அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

கற்சிலைகளை வணங்குவது சைத்தானின் அருவருப்பான செயல்களே!

சலீம் நானா அன்றைய தினசரி ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு பக்கமும் கேடுகெட்ட அரசியல்,சீரழிவு
சினிமா,கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சாதகம்,சோதிடம்,"த்தூ"காறித்துப்ப வேண்டும் போல இருந்தது அவருக்கு.பேப்பரை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டார்,வெயிலுக்கு முன்னால்,வீடு பொய் சேர வேண்டும் என எண்ணிக்கொண்டார்.
"அஸ்ஸலாமு அலைக்கும்,சலீம்"குரல் வந்த திசை நோக்கி பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்கா, கையில் உமல் பொட்டியுடன்(பன்னாவா-கொடுவாவா காக்கா).

"வ அலைக்கும் சலாம் காக்கா" முகமனுக்கு பதில் சொல்லிவிட்டு முறுவலித்தார் நானா.

"என்ன சலீம்,கையில பேப்பரும் ஆளுமா,எதுனா தேர்தல் செய்தியா?ஆமா,திருமங்கலத்துல யாரு ஜெயிச்சதாம்?என்ற பஷீர் காக்காவை பார்த்து சொன்னார் சலீம் நானா,"தி மு க தான் ஜெயிச்சிருக்கு,ஆனா அதுல நெறைய தில்லுமுல்லு நடந்திருக்குன்னு அம்மா சொல்லுது,அது கெடக்குது காக்கா,பேப்பர தொறந்தா ஒரே சினிமா,சோதிடம்,ராசி பலன் இப்பிடி சீரழிவு கலாச்சாரமும்,மூட நம்பிக்கையும் தான் அதிகம்,எனக்கு ஒரு விளக்கம் தெரியனும்,அதாவது இஸ்லாம் பார்வையில சோதிடம்,ராசி பலன் போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி நீங்க எனக்கு விளக்கனும்"வேண்டுகோள் விட்டார் சலீம் நானா.

பஷீர் காக்கா சொன்னார்," நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும்."

"ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன் "நன்மை, தீமை யாவும் இறைவன் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும்" நம்ப வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நாள், நட்சத்திரம் பார்ப்பது அந்த நம்பிக்கைக்கு மாறு செய்வதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் அவர் பாவமன்னிப்பு தேடி மீள்வது கட்டாயக் கடமையாகும்."

"அடுத்த நிமிடம் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே. அப்படியிருக்க தன்னை போன்ற ஒரு படைப்பான இன்னொரு மனிதனிடம் சென்று நல்ல நேரம் நிச்சயிப்பது, எதிர் காலத்தில் தனக்கு என்ன நிகழும் என்பதை அறிய குறி கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அம்மனிதனுக்கு இறைவனுக்கு மட்டுமேயுள்ள எதிர் காலத்தை அறியும் சக்தி இருப்பதாக எண்ணுவதற்கு ஒப்பானதாகும். இதையே திருமறை குர்ஆன்,

........அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் , அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன).........(அல்குர்ஆன் 5:3)

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் , அம்புகள் எறிந்து குறி கேட்பதும் , ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

என்று இறைவனின் வார்த்தைகளாகக் குறிப்பிடுகிறது."

"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."

"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே.
"இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம்" - (அல்குர்ஆன் 3:140)

"சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேற்பகுதி கீழே செல்லும். இதுவே இயற்கை நியதி. இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டுச் சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்."

"எதிர் காலத்தில் இன்னின்ன நடக்கும் என்பதை இறைவன் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக சிலவற்றை அறிவித்துத் தந்திருக்கிறான். அவற்றைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அறியும் ஞானம் இவ்வுலகில் யாருக்கும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத சிலவற்றை மற்றவர்களால் அறிய முடியும் என நம்பிக்கை வைப்பது அவர்களை வரும் காலத்தை அறியும் பண்பு கொண்ட இறை நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்பானதாகும். "

"இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம். "

"ஒரு மந்திரவாதி(?)யிடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்."

"நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டாமா? "

"யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி . (அஹ்மத் 9171) "

"இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்களின் நிலைமையை கவனித்தால் அவை அனைத்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நடத்தும் ஏமாற்று வித்தை என்பதை அறிந்து கொள்ளலாம். "

"மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை யாராவது அவர்களிடம் சென்று குறி கேட்கும் நேரம் தான் அவர்களுக்கு நல்ல நேரம். இல்லையெனில் அன்றைய சாப்பாட்டிற்கே அவர்களுக்குத் திண்டாட்டம் தான். இது ஒரு பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்."

பஷீர் காக்கா சொல்லி முடித்ததும்,சலீம் நானாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை,"ஸுப்ஹாநல்லாஹ்,இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாக விவரிக்கிறது.சத்தியமாக இது ஒரு இறைவனுடைய மார்க்கம்தான்".அவருள் நிம்மதி வெளிப்பட்டது.

http://www.peacetrain1.blogspot.com/

No comments: