அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் திருத்தம் : பொடாவின் மற அவதாரம்!

கடந்த நவம்பரில் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை (UAPA ""ஊபா'') திருத்தி புதிய சட்டம் எனமிரு பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு

அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத போலீசு ராஜ்ஜியமாக காங்கிரசு கூட்டணி அரசு மாற்றியமைத்துள்ளது.


அணுவிசை பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, கொடிய பேரழிவுக்கான ஆயுதங்கள் தடுப்பு, நக்சல் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 8 வகை சட்டங்களால் தண்டிக்கப்படக் கூடிய பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அவற்றை இனி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். இந்த அமைப்பின் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை இரகசியமாக விசாரணையை நடத்தும். சி.பி.ஐ. போன்ற மையப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை வெறும் தகவல் தெரிவிக்கும் உறுப்புகளாக மாற்றிவிட்ட இச்சட்டம், மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைக் கூட முடக்கி, மைய அரசிடம் வரம்பற்ற அதிகாரத்தைக் குவிக்கிறது.


சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்தச் சட்டமானது, பயங்கரவாத ""பொடா'' சட்டத்தின் மறு அவதாரமாக புதிய கொடிய விதிகளுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. "பொடா'' சட்டத்தைப் போலவே, இச்சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்டவரை 180 நாட்களுக்குப் பிணை வழங்காமல் கொட்டடியில் அடைத்து வதைக்க முடியும்; பயங்கரவாத குற்றம் நடந்த இடத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகையோ, அல்லது வேறு ஏதாவது தடயமோ இருந்தால் நீதிமன்றம் அவரைக் குற்றவாளிதான் என்று கருதி இச்சட்டப்படி கைது செய்ய முடியும்; தான் நிரபராதி என்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். நாட்டின் ஐக்கியம் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாலோ, அல்லது அச்சுறுத்துவது போல "பாசாங்கு'' செய்தாலோ கூட இச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்ய முடியும். ஒரு புலனாய்வுக்குத் தொடர்புடையது என்று கருதி போலீசு விவரம் கேட்டால் எவரும் முழுமையான தகவல் தரவேண்டும்; இல்லையேல் இச்சட்டப்படி கைது செய்ய முடியும். பயங்கரவாதிகளுக்கு வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஆதரவு தருபவர்களுக்குக் கடும் தண்டனை, தகவல் தொடர்பை இடைமறித்துக் கேட்டு அதை ஆதாரமாகக் காட்டி ஒருவரைக் கைது செய்ய போலீசுக்கு அதிகாரம், குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்க கடும் விதிமுறைகள் என போலீசுநீதித்துறைக்கு எல்லையற்ற அதிகாரமளிக்கும் வகையில் இப்புதிய "பொடா'' சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினரா, இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான வரையறை இச்சட்டத்தில் தெளிவாக இல்லாததால், இவர் பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார் என்று குற்றம் சாட்டி, போலீசார் யாரையும் கைது செய்ய முடியும்.


ஏற்கெனவே "தடா'', "பொடா'' பயங்கரவாதச் சட்டங்கள் தலைவிரித்தாடியபோது, அப்பாவி முஸ்லிம்கள் தான் பெருமளவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டவர்களில் வெறும் 5 சதவீதத்தினர் மீதுதான் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. "பொடா'' சட்டத்தை உயிர்ப்பிக்க மாட்டோம் என்று வாக்களித்து ஆட்சிக்கு வந்த காங்கிரசு துரோகக் கூட்டணி அரசு, தீவிரவாத எதிர்ப்பில் கடுமையாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு, புதிய பெயரில் "பொடா'' சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் அரசு பயங்கரவாதத்தைச் சட்டபூர்வமாக்கி, நாட்டைத் திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியுள்ளது.


ஏற்கெனவே மகாராஷ்டிராவில் "பொடா'' சட்டத்துக்கு இணையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் உள்ளபோதுதான், தற்போதைய மும்பைத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், கடுமையான சட்டங்களால் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடித்து விட முடியாது. இத்தகைய பயங்கரவாதங்கள் குறிப்பிட்ட அரசியல் காரணங்களுடன் எழும் நிலையில், அவற்றுக்கு அரசியல் தீர்வு காண முயற்சிக்காமல், அடக்குமுறைச் சட்டங்களால் இவற்றை வீழ்த்திடவும் முடியாது. இத்தகைய அரசு பயங்கரவாத கருப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராடாமல், நாட்டு மக்களின் குடியுரிமை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் முடியாது.

No comments: