இஸ்ரேல் நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உடனடியாக யுத்தநிறுத்தம் வேண்டும்!!!:இலங்கை அரசு!!! !!!
By இனி • Jan 10th, 2009 • Category: செய்திகள்/ஆய்வுகள்10.01.2009.
பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு அங்கு உடனடியாக யுத்தநிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் வலியுறுத்துவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜே.வி.பி.யினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் அரசு நடத்திவரும் இராணுவ நடவடிக்கையால் இதுவரை 500 க்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பாரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கையெடுத்துள்ளதென ஜே.வி.பி.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த ரோஹித போகொல்லாகம மேலும் கூறியதாவது;
காஸா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து வருகின்றது. காஸா மீதான இராணுவ நடவடிக்கையால் பாரிய மனித அழிவுகள் இடம்பெற்றிருப்பது குறித்து அரசு ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அங்கு யுத்தம் நிறுத்தப்பட்டு சமாதானம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே இலங்கையரசின் நிலைப்பாடு.
இஸ்ரேல் அரசு நடத்திவரும் இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உடனடியாக யுத்தநிறுத்தமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென இலங்கையரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பலஸ்தீனத்தில் இடம்பெற்று வருகின்ற வன்முறைகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசு பூரண ஒத்துழைப்பு வழங்குமென ஐ.நா.வின் செயலரிடம் உறுதி வழங்கியுள்ளோம்.
No comments:
Post a Comment