திருநெல்வேலிக்கே 'அல்வா'-700 பேருக்கு அபராதம்!
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 26, 2008, 11:46 [IST]
http://thatstamil.oneindia.in/news/2008/12/26/tn-700-traders-fined-for-selling-fake-halwa.html
நெல்லை: நெல்லை ரயில் நிலையப் பகுதியில், வெளியூர்பயணிகளிடம் தரம் குறைந்த, போலி அல்வா விற்ற 700 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நெல்லை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அனுமதி பெறாத வியாபாரிகளின் தொல்லைகளும் பெருகி விட்டதாக பயணிகள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அப்போது அல்வாவிற்கு பெயர் பெற்ற நெல்லையில் சில பிரபலமான கடைகளின் பெயர்களை சொல்லி தரமற்ற அல்வா விற்பதும் தெரியவந்தது.
இதனால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நெல்லைக்கு வரும் அனைத்து ரயில்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தினமும் 5க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சிக்குவது வாடிக்கையானது.
இந்த வியாபாரிகளுக்கு கோர்ட்டில் ரூ.300 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தரமற்ற அல்வா விற்பனையை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த வியாபாரிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அல்வா வியாபாரிகள் நெல்லையை காலி செய்துவிட்டு விற்பனையை வேறு இடத்திற்கு மாற்றி விட்டனர். இதனால் நெல்லையில் போலி அல்வா விற்பனையில் பயணிகள ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டு விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் நெல்லை ரயில் நிலையத்தில் கொடி கட்டி பறந்த அல்வா விற்பனை முற்றிலும் ஓழிக்கப்பட்டு விட்டது. மேலும் ஜனவரி 2008 முதல் இதுவரை 700 வியாபாரிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டு அபராதமும விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment