாரணப் பொருட்களையும் தடுத்து, அவர்களை மொத்தமாக ஒழிப்பதற்கான நடவடிக்கையே இது என்பது இஸ்ரேலின் குள்ளநரித் தனத்தைக் கருத்தில் கொள்ளும் எவருக்கும் எளிதாகப் புரிந்து கொள்ளத் தக்க 'உட்பொருள்'தான் என்பது தெளிவாகும்.

ஏற்கெனவே இரான் அனுப்பியுள்ள நிவாரணபொருட்கள் அடங்கியக் கப்பலைத் தடுத்து வைத்துள்ள இஸ்ரேல், உலக நாடுகளிலிருந்து வரும் நிவாரணபொருட்களைக் கஸ்ஸாவினுள் செல்ல அனுமதிக்காமல் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்நிலையில், பத்தோடு பதினொன்றாக வெறும் நிவாரணப் பொருட்களை மட்டும் அனுப்புவதால் என்ன பயன்? என்பதையும் அத்தோடு தங்களின் கடமை முடிந்து விட்டதா? என்பதையும் மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

மனிதனைப் போன்று கூட்டாகச் சிந்தித்து முடிவுகள் எடுத்து எதிரிகளிடமிருந்துத் தங்களைப் பாதுகாக்கத் தெரியாத ஐந்தறிவுள்ள மிருகங்கள்கூட, தங்களது சக்திக்கு மீறிய பலசாலி மிருகங்களின் தாக்குதலின்போது தமக்குள் கூட்டாக ஒன்றிணைந்து நின்று ஒன்றையொன்று பாதுகாத்துக் கொள்கின்றன.

இன்றைய ஃபலஸ்தீன் பிரச்சினை முதல், உலகின் அனைத்து முஸ்லிம்களுக்கு எதிரான எதேச்சதிகார நாடுகளின் அத்துமீறல்களுக்கும் முஸ்லிம்களின் உடமைகள் அபகரிக்கப்படுவதற்கும் முஸ்லிம்களிடையேயுள்ள ஒற்றுமையின்மையும் சக்தி வாய்ந்த ஒரு தலைமையின்மையுமே மூல காரணங்களாகும். அனைத்து நியாயங்களும் தன்னகத்தே கொண்டுள்ள ஃபலஸ்தீன் மக்களின் இன்றைய நிலைக்கு, உலக முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் ஆட்சியாளர்களும் ஒருவகையில் காரணமாவார்கள். 19 நாட்களைக் கடந்து தற்பொழுதும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி திமிருடன் கஸ்ஸாவினுள் அட்டூழியம் புரிந்து வரும் இஸ்ரேலின் செயல்பாட்டிற்கு எதிராக, உலகைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான எல்லாவித வளங்களையும் ஒருங்கே பெற்றுள்ள இந்த முஸ்லிம் சமுதாயம் எதுவும் செய்ய முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை நினைத்துப் பார்த்தால், ஒரு தலைமையையும் ஒற்றுமையையும் விரும்பாத இஸ்லாமிய எதிர்ப்புச் சிந்தனை, நமது சமுதாயத்தின் ஆட்சியாளர்கள் முதல் அடிமட்டக் குடிமக்கள்வரை ஊறிப் போனதைத்தான் வெளிப் படுத்துகிறது.

தொலைநோக்கு நடவடிக்கையாக மேற்கொள்ளத் தக்கவை யாவை?

குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள வீட்டோ அதிகாரம் முற்றிலுமாக ஒழிக்கப் படவேண்டும்.

ஐ.நாவில் உறுப்பினர்களாக உள்ள அனைத்து நாடுகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.

கைகள் கட்டப்படாத முழு அதிகாரம் படைத்ததாக ஐ.நா உருவாக்கப்பட வேண்டும்

இது நடக்காத பட்சத்தில், உலகின் நடுநிலை நாடுகளுடன் இணைந்து "சுய அதிகாரம் படைத்த" உலக அமைதி சபை ஒன்றை உருவாக்குவதற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் முயல வேண்டும். அதற்கான முயற்சியில் ஏற்படும் சோதனைகளை எதிர்கொண்டு, முன்னேறுவதைப் பொறுத்தே, எதிர்காலத்தில் "அநியாயம் இழைக்கப்படும் மக்களுக்கான நியாயம்" வழங்கப்படுவது உறுதிப் படுத்தப்படும்.

தங்களின் யதார்த்தக் கடமைகளை மறந்து, அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும் அசத்தியம் அழியும்வரைக் கூட்டாக இணைந்துப் போராடவும் வேண்டிய இந்தச் சமுதாயம், மறந்துபோன தனது கடமையை மீட்டெடுத்து, நியாயத்தை நிலைநாட்ட ஓரணியில் திரண்டு போராட முன்வரவேண்டும்.

இதுவே ஃபலஸ்தீன் பிரச்சனைக்கு மட்டுமின்றி அநீதிக்குள்ளாகும் எந்த நாட்டையும் பாதுகாக்கக் கூடிய - உண்மையான 'பாதுகாப்புக் கவுன்ஸிலுக்கான' ஒரே தீர்வாக இருக்கும்!

No comments: