அல்லலுறும் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள்
சென்னை, டிச.29: சரியான வழிகாட்டுதல் கிடைக்காததால் அரசு ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் அல்லலுறும் அவலம் உள்ளது.
அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் சென்னை அண்ணா நகரில் உள்ளது.
இந்தப் பயிற்சி மையம் தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு ஆயத்தமாகும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சியை அளித்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் இந்த மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைப்படக்கூடிய விஷயம்.
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாய் மாறிவிட்டது. தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றிபெறும் பெரும்பாலான மாணவர்களின் வெற்றியைத் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் இந்த அரசு பயிற்சி மையத்தில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைக்காததுதான்.
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமான கோணத்தில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதற்கேற்றாற்போல் மாணவர்களை இந்த நிறுவனத்தால் ஆயத்தப் படுத்த இயலவில்லை.
காரணம், கல்லூரியில் பணியாற்றும், பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களைக் கொண்டே இங்கு பாடம் நடத்தப்படுகிறது. இவ்வாறு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு இன்றைய தேர்வின் தன்மை குறித்து சரிவரத் தெரிவதில்லை. அவர்கள் கல்லூரிகளில் நடத்துவதைப்போல பாடம் நடத்துகின்றனர்.
இந்த அடிப்படையிலான கற்பித்தல் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான கற்பித்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதனால் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் கிடைப்பதென்பது கேள்விக்குறியாகிறது. இந்த ஆபத்தான போக்கை நிர்வாகம் தவிர்க்க வேண்டும். சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் போதிய அனுபவமிக்கவர்களைக் கொண்டு பாடம் எடுக்க வேண்டும்.
தவிர, இன்றைய காலக்கட்டத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வினாக்கள் எந்த வகையில் கேட்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்து அதற்கு தகுந்தாற்போல் மாணவர்களை தயார் செய்ய உயர் அதிகாரிகளும், கல்வி நிபுணர்களும் அடங்கிய குழு ஒன்றை கூட மாநில அரசு அமைக்கலாம். அவ்வாறு அமைத்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட மத்திய உயர் பதவிகளுக்கு தமிழகத்தில் இருந்து இன்னும் அதிகமான மாணவர்கள் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க இயலாது.
இந்த அரசு ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் மேம்படுத்தப்பட்ட நூலக வசதி இல்லை என்பது மாணவர்களின் ஆதங்கமாக உள்ளது.
""நூலகத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே புத்தகங்கள் உள்ளன. அவையும் பழைய புத்தகங்களாக உள்ளன. அவற்றில் எங்களுக்குத் தேவையான தகவல் கிடைக்காததால் நாங்கள் நகரில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கு புத்தகங்களைத் தேடி அலைய வேண்டியுள்ளது. இதனால் நேரம் விரயமாவதோடு, சக்தியும் வீணாகிறது'' என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சரியான உணவு, சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும் இந்த மையத்தில் பயிலும் மாணவர்கள் நீண்டகாலமாகவே புகார் எழுப்பி வருகின்றனர்.
""எங்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்று கேட்கவில்லை. நாங்கள் உட்கார்ந்து படிக்கும் அளவுக்குச் சக்தி கிடைக்கக்கூடிய வகையிலாவது உணவை வழங்க வேண்டும்'' என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐபிஎஸ் பணிகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பவை. அவற்றைப் பயிலும் மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் என்பது அவசியம். அப்போதுதான் அவர்களால் உரிய இலக்கை எட்டுவது சாத்தியமாகும். இல்லையேல் அவர்களது கனவு கடைசி வரை வெறும் கனவாகவே இருந்துவிடும். இனிமேலாவது இதை புரிந்து கொள்ளுமா பயிற்சி மைய நிர்வாகம்?
No comments:
Post a Comment