அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு 6 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் திருச்சி காஜா நகரில் காஜா மியான் திடலில் தலைவர் பேராசிpரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் எஸ் ஹைதர் அலி, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிபாயி, மாநிலச் செயலாளர்கள் எம். தமீமுன் அன்சாரி, பி. அப்துஸ் ஸமது, காஞ்சி ஜூனைத்,


கே. முஹம்மது கவுஸ், துணைச் செயலளார்கள் ஹாருன் ரஷீத், ஹாஜா கனி, கோவை சாதிக் அலி, டி. எஸ். இஸ்மாயில், சேட்கான், ஜே. அவுலியா உள்பட 2000க்கும் மேற்பட்;ட பொதுக்குழு உறுப்பினர்கள் இப்பொதுக் குழுவில் பங்குக் கொண்டனர். இப்பொதுக் குழுவில் பின்வரும் தீர்மானங்கள் வருமாறு:


தீர்மானம் 1
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு 6 சதவிகிதமாக உயர்த்தப்பட வேண்டும்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்; முதன்மை கோரிக்கையும், தமிழக முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையுமான கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடதுக்கீடு என்பதைப் பரிவோடு பரிசீலித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதை நன்றியுடன் நினைவு கூறும் அதே வேளையில் 3.5 சதவிகித இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைமையை சீர் செய்யப் போதுமானதல்ல என்பதால், 6 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதியை வலுப்படுத்த தமிழக முதல்வர் கலைஞர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 2
மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரை ஏற்கப்பட்டு அனைத்திந்திய அளவில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்


2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. இதே வாக்குறுதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச பொதுச் செயல் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.
முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீட்டைப் பல்வேறு முறையான ஆய்வுகளுக்கு பிறகு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது. பிரதமரிடம் 2007 ஆகஸ்ட் 22 அன்று மிஸ்ரா ஆணையம் தனது அறிக்கையை சமர்பித்து விட்டது. இந்த ஆணையப் பரிந்துரையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து, அவற்றை உடனடியாக மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 3
இஸ்ரேலுடன் உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்


பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது அராஜகத் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் பயங்கரவாத இஸ்ரேலை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பயங்கரவாத இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாகத் துண்டிக்கக் கோரியும்,


பாலாஸ்தீனத்தின் மீதானத் தாக்குதலைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஜனவரி 8 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது. வர்ணிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வரும் காஸா மக்களுக்கு இந்திய அரசு உடனடியாக நிவாரண உதவிகளைச் செய்ய வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.


தீர்மானம் 4
வேலூர் கோட்டைப் பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும்


வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த இது வரை அனுமதி மறுத்து சிறுபான்மை மக்களுக்கு அரசியல் சாசனச் சட்டம் அளித்துள்ள வழிப்பாட்டு உரிமையை நசுக்கி வரும் மத்திய அரசை இப்பொதுக் குழு வன்மையாக கண்டிக்கின்றது.


வேலூர் கோட்டைப் பள்ளிவாசலில் தொழுகை நடத்த இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் உடனடியாகத் அனுமதிக்க வேண்டும். இதே போல் நாடெங்கும் தொல்லியல் துறையால் தொழுகை தடுக்கப்பட்டுள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்தப் பள்ளிவாசல்களை முஸ்லிம்களே பராமரிக்க அனுமதிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 5
மனிதநேய மக்கள் கட்சியை வாழ்த்தி வரவேற்கிறது


நாடாளுமன்றம் முதல் உள்ளாட்சி மன்றங்கள் வரை முஸ்லிம்களின் வெற்றிடத்தை நிரப்பும் வகையிலும் ஊழலற்ற அரசியலை உருவாக்கவும் மலரவுள்ள மனிதநேய மக்கள் கட்சியை இப்பொதுக்குழு வாழ்த்தி வரவேற்கிறது.


பிப். 7 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெறவுள்ள மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாட்டில் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.





தீர்மானம் 6
இடஒதுக்கீடு அமுலாக்கத்தை கண்காணிக்க குழு


தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனி இடஒதுக்கீட்டின் முழு பயன் சமுதாயத்திற்குக் கிடைக்காத வகையில் அதிகாரிகள் முட்டுக்கட்டைகள் போட்டு வருகின்றனர். எனவே இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க அரசு அலுவலர் அல்லாத சமுதாயப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவை அரசு உருவாக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 7
இராமநாதபுரம் காவல்கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை வேண்டும்


இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்வேலன் தொடர்ச்சியாக முஸ்லிம் விரோத மனப்பான்மையுடன் பாரபட்சமாக செயல்பட்டு வருகிறார். பரமக்குடி மாணவர் ராஜா மஸ்தான் மர்மமான முறையில் படுகொலைச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த மரணத்தை தற்கொலை என்று முடிப்பதற்கு அவர் முனைந்தார். தமுமுக வலியுறுத்தல் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவரது முஸ்லிம் விரோத போக்கு அதிகரித்துள்ளது.


இதன் உச்சக்கட்டமாக டிசம்பர் 6 அன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் பங்குக் கொண்ட ராமநாதபுரம் மத்திய மாவட்டத்தின் தலைவர் சலிமுல்லாஹ் கான், ராமநாதபுரம் வடக்கு மாவட்டத்தின் தலைவர் தொண்டி சாதிக் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட 24 பேர் மீது எஸ்.பி. செந்தில்வேலன் அபாண்டமான பொய் வழக்கு பதிவுச் செய்துள்ளளார். தமுமுகவின் தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு திருச்சியில் ஜனவரி 3 மற்றும் 4 அன்று நடைபெறவுள்ள நிலையில் தமுமுகவின் ராமநாதபுரம் மத்திய மாவட்டத் தலைவர் சலிமுல்லாஹ் கானை ஜனவரி 2 அன்று மாலை கைதுச் செய்து தனது வஞ்சக உள்ளத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராமநாதபுரம் எஸ்.பி. செந்தில்வேலன்.


நடுநிலை தவறி பழிவாங்கும் போக்கில் செயல்படும் ராமநாதபுரம் காவல்கண்காணிப்பாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து உடனடியாக அவர் இடமாற்றம் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கோருகின்றது. தமுமுகவினர் மீதும் எமனேஸ்வரம் ஜமாஅத்தினர் மீதும் இவர் போட்ட பொய் வழக்குகள் வாபஸ் பெறப்பட வேண்டுமெனவும் இப்பொதுக் குழு கோருகின்றது.


தீர்மானம் 8
பள்ளிவாசல் கட்டுவதற்குள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும்


தமிழகத்தில் பள்ளிவாசல் கட்டுவதற்குத் தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பள்ளிவாசல் கட்டத் தடையில்லாச் சான்றிதழ் பெறக் கூறி அலைக்கழித்தல் போன்ற செயல்களை அரசுத் துறையினர் கைவிட வேண்டும் என இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.



தீர்மானம் 9
வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் பள்ளிவாசல்களுக்கு இடம் வேண்டும்


தமிழக அரசு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமானக் குடியிருப்புப் பகுதிகளில், வழிபாட்டுத் தலங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும் போது ஓரவஞ்சனையாக பள்ளிவாசல்களுக்கு மட்டும் இடம் ஒதுக்காத இழிசெயல் நடந்து வருகிறது. இதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில்கள், தேவாலாயங்களுக்கு இடம் ஒதுக்கியுள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் பள்ளிவாசல்களுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 10
குடிசைமாற்று வாரிய வீடுகள் ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு


குடிசைமாற்று வாரியத்தின் வீடுகளை ஒதுக்கீடு செய்வதில் முஸ்லிம்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வருவதை இப்பொதுக்குழு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறது. குடிசைமாற்று வாரிய வீடுகளை ஒதுக்குவதில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கீடு கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 11
இலவச வீட்டுமனைப் பட்டா


ஐந்தாண்டுகளுக்கு மேலாகக் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என தமிழக அரசு தனது ஆணையில் கூறியுள்ளது. ஆனால் காஞ்சி மாவட்டம் பெரும்பாக்கம்;, தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டை மற்றும் பாலகோடு, தஞ்சை மாவட்டம் சோழபுரம், திருவாருர் மாவட்டம் கம்பூர்,


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடி சிவகெங்கை மாவட்டம் இளையாங்குடி என பல ஊர்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் குடியிருந்து வரும் மக்களுக்கு இன்னும் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட வில்லை. இம்மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


மேலும், பெரும்பாக்கத்தில் வகித்துவரும் ஏழை எளிய மக்களை வெளியேற்ற குடிசைமாற்று வாரிய அமைச்சர் சுப.தங்கவேலனும், குடிசைமாற்று வாரிய இயக்குநரும் முயற்சிப்பதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.


தீர்மானம் 12
வழிப்பாட்டுத் தலங்களுக்கு வரிவிலக்கு வேண்டும்


வாணியம்பாடி நகராட்சி நிர்வாகம் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு சொத்துவரி விலக்கு அளிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை (தீர்மானம் எண்.2746 நாள்: 24.07.2008) இப்பொதுக்குழு பாராட்டுகிறது. இத்தீர்மானத்தை அரசு ஏற்றுக் கொண்டு வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு வரிவிலக்கு அளிக்க வகை செய்ய வேண்டும் என தமிழக அரசை இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 13
மயிலை துணை ஆணையாளர் மீது நடவடிக்கை வேண்டும்


தென் சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள நீலம்பாஷா 91வது வட்டத்தில் குண்டர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்த மக்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் குண்டர்களால் தாக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மார் உட்பட அப்பாவி மக்கள் மீதே பொய் வழக்கு போட்ட மயிலை துணை ஆணையாளர் மௌரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 14
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு


கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 8000 பேரில் வெறும் 60 பேர் மட்டுமே முஸ்லிம்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்பது வேதனைக்குரியது. இதை கவனத்திற்கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு உரிய வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 15
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம்


மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தாக்குதலில் உயிரிழந்த ஹேமந்த் கர்கரே உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், அப்பாவி பொதுமக்களுக்கும் இப்பொதுக்குழு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.


தீர்மானம் 16
மும்பை தாக்குதல்களுக்கு முறையான விசாரணை வேண்டும்


மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் நேர்மையான முறையில் விசாரிக்கப்பட வேண்டும். இவ்விசாரணையைக் கண்காணிக்க உச்சநீதிமன்ற நீதிபதி, தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர், தேசிய மகளிர் ஆணையத் தலைவர், தேசிய எஸ்.சி. எஸ்.டி.ஆணையத் தலைவர், தேசிய சிறுபாண்மையினர் ஆணையத் தலைவர் உள்ளிட்டோர் அடங்கிய குழு நியமிக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.


தீர்மானம் 17
மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணை தொடர்ந்து நேர்மையாக நடக்க வேண்டும்


மாலேகான் குண்டு வெடிப்பின் பின்னணியில் சங்பரிவார சதிகள் இருந்ததை மறைந்த அதிகாரி ஹேமந்த் கர்கரே வெளிக்கொண்டு வந்தார். இவ்விசாரணையில் தொய்வு ஏற்பட்டு விடாமல், பாரபட்ச மற்ற முறையில் தொடர்ந்து நடத்தப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.



தீர்மானம் 18
மத்திய அமைச்சர் அந்துலேயின் கருத்தகள் நியாயமானவை


தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் மர்மமான முறையில் கொல்லப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே எழுப்பிய சந்தேகங்கள் முற்றிலும் நியாயமானவை என இப்பொதுக்குழு கருதுகிறது. அந்துலேவுக்கு நெருக்கடி கொடுப்பதை நிறுத்தி, அவர் எழுப்பிய சந்தேகங்களை விசாரித்துத் தெளிவு படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு மத்திய அரசை கோருகிறது.


தீர்மானம் 19
புதிய கருப்புச் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும


பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக என்ற காரணம் கூறிக் கொண்டு வரப்பட்ட தடா, பொடா போன்ற கறுப்புச் சட்டங்கள் குற்றவியல் நீதி பரிபாலனத்தின் களங்கமாகவே அமைந்தன. இச்சட்டங்கள் குற்றங்களைக் கட்டுப்படுத்த வில்லை. ஆனால் ஆயிரக்கணக்கான அப்பாவிகளை நீண்டகால சிறை வேதனைக்கு ஆளாக்கின.


இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் திருத்தங்களும், தேசியப் புலனாய்வு நிறுவனச் சட்டமும், தடாவின் மறுபதிப்பாகவே அமைந்துள்ளன. தடா, பொடா போன்றவை கூட தற்காலிக சட்டங்களே. ஆனால், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இரு சட்டங்களும் நிரந்தரமானவை.


அவற்றால் அப்பாவி பொது மக்களும், மாநிலங்களின் உரிமைகளும் பாதிக்கப்பட பெரிதும் வாய்ப்பு உள்ளதால், இச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டு இருக்கி;ன்ற சட்டங்கள் மூலம் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 20
வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய பணியாளர்களுக்கு வாக்குறுமை வேண்டும்


வெளிநாட்டில் பணியாற்றி தாய்நாட்டை வளப்படுத்தும் வெளிநாடு வாழ் இந்திய குடியுரிமையும் கடவுச்சீட்டும் உள்ள பணியாளர்களுக்கு, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தலின் போது அவர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த வகை செய்யப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 21
தாயகம் திரும்பும் இந்திய தொழிலாளர்களுக்கு நல வாரியம்

நீண்டகாலம் வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்திய தொழிலாளர்களுக்கு நல்வாழ்க்கை அமைத்துத் தர அரசு உடனடி முயற்சிகளை எடுக்க வேண்டும் எனவும் தாயகம் திரும்புவோர் நலவாரியம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 22
வெளிநாட்டு பணியாளர்களுக்காக தனி அமைச்சகம்


வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய குடியுரிமையுள்ள பணியாளர்களின் நலன் காக்க, கேரளாவில் இருப்பது போல் தமிழகத்திலும் ஒரு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 23
வரலாற்று சின்னங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்


உலக அதிசயமாகவும், இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றுச் சின்னமாகவும், முகலாயக் கட்டடக் கலையின் முத்திரையாகவும் திகழும் தாஜ்மஹால், தொல்லியல் துறையின் மோசமான பராமரிப்பில் பொலிவிழந்து வருவதையும், அதன் அழகு சிதிலமாகி வருவதையும் பல நிபுணர்கள் கவலையோடு சுட்டிக்காட்டியுள்ளனர். தாஜ்மஹால் உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்திற்கும் முறையான பாதுகாப்பும், பராமரிப்பும் செய்யப்பட வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 24
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு


தமிழகத்தில் பூரண மது விலக்கைப் படிப்படியாக கொண்டுவருவது குறித்த தமிழக அரசின் அறிவிப்பை இப்பொதுக்குழு வரவேற்கிறது. ஆயினும், பூரண மதுவிலக்கிற்கு கொண்டு வருவதற்கான கால அவகாசம் அதிகமாகவுள்ளது. ஆறுமாத காலத்திற்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு செயல்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 25
வரலாற்று பாடநூல்களில் முஸ்லிம்களின் பங்கு பதிவு வேண்டும்


இந்திய விடுதலைப் போட்டத்தில் பங்கேற்ற தமிழக முஸ்லிம்களை வரலாற்றுப் பாட நூற்களில் பதிவு செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 26
ஹஜ் தேர்வு மோசடிக்கு விசாரணை தேவை


ஹஜ் கமிட்டியில் நடந்துள்ள குளறுப்படிகளையும், அதனால் இந்த ஆண்டு ஹஜ்பணிகள் அடைந்துள்ள சிரமங்களையும், ஹஜ் பயணிகள் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளையும் மத்திய அரசு கவனத்திற்கொண்டு இது தொடர்பாக மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு (சி.பி.ஐ.) உத்தரவிடப்பட்டு தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.


தீர்மானம் 27
இலங்கை பிரச்னை


இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அப்பாவிப் பொதுமக்களைக் கொல்ல அரசு எந்திரங்களைப் பயன்படுத்தாமல் பிரச்சனையைப் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்க்க இலங்கை அரசும், மக்கள் அமைப்புகளும் முன்வர வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. இலங்கை இனப் மோதல்களில் மிகமிக மோசமான பாதிப்புகளை அடைந்துள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு உரிய நிவாரணமும், பரிகாரமும் செய்யப்பட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 28
தண்டனை சிறைவாசிகள் விடுதலை


7 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை பெற்றவர்களை அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலைச் செய்யப்பட்டவர்களில் பத்தாண்டுகளுக்கு மேலாக தண்டனை கைதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டதை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கினறது. வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுதலைச் செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு தமிழக அரசை கோருகின்றது.


தீர்மானம் 29
பாண்டியில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு


பாண்டி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிப்போம் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்து காங்கிரஸ் கட்சி பல போராட்டங்கள் நடத்திய பிறகும் இடஒதுக்கீட்டை அளிக்க மறுத்து வருகின்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாண்டியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில்லை என்று இப்பொது குழு தீர்மானிக்கின்றது


தீர்மானம் 30
உலமா வாரியம்


தமிழக முஸ்லிம்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று உடனடியாக உலமா மற்றும் பள்ளிவாசல் ஊழியர்கள் நல வாரியம் அமைக்க தமிழக அரசு உடனடியாக ஆவணச் செய்ய வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது


தீர்மானம் 31
குணங்குடி ஹனிபா விடுதலை


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான குணங்குடி ஹனிபா உடனே விடுதலைச் செய்யப்பட ஆவணச் செய்ய வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது

தீர்மானம் 32
ஆபாசத்திற்கு தடை வேண்டும்


சினிமா, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மிக விரசமாக பரவி வரும் ஆபாசத்தை தடுக்க மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது


தீர்மானம் 33
நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம்


தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆக்கரமிப்பு என்ற பெயரில் அப்புறப்படுத்தப்படும் நடைபாதை வியாபாரிகளுக்கு உடனடியாக தகுந்த மாற்று இடமும் நிவாரணமும் வழங்க வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது


தீர்மானம் 34
பெட்ரோல், டீஸல் மற்றும் எரிவாயு விலை


சர்வதேச அரங்கில் கச்ச எண்ணை விலை பல மடங்கு குறைந்த போதினும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்காத மத்திய அரசை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கின்றது. உடனடியாக விலை குறைப்பு செய்யப்பட வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.


தீர்மானம் 35
சிவகாசி பொய் வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும்


விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தீ விபத்து நடைபெற்ற போது மக்களை காப்பாற்றிக் கொண்டிருந்த தமுமுக நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டுமென இப்பொதுக் குழு கோருகின்றது.

No comments: