ஈழத்தமிழர்களும்,எதிர்காலமும்!
இன்றளவும் தமிழ்பேசும் மக்கள் இலங்கையில் ஏமாற்றப்படுகிறார்கள்.இவர்களின் வாழ்வாதாரங்களையும் ,உயிர் வாழ்வையும் ஈழதேசமென்ற கோசத்தின் வாயிலாகப் பறிக்கப்பட்ட
நமது சமுதாயமானது குறிப்பிட்டெழுதக்கூடியளவு முக்கியம் பெற்ற மக்கள் இனமாக வளர்வதாவில்லை.இந்த மக்களின் அறிவார்ந்த வலுவானது வெறும் "மனனம் பண்ணும்"கல்வி, அநுப வாழ்வாகவே இதுவரை முன்னெடுக்கப்படுகிறது.எமது இனத்துக்குள் விஞ்ஞானிகள்,நிபுணர்கள்,ஆய்வாளர்கள்,கண்டுபிடிப்பாளர்கள் எவருமில்லை.இருந்த சிறு கல்வியாளர்களையும் நாம் போட்டுத் தள்ளிவிட்டோம்.புதியவற்றைக் கண்டுபிடிப்பதற்கான அரசியல்,மற்றும் பொருளாதாரச் சுயாண்மை இலங்கைச் சமுதாயத்திடமில்லை.அது சிங்களவர்களாகவிருந்தாலென்ன அல்லது தமிழர்களாகவிருந்தாலென்ன, இந்த நாட்டின் சுயாதிபத்தியம் அந்நிய தேசங்களால் புதிய வடிவில் பறிக்கப்படுகிறது!எங்களிடம் சுய நம்பிக்கையும் அதை மையப்படுத்திய சுய பொருளாதார முன்nனுடுப்புகளும் கிடையாது.எங்கள் மனங்கள் 18ஆம் நூற்றாண்டு வாழ்நிலைகளோடு ஐக்கியமாகியதாகவே நகருகிறது.இந்த மனதானது நமது உயிராதாரமான இன அடையாள அரசியலை-சுய நிர்ணயத்தின் அவசியத்தை-எமது பொருளாதார வலயத்தை,கட்டியெழுப்புவதை மறுத்து அதற்குக் குறுக்கே நிற்கிறது.எமது வாழ்வாதாரங்களையே அடைவு வைத்துத் தத்தம் அரசியல் பிழைப்பைச் செய்வதற்கு ஒவ்வொரு தமிழ்,சிங்கள இயக்ங்;களையும்,அரசியல் கட்சிகளையும் உலக அரசியல் தூண்டி விடுகிறது.எங்கள் பிரச்சனைகளின்பால் நாமே தீர்மானகரமான முடிவுகள் எடுப்பதற்கு வக்கற்று அந்நிய நாடுகளும்,வெள்ளைக்காரர்களும்தாம் எம்மை வழிநடத்தும் எஜமானர்களாகப் பண்டுதொட்டு இருந்துவருகிறார்கள்.குரங்குகளாக நாம் அடிபட்டுக்கொண்டு வெள்ளையனிடம் மண்டியிடுகிறோம், எம்மைச் சமாதனஞ் செய்துவிடுவென!என்ன கொடுமையிது?எம்மைத் தூண்டிவிட்டு, எமது வலுவை,அறிவைச் சிதைப்பதற்காகவே நாம்,நமக்குள் அடிபடுவதைச் செய்தவனிடமே நாம் சமாதானஞ் செய்யக் கோருகிறோம்.நாம் இருபத்தியோராம் நூற்றாண்டிலா வாழ்கிறோம்?இங்கே எங்கள் அரசியல் வாழ்வானது வெறும் இனத்துவ அடையாளத்தின் எல்லையை விட்டகல முடியாது, அந்த எல்லைக்குள் முடங்கிக்கிடக்கிறது.
இதனால் எமது சமுதாயத்தின் வலுவானது அடையாள இழப்பைச் செய்த படி வெறும் இனவாதத் தளத்தில் மக்கள் விரோதக் கருத்தியலை உருவாக்கிறது.இதை உலக அரசியலின் உதவியோடே நமது இயக்கங்கள்,அரசியல்; கட்சிகள் செய்து முடிக்கின்றன.இதனால் நாம் தேசிய இனமாக உருவாக முடியாது வெறும் இனக் குழுவாகவே உலக அரங்கில் பார்க்கப்படுகிறோம்.அதுதாம் உண்மையுங்கூட.இங்கே தமிழர் தேசியம்,சுயநிர்ணயம்,தனித் தமிழீழம் பற்றிய கருத்தாக்கங்களின் நியாயத்தன்மைகளைப் பார்ப்பதும்,கூடவே நமது வாழ்வின் அதீத அழிவுக்கு எவர்கள் காரணமாகின்றார்களென்பதையும் நாம் இனங்காணவேண்டும்.இத்தகைய இனம்காணுதலின்றி எமது சிதைந்த வாழ்வு மேம்படமுடியாது.தொடர்கின்ற உயிரிழப்புகள் பாலியல் துன்புறத்தல்கள் எந்த நிலையிலும் இனியும் தொடர முடியாது.இவற்றை நாம் தடுத்தாவேண்டும்.ஆனால் எப்படி?-இதுதாம் கேள்வி!
பிற்போக்கு அரசியலும்,அறிவு நிலையும்:
தமிழ் மக்களின் கடந்த கால அரசியலானது "வர்க்க அரசியலில்"படுபிற்போக்குவாத நிலையெடுத்துத் தமிழர்களைக் காட்டிக்கொடுத்தது.தமிழினத்துக்கு விசுவாசமற்ற வெறும் ஜந்திரத்தனமான பிழைப்புவாதத் தமிழர் விடுதலைக்கூட்டணியானது தனது ஏகாதிபத்தியச் சேவக்கத்தால் நமது நாட்டில் இனவொடுக்குமுறை அரசியலில் முக்கியமான-தீர்மானகரமானவொரு பாத்திரத்தை அமெரிக்க-ஐரோப்பியக் கூட்டணிக்கு வழங்கியுள்ளது.இந்தச் சதிக்குடைந்தையான தமிழ்த்தலைமைகள் பலவர்ண முத்திரைகளோடு நமது மனங்களில் சஞ்சரிப்பவர்கள்.தந்தையென்றும்,அடாங்காத் தமிழன்,மாபெரும் சட்டமேதை பொன்னம்பலம் என்ற பொற்காலக் கனவுகளாக நமது மனங்களில் தரித்திருப்பவர்கள் செய்த தமிழின விரோத அரசியலானது, இன்று வெறும் ஆயுதக் காட்டாட்சிக் காலமாகவும்,சர்வதிகாரத்தை நிலைப்படுத்தும் காலமாகவும் விரிந்துகிடக்கிறது.இத்தகைய அதிகாரத்துவ அரசியலைப் பங்கிட்டுக்கொள்வதற்காகக் கூச்சல் போடும் குறுங் குழுக்களும் தம்மை மாற்றுக் கருத்தாளர்களாகவும்,ஜனநாயகப் போராட்டச் சக்திகளுமாகக் காட்டிவரும் பாசாங்கு அரசியல் நம் மக்களையின்னும் அடிமைகொள்ள முனைவது கண்கூடானது.
எம்மிடமுள்ள அறிவு நெருக்கடியைப் பயன்படுத்தி நமது மனங்களை அடிமைகொள்ள வைத்த அரசியலானது,வெறும் வோட்டு வங்கியைக் குறித்த அரசியலையே எமக்கு வீரவசனம் பேசி எமது விடிவுக்கானதெனப் பறைசாற்றிய அந்தக் காலத்தை மீளவும் தொடரும் அற்பத்தனமான அரசியலொன்று எம்முன்னே தொடரப் போகிறது.இந்த உளுத்துப்போன நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எப்படியெல்லாம் உலகம் மக்களை ஏமாற்றிவிடுகிறது.ஆளும் வர்க்கங்கள் இன்றும் உழைப்பவர்களை ஏமாற்றி வருவதற்கு இந்த இன,மொழி,மத அடையாளங்கள் நன்றாகவே பயன்படுகின்றன!இத்தகைய நரகல்களைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கான மனிதவுயிர்களோடு விளையாடிவரும் தமிழ்-சிங்கள அரசியலானது இந்த நூற்றாண்டிலும் மக்களின் துயரத்தோடுதாம் தனது குவிப்புறுதி இலக்கைக் கொண்டியங்குகிறது.
ஈழப் போராட்ட யுத்தத் திணிப்பானது தமிழ்மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையுமற்ற இரண்டுங்கெட்டான் வாழ்வு நிலையே மீதமாக்கி வருகிறது.இது சமூக எண்ணவோட்டமாகி மக்களை வாழ்வின்மீதே அவநம்பிக்கைகொள்ள வைத்துவிட்டது.இந்த எண்ணவோட்டத்தைச் செம்மையாகப் பயன்படுத்த முனையும் தமிழ்ப் "பொறுக்கி" அரசியல்-பெருச்சாளிகள் தம்மை யுத்தத்திற்கு எதிரானவர்களாகவும்,சமாதன விரும்பிகளாகவும்,ஜனநாயகக் காவலர்களாகவும் காட்டும் அதே நேரம்,தம்மால் மக்களின் விடிவுக்கான அரசியலை முன்னெடுக்க முடியுமென அரசில் பரப்புரை செய்கிறார்கள். இவர்கள் யார்?அதே ஆயுதக் கலாச்சாரத்தின் பிதாமக்கள்தாம்-அன்று உட்கட்சிப் போராட்டத்துக்குள் சிக்கிய தலைமைகள்,தளபதிகள் அப்பாவிப் போராளிகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த இயக்கங்களின் அதே கொலைக் கரங்கள், இன்று ஜனநாயகக் கீதம் இசைக்கின்றார்கள்.இவர்கள் புலிகளை அம்பலப்படுத்துவதாகவும்,அவர்களின் அராஜகத்தை எதிர்த்துப் போராடுவதாகவும் ஒப்பாரி வைப்பதே தமது அதிகாரத்தைத் தக்கவைப்பதற்கும,; மக்களைத் தமது பங்குக்கு அடிமைகொள்ளும் தந்திரத்தோடு காரிய மாற்றுவதற்கும்தாம்!இதுதாம் உண்மையான எதிர்பார்ப்பு.இலண்டன் ரீ.பீ.சீ.வானொலிக்கும் அதில் வேஷம் போடும் அரசியல் பிழைப்புவாதக் கூட்டத்துக்கும் என்ன அருகதையுண்டு தமிழ் பேசும் மக்களின் உரிமைகள்பற்றிக் கருத்தாட?அன்றும்,இன்றும் புலிகளைப்போலவே(புலிகள் அமெரிக்க-ஐரோப்பியக் கூலிகள் இன்று.)இந்தியாவினதும்- சிங்கள அரசினதும் கைக்கூலிகளாக இருப்பவர்கள், எடுத்து வைப்பதோ "நாம் மக்களின் நலத்தைக் குறித்துப் போராடுகிறோம்" என்பதே!நல்ல வேடிக்கைதாம் இது.-இது குறித்துப் பிறகு பார்ப்போம்.
தமிழ்பேசும் மக்களின் சமூக அறிவுத் தளமானது மிகவும் பின் தங்கியது.இந்த அறிவு நெருக்கடியானது அந்தச் சமுதாயத்தின் எதிர்கால அரசியல்,சமூக வாழ்வைப் பெரிதும் பாதிக்கப் போகின்றது.வெறும் தமிழ்க் கோசக் காட்டுக்கூச்சலால்,ஜனநாயகத்துக்கான மற்றும் அராஜகத்துக்கெதிரானது எனும் கோசங்களால் நாம் பிழைத்துக் கொள்ளமுடியாது.நமது சமுதாயத்தின் அரசியல்,வாழ்வாதார மற்றும் பொருள் உற்பத்தி நெருக்கடிகள் வெறுமனவே வெற்றுச் சவடால் மொழிவுகளால் தீர்க்கப்படமுடியாதவை!இவற்றைக் கருத்திலெடுக்காத அரசியலானது இயக்க,தரகு மூலதனத்தின் நலனை மையப்படுத்திய அரசியலாக நம்முன் விரிந்து கிடக்கிறது.இலங்கையின் சரித்திரத்தில் முன்னெப்போதையும்விட இனிவரும் காலங்களே அகோரமான அரசியல் குழிபறிப்புக்களை நமது இனத்துக்கு வழங்கும்.அதைக் காரிய வாதத் தலைமைகளின் இயக்க,பதவி வெறி மிகவும் தந்திரமாகச் செய்வதில் எவருடனும் கூட்டுச் சேருகிறது.இந்தச் சேர்க்கையானது இலங்கைமீது கடந்த காலங்களின் காத்திரமான தாக்கத்தைப் பொருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும்,அபிவிருத்தியிலும் செலுத்திய அந்நியச் சக்திகளாலேயே உருவாக்கப்பட்டு- வலுவாகப் பின்பற்றப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது.இதற்கேற்றவாறு அரசியல் முன்னெடுக்கப்படும் ஒரு இலங்கையைத் தயார்ப்படுத்தும் விய+கம் கடந்த சில வருடங்களாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.இதன் பின்னணியில் அமெரிக்க-இந்தியக் கூட்டணியின் அரசியல் ஆர்வங்கள் இறுக நிலைகொள்கின்றன.இங்கே மக்களின் ஆர்வங்கள்,அபிலாசைகள்,நம்பிக்கைகள்,இனங்களுக்கிடையிலான பரஸ்ப்பர உறவுகள் செல்லாக் காசாக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி குன்றிய குறைவிருத்தியுடைய இலங்கைபோன்ற நாட்டில்,மக்களின் அறிவு வளர்ச்சி மந்தமுடையது.அது அரபு நாடுகளிலுள்ள பின்தங்கிய மக்களினங்கள் போலவேதாம் சமூக வளர்வுமின்றி,அக வளர்ச்சியுமின்றி உலகத்தில் வெறும் நுகர்வடிமைக்கூட்டமாகத் தன்னை வெளிப்படுத்துகிறது.இந்த மக்களின் அகமானது இன்னும் வளர்ச்சியடைந்த பண்பாட்டுக்குச் சொந்தக் காரர்களாக இவர்களை வெளிப்படுத்தவில்லை.இங்கே பாட்டாளிய வர்க்கப் பண்பாட்டின் அவசியமான மனிதப் பண்புகளின் அவசியமானது எமது மக்கள் சமூகத்துத் தேவையாக இருக்கிறது.இத்தகையவொரு பண்பாட்டை நோக்கிய சமூக-அரசியல் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அமைப்பு வலு எவரிடமுமில்லை.இஃதே இன்றைய வெற்று நிலைகளுக்கெல்லாம் காரணமாகிறது.இத்தகைய வெற்று நிலையைச் செய்தவர்களே இந்தப் புலிகள்தாம்.அதுவே மக்களின் அழிவுக்கும்,அவலத்துக்கும் காரணமாகி,மக்களின் அறிவை முடக்கி-ஆயுதத்துக்கு முன் மண்டியிட வைத்துள்ளது.
இலங்கையில் ஏகாதிபத்திய-இந்திய நலன்:
அமெரிக்காவின் இலங்கைமீதான "நீண்டகால அரசியல் நோக்கு" நிலையானது தற்காலிக விட்டுக்கொடுப்புகளைத் தனக்குள் செய்வதற்கு உத்தேசிக்கிறது.இது பாரிய கொடுக்கல் வாங்கலை நிதிய+டாகக் காய் நகர்த்தும்போது, அங்கே புலிகளின் கரங்கள் வலுவடைகிறது.அமெரிக்காவின் ஆர்வங்கள் இலங்கையில் சமாதானமானவொரு அரசியல் சூழலும்,ஜனநாயக முன்னெடுப்புமிக்க கொந்தளிப்பற்ற சமூக உருவாக்கத்துக்கும் எதிரானது.இலங்கையும் மற்றைய மூன்றாமுலக நாடுகளைப்போன்று அரை நிலப்பிரபுத்துவ அரை இராணுவத்;தன்மை மிக்க நாடாகவே இருத்திவைக்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்காவின் பாரிய ஆர்வமே காரணமானது.இங்கு கவனிக்கத் தக்கது என்னவென்றால் "அமெரிக்க ஆர்வமென்பது"சர்வ உலகுக்கும் பொதுவான அரசியல் குழிபறிப்புகளை சி.ஐ.ஏ.மூலம் செயற்படுத்துவது.இந்த ஆர்வமானது இலங்கையின் தேசிய முதலாளியத்தின் அரசியல் தலைவரான பண்டாரநாயக்காவைக் கொன்றது.இந்தியக் கலப்புப் பொருளாதார(இது பம்மாத்துத் தேசியம் பேசியது); கொள்கையைப் பின்பற்றிய ஜ.நேருவைக்கூடச் சகிக்க முடியாமால் "போட்டுத் தள்ளும்" பட்டியலில் சி.ஐ.ஏ. சேர்த்து வைத்திருந்தது.இந்தப் பட்டியலில் பல மூன்றாமுலக மற்றும் ஐரோப்பியத் தலைவர்களும் அடங்கியிருக்கிறார்கள்.அதிலொருவர் முன்னாள் ஜேர்மனியச் சன்ஸ்லர் ஆடானாவ் என்பதுகூட ஆச்சரியமானது! இந்த ஏகாதிபத்திய நாடானது இன்று நோர்வேய+டாக நமது மக்களின் முகங்களில் கரிப+சும் வேலையைச் செய்கிறது.
தமிழ் மக்களின் பாரம்பரிய நிலப்பரப்புகளை (வடக்குக் கிழக்கு)இணைந்த மாநிலமாகக்கூட உருவாகுவதற்கு அமெரிக்கா தடையானது.அதன் நோக்கானது இலங்கையின் இனப்பிரச்சனையானது நீறுப+த்த நெருப்பாக இருக்கவேண்டுமென்பதே.இதன் வாயிலாக இந்த நாடு சுயாண்மையை இழந்து ஆசியாவின் கூட்டுருவாகத்துக்கு முரண்நிறைந்த பகைப்புலத்தைக் கொண்டிருக்கும்.அங்ஙனம் கொந்தளிப்புடைய சுமுதாயத்தின் மத்தியில் பாரிய விவேகமுடைய பொருளாதாரக் கனவுகள் நிசமடையமுடியாது.இது அமெரிக்காவினது நீண்டகாலக் கனவின் முன் நிபந்தனையொன்றைச் சாத்தியமாக்கி இலங்கைக்குள் அமெரிக்காவின் குரல் வானொலியாக வந்தது.இப்போது நிரந்தரமானவொரு இராணுவத் தளமொன்றை நிறுவுவதற்கான சூழல் அமெரிக்காவுக்குச் சாதகமாக இருக்கிறது.அதற்கு இது அவசியமானது.சீனாவின் அகோரமான வளர்ச்சியும்,பொருளாதார ஆர்வமும் அமெரிக்காவை மட்டுமல்ல ஐரோப்பாவையே கதிகலங்க வைக்கின்ற இன்றைய நிலையில்,ஆசியாவின் கைகள் மேலோங்குவதைத் தடுப்பதற்கானவொரு கடற்பிரயாணத் தடங்கல்கள்,மிரட்டல்கள்,குறுக்கீடுகளின்றி ஆசிய- சீனப் பொருட்கள் ஐரோப்பாவுக்குள் உள் நுழைவது உலகு தளுவிய பல்தேசியக் கம்பனிகளையே கலங்க வைக்கிறது.(இதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்வேன்:கடந்த வருடம் 2005 இல் சீனாவின் 3 மில்லியன்கள் உடுபிடவைகள் சுங்கத் தடை மூலம் நாட்கடத்தி உள் நுழைய விடப்பட்டது.அதன் அண்ணளவான பெறுமதி 400 மில்லியன்கள் டொலர்கள் ஆகும்.இதனால் ஆனதென்ன? குறித்த நேரத்தில் பல் தேசியக் கம்பனிகளின் உற்பத்தி நுகர்வுச் சந்தைக்கு வந்து உற்பத்திச் செலவையும்,உபரியையும் ஒருங்கே சுருட்ட முடிந்தது.)எனவே பழைய விய+கங்களின் கனவுகள் மாற்றமுற்றுப் புதுத் தேவைகள் உட்புகுகின்றன.இது இலங்கையின் ப+கோள மதிப்பீடுகளையெல்லாம் மாற்றித் திருத்தியெழுதும் நிலையில் அமெரிக்க நலனும், ஐரோப்பிய நலனும் புலிகளைத் தமது விசுவாசிகளாக்க முனைதலும் அதைக் கச்சிதமாக நோர்வே செய்து முடிப்பதற்கு உதவுவதும் வெறும் சமாதானத் தூதல்ல.இத்தகைய நிலையைத் தமிழர்களின் வெற்றியென்று எவராவது கொண்டாடினால் அது புலிகளைத் தவிர வேறு யாராகவுமிருக்கமுடியாது.எண்ணை வளமுடைய அண்மைக் கிழக்கு அரபு நாடுகளுக்குள் அமெரிக்காவால் தூவப்பட்ட விசச்செடி இஸ்ரேலென்றால் இங்கே தென்கிழக்காசியாவில் புலிகளாகவே இருக்கும்.
மறுபுறமோ இந்தியப் ப+கோள,கேந்திர அரசியல் ஆர்வமானது இலங்கையை ஏலவே இந்தியச் செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியமாக்கியது.அந்தச் செயலூக்கமுடைய அரசியல் அதிகாரமானது கடந்த கால மேற்குலக- இந்தியப் பொருளாதார உறவில் சில தர்க்கரீதியான முகாந்திரங்களை இந்த உரிமைக்குள் இழுத்துவந்தது.அதன்வாயிலான அரசியல் விட்டுக்கொடுப்புகள் இந்தியாவை வெறும் "சோத்தி" நாடாகத் தமிழரிடம் காட்ட முனைந்த புலிகளுக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.எனினும் இந்தியாவின் இலக்கு வேறுவடிவாக இருந்ததென்பதை அதன் இன்றைய விய+கமான அரசியல் நகர்வில் நாம் நன்றாக உணரமுடியும்.இந்தியாவானது எந்தச் சூழலிலும் இலங்கையை யாருக்கும்,யாரது அதிகாரத்துக்கும் இழக்காது,இழக்கவும் முடியாது.இலங்கையானது இந்திய எடுபிடியாக இருக்காது போனால் அகண்ட பாரதமானது அறுபது துண்டங்களாகப் பிரிவதை எந்த வலுவான இராணுவத்தாலும் தடுக்க முடியாது.இதுதாம் ப+கோள அரசியலின்விதி.இந்தக் காரணத்தின் அதீத முன்னெடுப்பானது இந்தியாவை பற்பலக் கூட்டுக்குள் இணைத்துள்ளது.
ஒருபுறம் ஏகாதிபத்தியத் தரகு முதலாளியத்தோடு சமரசம் செய்யும் இந்தியா மறுபுறும் ஆசியக்கூட்டு,சுயயாண்மைப் பொருளாதார முன்னெடுப்பைக் கனவு காண்கிறது.இந்திய ஆளும் வர்க்கம் இரண்டு தளங்களாகப் பிளவுண்டு கிடக்கிறது.ஒரு பிரிவானது(இது தரகு முதலாளியம்) பல்தேசிய கம்பனிகளின் கூட்டோடு இந்திய மூலவளங்களைப் பங்கிட்டு, இந்தியத் துணைக்கண்ட மக்களை வேட்டையாட முனைகிறது.மற்றைய பிரிவோ தேசியப் பொருளாதாரத்தையும்,நடுதர உற்பத்தியையும் ஆசியக் கூட்டோடு முன்னெடுக்க முனைகிறது.இந்த இரு பிரிவும் தங்கி நிற்கும் சந்தையானது சந்தைப் பொருளாதாரப் பண்பையிழந்து பெரும் பகாசூரக் கம்பனிகளின் காட்டுமிராண்டிச் சுரண்டல் சந்தையாகச் சுருங்கியுள்ளது.இதன் இறுகிய பொருளாதார நலனானது இந்திய அரசியல் விய+கத்தை உடைப்பதற்கானவொரு சூழலை இந்தியாவுக்குள் வற்புறத்தி வெற்றி கொள்கிறது.இந்த வெற்றியானது ஆளும் கட்சி களாகவுள்ள மத்திய,மாநில அரசுகளாலும்,எதிர்க்கட்சிகளாலுமே சாத்தியமாகியது.இந்தியத் தேசிய முதலாளியக் கூறுகள் வலுவான கட்சித் தலைமைத்துவமின்றித் தடுமாறிக் கிடக்கிறது மறுபுறம்.இந்தியாவுக்கள்-தமிழகத்துக்குள் கண்களை மேயவிட்டால் நமக்கு இந்தச் சதி புரிந்துவிடும்.மாநிலத்தில் திடீரென இந்தி மொழிமீது ஏற்பட்ட கரிசனை,அந்த மொழி கற்காததன்விளைவாக வேலைவாய்ப்பு இழக்கும் நிலையென ஜெயலலிதாவின் டி.வியும்,அவர்களது பிரச்சாரமும்,அதை எதிர்க்கும் திடீர்த் தலைமைகளும் ஏகாதிபத்தியத்தின் கண்டுபிடிப்புகள்.இத்தகைய போராட்டச் சச்சரவுகள், வரப்போகும் தேசியப் பொருளாதார,தேசிய அலகுகள் பாதுகாப்புப் போராட்டங்களை முளையில் கிள்ளியெறியும் சூழ்ச்சிகளாக விரிவதுதாம் உண்மை.
பெரும் பணத்தைச் சுருட்டி வைத்திருக்கும்ஜெயலலிதா,கருணாநிதிபோன்ற அதிகாரத் தலைமைகள் தாமே பெரும் முதலீட்டாளர்களாக மாறியதன் பின்பு இங்கே ஏகாதிபத்தியங்களுக்குச் சேவை செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டியாகி விடுகிறது.இதுதாம் புலிகளுக்கும் பிரச்சனை.அவர்களும் இத்தகைய முதலீட்டாளர்களாக மாறியபின் தமிழீழக்கோசமும்,போராட்டமும் அவர்களது மூலதனத்துக்கு எதிரானதாகவும் பார்க்கப்பட்டு;,ஏகாதிபத்தியச் சேவை மூலம் தமது அடியாட் படைகளுக்குத் தினிபோட்டுத் தமது கைகளில் உள்ளவற்றை முதலீடாக்குவதில் கவனமாக அரசியல் நடக்கிறது.
இதை நாம் விளங்கிக் கொள்வதற்குத் தமிழ் நாட்டை உதாரணமாகப் பார்க்கலாம்.இலங்கை அரசின் இன்றைய ஆசியப் பொருளாதார,மற்றும் சுய பொருளாதார முன்னெடுப்புகளைச் சாரும் மகிந்தாவின் வரைவுகள் மற்றும் அரசியல் நகர்வுகள் தமிழக ஏகாதிபத்தியச் சேவகர்களுக்கு விருப்புடையதாக இல்லை.ஏகாதிபத்திய கைக்கூலிகளான ஜெயலலிதா,கருணாநிதி குடும்பங்களுக்கும,; அவர்களது நிறுவனங்களுக்கும் ஏகாதிபத்தியத்தால் வழங்கப்பட்ட கட்டளைகள் இலங்கை அரசியல் பற்றிய தமிழகத்துத் தலைவர்களின் அதிருப்தியாக விரிகிறது.இவர்கள் உதிர்க்கும் இலங்கை பற்றிய எதிர்ப்பைத் தமிழகத்தின் "ஈழப்போராட்டத்துக்கான" ஒத்துழைப்பாகவும் புலிகள் பிரச்சாரமிடுவதைக் கண்கொண்டு பார்க்க முடியாது.ஜெயலலிதாவும் கருணாநிதியும் மட்டுமில்லை ராமதாசு,கோபால்சாமிகள்கூட ஏகாதிபத்தியத்தின் குறிப்பாக சி.ஐ.ஏ.முகவர்கள்தாம்.இவர்கள் நம்ம ஆண்டன் பாலசிங்கத்துக்கு முன்னமே சி.ஐ.ஏ. பட்டியலில் போய் சேர்ந்தவர்கள்-நிதியமைச்சர் ப.சிதம்பரத்தைப் போல!
இந்தியாவும்,தமிழ் குறுங் குழுக்களும்:
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டமானது,தமிழ்த் தரகு முதலாளிய அரசியல்-பொருளியல் வாழ்வு நெருக்கடியால் எழுந்ததாகும்.பேரினவாதச் சிங்களத் தரகு முதலாளிய மேலாதிக்கமானது தமிழ் தரகு முதலாளியத்தோடு முரண்பட்டபோது- அது இனவொடுக்குமுறைகளைத் தமிழ் தரகு முதலாளியத்துக்கு எதிராக வற்புறுத்தியபோது சிங்கள அரசே தலைமை வகித்துத் தமிழர்களைக் கொன்றுபோட்டது.இத்தகைய கையறு நிலையில் தமிழ்த் தரகு முதலாளியமானது தனக்கான ஆயுதமாக எடுத்தாண்ட விய+கமே தமிழீழக் கோசமானது.ஆனால் தமிழ்பேசும் மக்களின் நலன் முற்றுமுழுதாக வேறாகவிருந்தது.அவர்களின் அரசியல் வாழ்வைச் சீரழித்துத் தமது இருப்பை நிலைநாட்ட முனைந்த தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கமானது சரணடைந்த நாடானது முதலில் இந்தியாவே.அனைத்து இயக்கங்களின்(புலிகள் உட்பட) தோற்றங்களும் இந்திய ஆசியோடும,; பொருளாதார ஒத்துழைப்போடும் மற்றும் அரசியல் ஆலோசனையோடுமே சாத்தியமானது.
இலங்கையில் தமிழ்பேசும் மக்களின் தேசிய இன அடையாளமானது பொருளாதாரத்தின் சுயசார்பால்,வரலாற்று ரீதியாக வாழ்ந்த பகுதிகளின் பொருளாதார வலுவால் அது சார்ந்த பண்பாட்டு மதிப்பீடுகளால் தோன்றியது கிடையாது.தமிழகத்தின் இறக்குமதி மதிப்பீட்டுகளாலும்,பண்டுதொட்டுப் பேசிய மொழியாலும் ஒரு தேசிய இன அடையாளம் நிலவமுடியாது.தமிழர்களின் சமூகவாழ்வானது சிங்கள அரசின் தயவில் காலத்தையோட்டியதும்.சிங்களவர்களுக்குள் சந்தைகளைக் கண்டடைந்த தமிழ் முதலாளிகளின் சிங்களப் பகுதிகளின் வாசங்களும், தமிழர்களின் பாரிம்பரிய நிலத்தின் பொருளாதார வலுவைச் சார்ந்திருப்பதைக் காட்டவில்லை.இத்தகையவொரு சூழலில் இலங்கைத் தமிழர்களின் தேசிய வாதமானது வெறும் குறுந்தேசிய நரகலாகும்.இதை மிகத் தெளிவாக விளங்கிய நாடு அமெரிக்காவாகும்.அந்த நாடு ஒருபோதும் இந்தியாவை எதிர்க்க விரும்பாதபோதும் இலங்கையின் அரசியலில் மறைமுகமான பாரிய தாக்குதலைச் செய்தே வந்தது.அதை மேலே பார்த்தோம்.
இன்றோ இந்தியாவானது மிகக் காத்திரமானவொரு பாத்திரத்தைத் தென்கிழக்காசியாவில் வகிக்கிறதென்பதை நாம் மறுக்க முடியாது.இந்தியாவென்பது பல் தேசிய இனங்கிளின் ஒடுக்குமுறைக் கூடாரம்,அது ஒரே தேசமில்லை,பல தேசங்களின் கொடியகூட்டு வடிவம்!;அது தனது தொங்குசதை நாடுகளில் பண்பாட்டு ஒடுக்குமுறையிலிருந்து சமூக ஏகாதிபத்தியமாக உருவாகிவருகிறது.இந்தியாவுக்கென்றொரு பிரத்தியேக அரசியல் அலகுகளுண்டு.அதை எந்த மேற்குல விய+கங்களோடும் நாம் ஒப்பீடு செய்யமுடியாதது.அது சாணாக்கியனின் தொட்டில்லவா!அங்கே நடக்கும் அரசியலானது மேற்குலகுக்கே தப்படி போடுவதற்கானது.ஆனால் அதன் தலைமையானது தரகு முதலாளியத்தின் நலனை முதன்படுத்தவேண்டிய நிலையில் சொந்த நோக்குக்கே குறுக்க நிற்கும் இன்றைய நிலைமை தற்காலிகமானது.இதை விளங்க இந்தியாவின் உற்பத்தி வளர்ச்சி,நகர்வு,ஆசியச் சந்தை,மற்றும் இந்தியாவின் பண்பாட்டு ஏற்றுமதியை உள்வாங்கும் அரபு நாடுகளின் "இந்திக் கலை" அநுபவிப்பு அதை மேல் நிலைக்கு உயர்த்தும்.இதை ஐரோப்பிய ஜந்திரத்தனமான பண்பாட்டால் வெற்றி கொள்ள முடியாது.
இத்தகைய இந்தியாவின் காலடியில் ஒரு சிறு பருக்கையாகக் கிடக்கும் இலங்கையின் அரசியல், அதைமீறிப் போவதற்கு அது என்ன கேணைத் தனமான நாடா?இந்தியா பிராந்திய வல்லரசு.அது அகண்ட பாரதக்கனவுடைய அதிகார வர்க்கத்தினது கனவுகளுக்குட்பட்ட அரசைக் கொண்ட நாடு.அந்த நாட்டின் அரசியலானது மிகவும் விருப்புடையதன்று.இந் நாட்டை தென்கிழக்காசியாவின் ஒடுக்குமுறையாளானகப் பிரகடனப்படுத்தாத எந்தச் சக்தியாலும் அதை வெற்றி கொள்ள முடியாது.இலங்கை அரசியலை மட்டுமல்ல அதன் பொருளாதார-சமூக வளர்ச்சியில்கூட இந்தியா ஆதிக்கஞ் செய்கிறது.இலங்கை ஒருவகையில் இந்தியாவின் மறைமுகமான மாநிலமே.இதை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் அரசியல் அறிவைப் பொருத்தது.
இன்றைய நமது அரசியல்,சமூக நெருக்கடிகள் எம் மக்களின் வெகுஜன எழிச்சியைக் கோரி நிற்பவை.இது விசும்பு நிலையில் இருந்து இப்போது மேலும் படர்வதற்கானவொரு சூழலில் புலிகளாலோ அல்லது இந்தியக் கனவினாலோ தாக்குப் பிடிக்க முடியாது.எனவே அவசியமானவொரு தீர்வு வற்புறத்தப்படுவது நிசமாகும்.மக்களின் வெகுஜனவெழிச்சியைப் புலிகளோ அல்லது இந்திய மேலாதிக்கமோ விரும்பவில்லை.இங்கே இந்தியாவினது நிலை புலிகளைப் பலவீனர்களாக்குவதே.அவர்களைப் பலவீனர்களாக்குவது ஆயுதத்தைக் களைந்தல்ல.மாறாக அவர்களது நிர்வாக அலகை வன்னிக்குள் முடக்குவதே.யாழ்பாணத்தையும்,கிழக்கையும் நிரந்தரமானவொரு பகைப் புலமாக்கி அங்கே புலிகளின் மேலாதிகத்துக்குச் சமாதி கட்டுவதே இந்தியாவின் முதல் வேலையாக இருக்கிறது.இதை இந்தியாவும் செய்து முடிக்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கிப் பலகாலமாச்சு.இங்கேதாம் கருணா பிளவு இந்தியாவின் இருப்பின் வலுவைப் பறைசாற்றுவது.இதன் பின்பு பறிபோன கிழக்குப் பிரதேசம் புலிகளை அப்பிரதேசத்திலிருந்து மெல்ல அப்புறப்படுத்தும் மெல்லிய தாழ்நிலை யுத்தத்தையும், கருத்தியல் போரையும் வலுவாகவும்,விவேகமாகவும் முன்னெடுத்து வருகிறது.அதைப்போலவே யாழ்மாவட்டத்தின் நிலையும்,பல்லாயிரம் இலங்கை இராணுவத்தால் நிறைக்கப்பட்ட யாழ்பாணத்தில் தடுக்கி விழுந்தாலும் ஒரு இராணுவத்தான்மேல்த்தாம் விழவேண்டும்.இங்கேதாம் நம்ம மாற்றுக்குழுக்களெனும் நொண்டிக் குதிரைகள் ரீ.பீ.சீ,இதயவீணையென நம்மக்கள் அரங்குக்கு வருகின்றன.இவையின் வருகையும்,வந்தவாக்கில் அவர்களிடும் ஓலமும்"வெள்ளாடு நனைய வேங்கைப் புலி அழுதுவடியும்"கதைதாம்
இந்தியாவானது மக்களைச் சாராத இயக்கங்களாகவே ஈழப்போராட்ட இயக்கங்களை வளர்த்தெடுத்தது.மக்களின் அடிப்படையுரிமைகளை ஆயுதத்தின்மூலம் பறித்தெடுத்து மக்களைப் பார்வையாளர்களாக்கி,வெறும் அச்சமூட்டும் படையாகவே இவ்வியக்கங்களை வளரவிட்டது.புலிகள் இவ்வளவு வளர்ந்த இயக்கமாகவிருந்தும் மக்களைச் சாராத மக்கள் விரோதிகளாகமாறியது தற்செயல் நிகழ்வல்ல.புலிகள் மக்களின் சுய எழிச்சிகளைக் கண்டே அச்சப்படுபவர்கள்.தமது இருப்பை அசைக்கக் கூடியவர்கள் மக்களென்பது புலிகளுக்குத் தெரிவதுபோலவே இந்தியாவும் மக்களைக் கொண்டே புலிகளுக்குச் சமாதிகட்டும் கருத்தியல் போருக்குத் தயாராகிவிட்டது.
உதிரி இயக்கங்களை,அதன் பழைய பெருச்சாளிகளை,கொலைக்காரர்களை,மற்றும் அரசியல் விபச்சாரன்கள் ஆனந்த சங்கரியை,டக்ளஸ் தேவாநந்தாவை,தமிழ் மக்களுக்குள்ளும்-ஜே.வி.பி.யை மற்றும் சிங்களப் பிக்குகளை,சிங்கள இனவாதக் குறுங் கட்சிகளை சிங்களச் சமுதாயத்துக்குள்ளும் கருத்தியல் போரை முன்னெடுக்கத் தூண்டுகிறது இந்தியா.இத்தகைய எதிர்ப்புகளைக் காரணமாகக் காட்டித் தமிழ் பேசுபவர்களின் சுயநிர்ணயப் போரைக் கிள்ளியெறிந்து, அற்ப சலுகைகளோடு மக்கள் உரிமைகளைக் குழிதோண்டிய அரசியலே தமிழ் மக்களுக்கு இனிமேல் கிடைக்கும்.இந்தச் சலுகைகளுக்காக நாவில் எச்சிலூறக் காய் நகர்த்தும் மாற்றுச் சக்திகளென வேடம் ப+ண்ட ரீ.பீ.சீ.வானொலிக் கூட்டமும் தம்மாலான கருத்தியல் போரைப் புலம் பெயர் மக்கள் மத்தியில் திட்டமிட்டுச் செய்கிறது.இதற்கு இந்தியாவின் மறைமுகமான நிதி,ஆலோசனையெல்லாம் உண்டு.இத்தகைய நிலையில்தாம் அந்த வானொலி இலங்கையின் இன்றைய அரசை எதிர்ப்பது போல் நடித்து,"பாசிச அரசு,முதலாளித்துவ அரசு" என்றெல்லாம் ப+ச்சாண்டி காட்டுகிறது.அது மட்டுமல்லாது தம்மை மக்கள் உதவியோடே வளர்ப்பதாக நடித்து, மக்களிடம் உதவி கோருவதாக நடிக்கும் இராமராஜன் மக்களை முட்டாள்களெனக் கருதுவதை என்ன சொல்ல?இந்தப் பருப்பு புலம் பெயர் மக்களிடம் எடுபாடா.ஆனால் புலிகளின்மீதான மக்களின் எதிர்ப்பானது இவர்களிடம் ஏமாறவதற்கானவொரு சூழலும் இல்லாமாலில்லை.இதைக் கண்ணுற்று, இந்த வானொலிகள் அந்த தார்மீக எதிர்ப்பைத் தமக்குச் சாதகமாக்கி இந்தியாவின் கனவை நிறைவேற்றித் தமது வரும்படியைத் தக்கவைக்கின்றார்கள்.
இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல்,அபிலாசைகள்,வாழ்வாதார அலகுகள்,சுயநிர்ணய அடையாளம் எல்லாம் இத்தகைய பாழும் அரசியலால் நிர்மூலமாக்கப்பட்ட பின்பு, எஞ்சுவது வெறும் அடிமைத் தனத்தின் அற்ப சொற்பச் சலுகைகளே.இதற்குத்தாம் ஒரு இலட்சம் மக்கள் செத்தார்கள்?
இந்தியாவின்,அமெரிக்காவின்-ஐரோப்பாவின் இலக்கை உடைப்பதற்கு நாம் என்ன செய்தாகவேண்டும்?:
1):தமிழ்ப்பிரதேசத்திலிருந்து இலங்கை இராணுவம் வெளியேறவேண்டும்.1975களின் நிலைக்குள்ளிருந்த முகாங்களுக்குள் இராணுவம் முடங்கவேண்டும்.இலங்கை அரசை மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்கும் நிலைக்கு மாறும்படி கோரிக்கைய+டாக வற்புறுத்தவேண்டும்.உடனடிப் பேச்சு வார்த்தைய+டாக முதலில் மக்களின் வாழ்வாதாரங்களைக்காக்கும் நல்லிணக்கத்துக்கு அரசைக் கைச்சாத்திடத் தூண்டவேண்டும்.அதனூடாக அனைத்து யுத்த முகாந்திரங்களும் அகல வேண்டும்.
2):புலிகள் பன்மைத்துவ அரசியலை ஏற்றுத் தமது வலுவைத் தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தின் பாலும் அவர்களின் நல் வாழ்வுக்குமான அரணாக்கவேண்டும்.மக்களின் வெகுஜனப் போராட்டத்தை எக்காரணமும் அடக்கியொடுக்காது அவர்களைச் சுயமாகச் செயற்படவிடவேண்டும்.அந்நிய சக்திகளிடம் செய்யும் அரசியல் பேரத்தை மக்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கவேண்டும்.
3):வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகக்கட்டமைப்பை "பன்மைத்துவ அரசியலால்" தமிழ் மக்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.அதற்கான அரசியல் பேச்சு வார்த்தைகளை இரண்டாங்கட்டமாகவே முன்னெடுக்கப்பட வேண்டும்.முதலில் செய்வது மக்களின் உயிராதாரப்பிரச்சனைக்கு இருதரப்பும் இணங்குவதே.அதைச்சாத்தியமாக்கும்போதே இந்த அரசால் மற்றப்படி நோக்கி நகர முடியும்.இதை அந்த அரசு உலகுக்கு செய்து காட்டியாகவேண்டும்.இல்லையேல் அதன்முகம் எதுவென்பது புரிய முடியும்.
4):மக்களின் குடியிருப்புகளை உடனடியாக மீளக் கையளித்து அவர்களுக்கு நஷ்டஈட்டை இலங்கையரசு உடனடியாக வழங்கி மீள்கட்டுமானத்தை உடனடியாக வற்புறத்துவது
5)தமிழ் மக்கள் சிங்கள முற்போக்குச் சக்திகளிடம் பகிரங்கமான வேண்டுகோளைச் செய்து, தமது வாழ்விடங்களை மீளப்பெறும் வெகுஜனப் போரைத் தொடக்குவது.
6):போரையும்,அது சார்ந்த அரசியலையும் மக்கள் வற்புறுத்தி நிராகரிக்கும் அரசியல் முன்னெடுப்புகளை செய்வதற்கு உடனடி மக்கள் மன்றங்களை, கிராமம்,நகரம் தோறும் அமைத்து அமைப்பாண்மை பெறுவது-யுத்த எதிர்ப்பை வெகுஜனப் போராட்டமாக்குவது.
7):தமிழ் மக்களின் உயிர்வாழ்வுக்கான அனைத்துப் பொருள் உற்பத்திக்குமான உற்பத்திமுறைமைகளை இலங்கைத் தேசிய உற்பத்தி வலுவுக்கேற்ற முறையில் சுய பொருளாதாரப் பொறிமுறைமைகளைத் தகவமைத்துக்கொள்ள வலியுறுத்தல்-காத்தல்.
8):மக்களின் இயல்பு வாழ்வைப் பாதிக்கும் அந்நிய ஆர்வங்களை இலங்கைத் தீவில் நிலைப்படுத்தும் இயக்கங்களை,அரசைத் தூக்கியெறியும் வலுவை மக்கள் போராட்டமாக வளர்த்தெடுக்க முற்போக்கு சக்திகள் தம்மை ஒரே குடைக்குள் இலங்கை-இந்தியாவுக்குள் திரட்டியாக வேண்டும்.அதன் துணையுடன் பல் தேசியக் கம்பனிகளுக்கெதிரான போராட்டங்களை முழு இலங்கை தழுவிய வெகுஜனப் போராட்டத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்கான போரோடு இணைத்தல்-தோழமை பெறுதல்.
9):புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை அரசையும்,புலிகளையும் அம்பலப்படுத்துவதும் கூடவே அவர்களது கள்ளக்கூட்டுக்களையும் உலக மக்களுக்குத் தெளிவுபடுத்தி "எம்மை வாழவிடுங்கள்!எங்கள் அகதி வாழ்வுக்கு முடிவுகட்டுங்கள்"எனும் கோசங்களை வெகுஜனப் போராக்கவேண்டும்.
இங்ஙனம் உடனடியாக தமிழ்பேசும் மக்கள் தமது நகர்வைச் செய்வார்களேயானால் இந்தியா மட்டுமல்ல உலக வல்லரசுகளும் அவைகளின் ஏவல் நாய்களான நமது எடுபிடிகளும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின்(எமது); நல் வாழ்வையும்(அது இருந்தால்தானே)இனியும் சிதைக்கமுடியாது.இதுகூடப் பகற்கனவுதானே தவிர நிசம் இல்லை.போங்க போய் வேலையளப் பாருங்க.
No comments:
Post a Comment