அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

சி.பி.எம். – அ.தி.மு.க. தேர்தல் கூட்டணி : 'பச்சையான" பிழைப்புவாதம்

போயஸ் தோட்டத்திற்கு நவம்பர் மாதம் ஐயும் — அதாவது வலதும், டிசம்பர் மாதம் எம்மும் — அதாவது இடதும் விஜயம் செய்தார்கள். ஐக்கு பரதன், தா.பாண்டியன், சி.மகேந்திரன் போன்றோரும், எம்முக்கு பிரகாஷ் காரத்தும்,

வரதராசனும் தோட்டத்தில் உள்ளேன் ஐயா சொல்லி, அம்மாவுடன் பேசிவிட்டு வந்தார்கள். அதிலும் காரத்துடன் சென்றிருந்த தோழர்கள் புரட்சித் தலைவிக்கு பிடித்த இளம் பச்சைச் சட்டையில் சென்றிருந்தார்களாம்.


அம்மாவுக்கு இணையாக தோழர்கள் அமர்ந்த அந்த நாற்காலியை வாண்டையார், சேதுராமன், சுப்பிரமணிய சுவாமி, அத்வானி, ஜஸ்வந்த் சிங், மோடி, வைகோ முதலானோர் ஏற்கெனவே தேய்த்திருக்கிறார்கள் என்பதால், அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுதான். தானைத் தலைவியின் முன் சற்று சங்கோஜத்துடன் பேசிய தோழர்களுக்கு மோடிக்கு கொடுக்கப்பட்ட விருந்து போல வரவேற்பு இல்லையென்றாலும், சந்திப்பு அணுக்கமாகத் தான் நடந்தது. புரட்சித் தலைவிக்கு பிரகாஷ் காரத் கொடுத்த பெரிய பூச்செண்டு படம் எல்லாப் பத்திரிகைகளிலும் இடம் பெற்றன.


அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மைய அரசு பணிந்ததை ஒரு வருடமாக எதிர்ப்பது போல எதிர்த்து, மிரட்டுவது போல மிரட்டி, எச்சரிப்பது போல எச்சரித்து, அழுவது போல அழுது, இன்னும் பல செய்து பார்த்து, இறுதியில் காங்கிரசு கூட்டணி அரசு, "போடா வெண்ணை'' என்று தூக்கி எறிந்ததும் வேறு வழியின்றி ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள், போலிகள். ஒருவேளை காங்கிரசு அரசு கவிழ்ந்தால், அடுத்த தேர்தலில் என்ன செய்வது என்ற கவலை அவர்களை வாட்டியது. முன்னெச்சரிக்கையாக அடுத்த தேர்தலில் பா.ஜ.க தோற்று, காங்கிரசு வென்றால் மீண்டும் ஆதரவு உண்டு என்பதைத் தோழர்கள் சுற்றி வளைத்து ஒத்துக் கொண்டார்கள். ஆனால், தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற தொகுதிகளாவது மீண்டும் கிடைக்க வேண்டுமே என்ற கவலை தோழர்களை வாட்டியது.


இடையில் மூன்றாம் அணி என்று சற்று "பாவ்லா'' காட்டினார்கள். "குடியரசுத் தலைவர்' தேர்தலிலேயே இந்த மூன்றாம் அணி தோன்றிய வேகத்தில் பறந்து விட்டது. முக்கியமாக அம்மா கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதாக சவடால் அடித்து, பின்னர் பா.ஜ.க.விற்கு வாக்களித்து மூன்றாவது அணியின் தகுதியை உலகுக்கு அறிவித்தது.


நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட உடனேயே பிரகாஷ் காரத் சண்டமாருதம் செய்து முழங்கிய சேதி என்னவென்றால், காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல், அதிலிருந்து மாநிலக் கட்சிகள் வெளியேற வேண்டுமென்பதாகும். இந்த முழக்கத்தைக் கேட்ட பிறகு தான் முலாயம் போன்ற கட்சிகள் கப்பலில் இடம் பிடித்தனர். அம்மாவும் எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் காங்கிரசு அவ்வளவாக அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதாகச் செய்திகள் அடிபட்டன. தமிழக பா.ஜ.க.வும் இதை வெளிப்படையாக ஒரு கோரிக்கையாக வைத்தும், அம்மாவின் மனதை கரைக்கும் வண்ணம் பல அறிக்கைகளை வெளியிட்டும் நோட்டம் பார்த்தது. அப்போது அம்மா எடுத்த முடிவு என்னவென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணி, தேர்தலுக்கு பின்பு வேறு ஒரு கூட்டணி! இப்போது தேர்தலுக்குப் பின்னர்தான் கூட்டணி என்பதையும் கூச்ச நாச்சமின்றி பா.ஜ.க. ஏற்றுக் கொண்டு கச்சேரியை செய்து வருகிறது.


இத்தகைய புரட்சிகரமான தருணத்தில் ஐய்யுக்கும் எம்முக்கும் அடித்தது ஜாக்பாட். ஏற்öகனவே புரட்சித் தலைவியின் இரசிகராக அறியப்பட்ட வலதின் தா.பாண்டியன், எதிர்காலத்தில் அம்மாவுடன் கூட்டணி வைக்கப் போகும் தருணத்தை முன்னறிந்து கருணாநிதியை அம்மா ரேஞ்சுக்கு கண்டித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். அதனால்தான் இடதுகளை விட அதிவேகத்தில் ஒரு மாதம் முன்னதாகவே அம்மாவைச் சந்தித்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். இது எம்முக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது. அவர்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைக்கலாமா என்று ஒரு மயக்கத்தில் இருந்ததால், புரட்சிக் கலைஞரையும் சந்தித்து நோட்டம் பார்த்தார்கள். அதைப் பரிசீலித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக அம்மாவைச் சந்திக்க வேண்டும் என்று நெருக்கடியை தா.பாண்டியன் உருவாக்கி விட்டார். இதில் தாமதித்தால் ஐயை விட எம்முக்கு ஓரிரு சீட்டுகள் குறைந்து விட்டால் என்ன செய்வது?


தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்று "மார்க்சிஸ்ட்' கட்சியின் மாநிலக் குழுவில் ஒத்த கருத்து இல்லையென்பதால், முடிவு எடுக்கும் உரிமை அரசியல் தலைமைக் குழுவிடம் அளிக்கப்பட்டதாம். அரசியல் தலைமைக் குழுவும் அரட்டை கச்சேரி நடத்தி எடுத்த ஒரே முடிவு என்னவென்றால், தேர்தலில் அம்மாவுடன் கூட்டணி வைப்பது என்பதுதான்.


இந்த முடிவை கனத்த இதயத்தோடு பிரகாஷ் காரத் மாநிலக் குழுவிடம் தெரிவித்ததாக "நக்கீரன்'' எழுதியிருந்தது. இவ்வளவு சென்டிமெண்டோடு சி.பி.எம். பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து, சென்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளை வென்றது "மார்க்சிஸ்ட்' கட்சி. இப்போது காங்கிரசோடு வலுவான கூட்டணியாகத் திகழும் தி.மு.க. இந்த உறவை முறித்துக் கொள்வதாக இல்லை. அதனால் சி.பி.எம். சென்றதால் கருணாநிதியொன்றும் கவலைப்படவில்லை. மொத்தத்தில் நான்கு தொகுதிகள் மிச்சம் என்பது அவர் கணக்கு. போலி கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை அந்த நான்கு தொகுதிகளையும் மீண்டும் பெறவேண்டுமென்றால் அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்க வேண்டும்.


ஆக மொத்தம், இரண்டு அல்லது ஒன்றரை சீட்டுக்களுக்காக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று சொல்லி விட்டுப் போகவேண்டியது தானே? மாறாக, பயங்கரமான ராஜதந்திர முடிவு எடுத்தது போல, சி.பி.எம் "பில்டப்'' கொடுப்பதைத்தான் சகிக்க முடியவில்லை. அதாவது காங்கிரசு, பா.ஜ.க. இரண்டு கட்சிகளையும் போலிகள் எதிர்க்கிறார்களாம். அதனால் மூன்றாவது அணிக்கு வலிமை சேர்க்கும் வண்ணம் பல மாநிலக் கட்சிகளை இழுப்பதுதான் அவர்களது தொலைநோக்கு அரசியலாம். சரி, இருக்கட்டும்.


மதவாதம், காங்கிரசு இரண்டு சக்திகளையும் எதிர்க்கத் துணிந்த போலிகள் அம்மாவை மதவாதமில்லையென்று கருதுகிறார்களா? மதமாற்றத் தடை சட்டம், ஆடுகோழி பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம், மோடி பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்து கொண்டது, சென்னைக்கு மோடி வந்தபோது அழைத்து விருந்து வைத்தது, சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு — இப்படி பலமுறை அம்மா தான் ஒரு இந்துமதவெறி பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார்களே? இன்னும் சொல்லப்போனால், அம்மாவின் இந்துத்வ வேகம் பா.ஜ.க.வை விட அதிகமாகத்தானே இருக்கிறது? எல்லவாற்றுக்கும் மேலாக தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம் சாயும் என்பதை எல்லா பத்திரிகைகளும் எழுதுகின்றன. மூன்றாவது அணி கணிசமாகத் தோல்வியுறும் பட்சத்தில் அம்மா தாமரை யோடு சங்கமிப்பார் என்பதை போலிகளும் மறுக்க முடியாதல்லவா?


அம்மாவின் கணக்கு, தேர்தலின் போது முசுலீம்களின் வாக்குகள் வேண்டும், அதனால் பி.ஜே.பி.யுடன் கூட்டணி கிடையாது. தேர்தலுக்கு பின்னர் பா.ஜ.க.வுடன் கூட்டு வேண்டும், அப்போது போலிகளுடன் கூட்டணி கிடையாது. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை சுருட்டும் ராஜதந்திரத்தில் அம்மா தானே செல்வாக்கு செலுத்துகிறார்? இப்படி மறைமுகமாக பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்குத்தான் போலிகளின் இந்தக் கூட்டணி தந்திரம் உதவுகிறது. ஆயினும், இந்த சந்தர்ப்பவாதத்தை போலிகள் ஒத்துக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை தேர்தலுக்கு பின் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. இரண்டும் தோல்வியுற்று மூன்றாவது அணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில், இடதுசாரிகளுக்கு நிறைய எம்.பி.க்கள் வேண்டுமாம். ஆதலால் எந்த எழவுடனும் கூட்டணி வைத்துக் கொண்டு நிறைய சீட்டுக்களை அள்ள வேண்டுமாம்.


இரண்டு சீட்டுக்களுக்காக இல்லாத கொள்கைகளையெல்லாம் கூறி தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தும் போலிகளிடம், அம்மா கறாராக கூறியிருக்கும் விசயம் என்னவென்றால், மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதியை முன்னிறுத்தக் கூடாதாம். இந்த ஒரு விசயமே மூன்றாவது அணியின் வலுவை விளக்கப் போதுமானது. அடுத்து தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி தோல்வியுற்று காங்கிரசு, பா.ஜ.க. இரண்டுமே சம அளவில் வெற்றி பெற்றால் போலிகள் என்ன செய்வார்கள்? மதவாதத்தை அனுமதிக்க கூடாது என்று காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள். அநேகமாக இதுதான் நடக்கப்போகும் உண்மையென்றால், இப்போது ஏன் காங்கிரசுக்கு ஆதரவை விலக்க வேண்டும்? தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தேர்தலுக்கு பின்பு சேரத்தான் போகிறார்கள் என்றால் இவர்களது சந்தர்ப்பவாதம் அம்மாவை விஞ்சுகிறதே?


இவ்வளவும் எதற்காக? எல்லாம் இரண்டு சீட்டுக்களுக்காக என்றால் அதை அப்படி ஒத்துக் கொண்டு போகவேண்டியதுதானே? அதை விடுத்து அதற்கு கொள்கை முலாம் பூசவேண்டிய அவசியமென்ன? நாடாளுமன்ற சகதியில் புரண்டு கொண்டே அதை சந்தனமென்று சாதிப்பதற்கு என்னவெல்லாம் செய்கிறார்கள்? நேரடியாகச் சொல்வதென்றால் போலிகளின் காங்கிரசு எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு இரண்டுமே அப்பட்டமான பொய். ஒன்றை நேரடியாகவும், மற்றொன்றை மறைமுகமாகவும் ஆதரிக்கிறார்கள் என்பதைத்தான் அம்மாவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு போலிகள் உலகுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.


· இளநம்பி

No comments: