அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, July 3, 2011

இன்ஜினியரிங் கல்லூரிகளில் அதிக மாணவர்கள் சேர வாய்ப்பு!!!

சென்னை:பொறியியல் கல்லூரிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களை சேர்க்க குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்த புதிய விதிமுறைகளுக்கு, சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க, குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் 35 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 40 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் 45 சதவீதம், பொதுப் பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் இந்த தகுதி மதிப்பெண்கள் தான் நிர்ணயிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.தற்போது, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,), 2011-12ம் ஆண்டுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதற்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக, பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதம், மற்ற பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும்.

ஏ.ஐ.சி.டி.இ., கொண்டு வந்த இந்தப் புதிய விதிமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழக உயர் கல்வித் துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், "ஏ.ஐ.சி.டி.இ., கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள், தமிழக அரசின் கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது. புதிய விதிமுறைகளால், இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். "பொருளாதார, சமூக ரீதியில் பின்தங்கியவர்களை முன்னுக்கு கொண்டு வரவேண்டும். இந்த விதிமுறையால், பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் மேலும் உயரும். எனவே, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும். தமிழகத்தில் நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச தகுதி விதிமுறைகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

மனுவை நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், சிறப்பு அரசு பிளீடர் சம்பத்குமார் ஆஜராகினர். மனுவை விசாரித்த நீதிபதி ஜோதிமணி, ஏ.ஐ.சி.டி.இ., பிறப்பித்துள்ள புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தார். மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

மாணவர்கள் நலன் காக்க...!கடந்த மாதம் 14ம் தேதி, டில்லியில் பிரதமரை தமிழக முதல்வர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அம்மனுவில், பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு வகுத்துள்ள தற்போதைய விதிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என, கோரியிருந்தார். இதுகுறித்து மத்திய அரசும், ஏ.ஐ.சி.டி.இ.,யும் எந்த முடிவும் எடுக்கவில்லை.பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை உடனே துவங்க வேண்டிய நிலையில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவியர், பொறியியல் கல்வி பயின்று பயன் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகளுடன், முதல்வர் ஆலோசனை நடத்தி வழங்கிய அறிவுரையின்படி, சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.ஐகோர்ட் பிறப்பித்த தடை உத்தரவின் மூலம், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் நலன் காக்கப்பட்டுள்ளது.

No comments: