உன்னைக் கொல்வேன்
என் சோதரா,
மரணத்துள் நானும் நீயும் நீந்துகிறோம்
நிழல்கள் எம்மைத் துரத்துகின்றன
வேதனைக்காகவேனும்
அழும்படி கட்டளையிடும் அவை
வேளா வேளைக்கு
எச்சரிக்கை செய்ததாகவும் புலம்புகின்றன
காற்றின் உதைப்பில்
பட்டம்விட்டே பழகியவர்கள் நாம்
எந்தெந்தத் திசைகளில் என்ன காற்றென்பதை மறந்து
நீ விளையாட்டைத் துவக்கினாயோ
அன்றி நானோ கேள்விகள் தொலைந்த
நடுநிசிப் பொழுதொன்றில்
வேட்டைக்குப் புறப்பட்ட நாம்
முடித்துவைப்பதற்குள்
மிருகங்களிடம் சிக்குண்ட இந்தப் பொழுதை
நாளையவர்
எமது காலடியில் எதைத் தேடுவார்களோ
அதை
இரவோடிரவாக எழுதி வைப்போம்
எனது சோதரா,
எமக்கு
எப்போது ஆற்றைப்பற்றிய புரிதல் இருந்தது?
நாம் ஏற்றிய பொதிகளை இறக்குவதற்குள்
நடாற்றில் முழ்கும் படகை
நானோ
அன்றி உனது விருப்பமோ
தடுத்துக் கரைக்குக் கொணர்வதற்கில்லை
எமது விளையாட்டின் இறுதிக்கட்டம் இது
அன்புச் சோதரா,
அறிவாயா இன்னும்?
வெற்றுத்தாள்களில் நாடுகளை வரைவோம்
தேசம் எதுவெனத் தேடிய வரைவுகளில்
ஒன்றைத் தேர்ந்து
எமக்காகத் தண்டவாளங்களை
நட்டுப் பொதிகளை ஏற்றுவோம்
ஆற்றுப் படுகைகளை நம்பிய காலம்
தலைகளின் வீழ்ச்சியில் எல்லைகளற்ற தேசத்தை
எப்போதோ தொலைத்தாச்சு
இனியும்
கருமை பொதிந்த கோடுகளுக்குள்
அவை உருப்பெறுவதற்கில்லை
மரணக் காவியங்கள்
மலிந்த சவக் குழிகளுக்குள்
மங்காத கனவுகளோடு மல்லுக்கட்டும் பொழுதொன்று
மகா வம்சத்தின் தெருக்கோடியுள்
இனியும்
உனக்காகவோ அன்றி எனக்காகவோ
எவரும் தொடர்வதற்குள்
என் சோதரா,
பாலைவனத்தில் நாடோடிகளாகவும்
அலைகடலொன்றில் தத்தளிக்கும் கள்ளத் தோணி அகதியாகவும்
என்னையோ அன்றி உன்னையோ
ஏதோவொரு தேசத்துக் காவற்படை
கைதாக்கியதில் எமது உயிர் பிழைத்ததாகவும்
பின்னைய பொழுதொன்றில்
தூங்குவதற்கு முன்
மையைக் கக்கி ஓய்ந்த பேனாவொன்றில்
சுரக்கும்
எமது இருப்புக்காய்
நான் இப்போது தொடர்கிறேன்
உன்னைக் கொல்வதற்கு!
சிலந்தியின் வாய் பின்னிய வலையில்
வீழ்ந்து மீளும் கொசுக்களைக் கண்டாயா?
விட்டில்கள் விளக்கில் வீழ்ந்தபோது
அதுவே தமது
இறுதிக் கட்டமென அறிந்தவையா?
என் சோதரா,
நாம் தூக்கத்துக்குப் போகத்தான் வேண்டும்
ஆடிய விளையாட்டின்
முடிவு நெருங்கிவிட்டது!
நீ
வென்றாயா அன்றி
நான் தோற்றேனோ என்றதற்கப்பால்
எமது மரணத்துள்
உன்னைத் தோற்கடித்த பொழுதொன்றை எவருரைப்பார்?
No comments:
Post a Comment