குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் `சஸ்பெண்டு'
சென்னை, ஜன.16-
சென்னையில் குடிபோதையில் பணியில் இருந்த போலீஸ்காரர் மீது `சஸ்பெண்டு' நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர் திருட்டு
சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் விரைவு நீதிமன்றத்தில் தொடர்ந்து 2 முறை திருட்டு சம்பவம் நடந்தது. எனவே அங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் விழிப்போடு பணியில் இருக்கிறார்களா? என்பதை உயர் அதிகாரிகள் திடீரென்று சென்று சோதனை நடத்தவேண்டும் என்று கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, நேற்று முன்தினம் இரவு பூக்கடை துணை கமிஷனர் மனோகரன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு திடீரென்று சென்று பாதுகாப்பு பணியை பார்வையிட்டார். அப்போது விரைவு கோர்ட்டு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் சிவக்குமார் போதையில் படுத்து தூங்கியதை கண்டுபிடித்தார்.
நடவடிக்கை
அவரிடம் விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு துணை கமிஷனர் மனோகரன் உத்தரவிட்டார். இதன்பேரில், உதவி கமிஷனர் நாகராஜன் விசாரணை நடத்தினார். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் நடத்திய சோதனையில் போலீஸ்காரர் சிவக்குமார் மது அருந்தியிருப்பது உறுதியானது.
இதன்பேரில், அவர்மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி சிபாரிசு செய்யப்பட்டது. சிவக்குமார்மீது `சஸ்பெண்டு' நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்போது மது அருந்திவிட்டு தூங்குவது, ஒழுங்கினமாக நடந்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment