அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை: மனித நீதிப்பாசறை மாநில தலைவர் பேச்சு

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை: மனித நீதிப்பாசறை மாநில தலைவர் பேச்சு


திருநெல்வேலி, டிச. 13 சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை என மனித நீதி பாசறையின் மாநிலத் தலைவர் எம். முகம்மது அலி ஜின்னா பேசினார்.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மனித நீதிப் பாசறையில் அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தேசிய அரசியல் மாநாட்டு பிரசார பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு மனித நீதிப்பாசறையின் மாவட்டத் தலைவர் எஸ். முகம்மது முபாரக் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் முகம்மது அலி ஜின்னா பங்கேற்று மேலும் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆனபிறகும் நாட்டில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ற அரசியல் பிரதிநிதித்துவமோ, ஆட்சி அதிகாரமோ முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை.

முஸ்லிம்கள் குடியிருந்து வரும் பகுதிகளை ஒதுக்கப்பட்ட பகுதியாகவே ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்பட வில்லை.

நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட நலத் திட்ட உதவிகள்கூட முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை. ஜனநாயக நாட்டில் தொடர்ந்து முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்ட மக்களாகவே உள்ளனர்.

முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவே, கோழிக்கோட்டில் வரும் பிப்ரவரி மாதம் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசிய அளவில் அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது.

இதுதொடர்பாக முக்கிய இடங்களில் மாநாடு பிரசார பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சச்சார் கமிட்டி அறிக்கையில் முஸ்லிம்களின் நிலை பற்றி கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசுகள் அதைப் பற்றி கவலைப்பட வில்லை. இதனால் முஸ்லிம்கள் இனி விழித்துக் கொள்ள வேண்டும். ஆட்சியில், அதிகாரத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் தர வேண்டும் என கேட்க வேண்டும். அதற்கான காலம் விரைவில் வரும்.

முதலாளித்துவத்திற்கு எதிரான சக்தியை திரட்ட வேண்டும். சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் நீதி, பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்றார் அவர்.

கூட்டத்தில் இ.எம். அப்துர் ரஹ்மான், ஏ. பக்ரூதீன், வழக்கறிஞர்கள் பா. மோகன், தங்கசாமி, ஜமாஅத்துல்லா உலமா ஏ. முகம்மது இப்ராஹிம் பாகவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கே.எஸ். ஷாகுல் அமீது உஸ்மானி வரவேற்றார்.

No comments: