ஊடக சுதந்திரத்தையே நக்கித் தின்னும், தமிழ் ஊடகவியல்
மானம், நேர்மை, தர்மம், உண்மை என்று எதிவுமற்றது என்றால், அது தமிழ் ஊடகவியல்தான். ஊடக தர்மம், சுதந்திரம் என்று எந்த அடிப்படையான தகுதியுமற்றதும், நக்கிதின்னும் பச்சோந்திகளால் நிறைந்தது தான் தமிழ் ஊடகவியல்;. தமிழ் இனத்தின் சாவில், தான் பிழைக்கின்ற பிழைப்பையே 'சுதந்திர" ஊடகவியலாகி அதை திண்டு செரிக்கிறவர்கள் இவர்கள்.
இந்த மானக்கேட்டை தொழிலாக செய்வதைவிட, மனிதனாக உழைத்து வாழலாம். மக்களை ஏமாற்றி அதை நக்கித் தின்பதையே தொழிலாக கொண்டு, நீங்கள் செய்யும் ஊடகவியல் 'சுதந்திரம்" மொத்தத்தில் மோசடி நிறைந்தது. செய்திகளை மூடிமுறைத்தும், திரித்தும், கற்பனையில் புனைந்தும், மக்களை ஏமாற்றுகின்ற மோசடியை செய்வதில் தமிழ் ஊடகவியல் கைதேர்ந்தது.
இதற்கு மாறானது சிங்கள ஊடகவியல். இலங்கையில் சிங்கள ஊடகவியல் வெளிப்படுத்தும் சுதந்திர உணர்வோ, தமிழ் ஊடகவியலிடம் கிடையாது. பொதுவாக சிங்கள பாசிச அரச இயந்திரத்தை குற்றம்சாட்டி பேசும் 'சுதந்திர" தமிழ் ஊடகவியல், உண்மையில் தமிழ் பாசிசத்தை சீவி முடித்து சிங்காரித்து விடுகின்றது. இப்படி புலிகளைச் சுற்றி கூடாரம் அடித்து, அவர்களுக்கு ஏற்ப குலைப்பதையே தம் ஊடாக தர்மமாக கொண்டிருந்தனர். இதைத் தாண்டி யாரும், உண்மைகளை மக்களுக்கு சொன்னதில்லை.
தேசியம் என்ற கொப்பை பிடித்துக்கொண்டு தொங்கிய இவர்கள், பாசிசத்துடன் சேர்ந்து அடிமரத்தையே வெட்டிக் கொண்டிருந்தனர். இதையே ஊடகவியல் என்றனர். தேசியத்தின் பெயரில் மனித அறநெறிகளை எல்லாம் மறுத்து நின்ற எம்மண்ணில், தமிழ் ஊடகவியல் மனித அறிநெறிக்காகக் குரல் கொடுக்கவில்லை. அதன் குடலையே உருவி தம் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டே, பாசிசத்தின் பின்னால் அலைந்தவர்கள். இதற்கு மேல் அதனிடம் எந்த உண்மையும் நேர்மையும் உணர்வும் கிடையாது. இதன் நேர்மை என்பது, பொறுக்கித்தின்;பதாக இருந்தது. உழைத்து வாழ்வதை வெறுத்து, நக்கி வாழ்வதை தொழிலாக கொண்டது.
பச்சோந்தித்தனமான நியாயங்களை கொண்டு, மனிதத்தை சிதைக்க பின் நிற்கவில்லை. இந்த வகையில் இன்று சிங்;கள ஊடகவியல் அரசுக்கு எதிராக வெளியிடும் செய்திகளையும், புலிக்கு சார்பாக வரும் செய்திகளையும் தாங்கி நிற்க முனைகின்றது. தமிழ் பாசிசத்தை பாதுகாக்க, சிங்கள அரசுக்கு எதிரான எதிர்கட்சிகளின் கருத்துகள் முதல் அதன் பொய்கள் வரை கூட்டியள்ளி, தமழ் மக்களின் மண்டைக்குள் திணிக்க முனைகின்றனர்.
செய்தி என்பது, தமிழ் மக்களின் வாழ்வின் மேலல்ல, பாசிட்டுகளின் காய்நகர்த்தலுக்குள் உட்பட்டதாக காட்ட முனைகின்றனர். தமிழ் மக்களை முட்டாளாக வைத்திருப்பதே, தமிழ் ஊடகவியலின் தலையாய நோக்கமாகவுள்ளது.
பேரினவாத அரசின் அரசியல் அடிப்படை மீதும், அதன் சமூக இருப்பின் மேலும் கீறு விழாத வண்ணம், புலி நலனுக்கு எதிரானதை மட்டும் அரசுக்கு எதிராக கவிபாடுவதே இந்த தமிழ் பாசிச எடுபிடிகளின் ஊடகத்தருமமாகியது. தமிழ் மக்கள் சந்தித்த, சந்திக்கின்ற மனித அவலங்களை, ஊடகம் வெட்டிப் புதைகுழிக்குள் போட்டது.
சிங்கள ஊடகவியல் அரசுக்கு எதிரான செய்திகளை தாங்கி வந்தபோது, தமிழ் ஊடகவியல் இதற்கு எதிர்மறையில் செயல்பட்டது. அவை செய்தியை திரித்து, புலிக்கு ஏற்ப செய்தி வெளியிட்டது. சிங்கள ஊடகவியல் அரசை விமர்சிப்பதும், அதை புலிகள் பயன்படுத்தி பிழைக்கமுனைவதும், இன்று வெளிப்படையாக அம்பலமாகி நிற்கின்றது.
மாற்றுக்கருத்தற்ற புலிகளின் பாசிச சர்வாதிகாரம், தன் பிரச்சாரத்துக்கு அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் செய்திகளை நம்பியே இன்று அரசியல் செய்கின்றது. இன்று புலிகளால் எதையும் செய்ய முடியாததால், சொல்ல முடிவதில்லை. சொன்னவை அடுத்த நிமிடமே அம்பலமாகி விடுகின்றது. தமிழ் ஊடகவியல் வெற்று வேட்டில் திணறுகின்றது.
புலியோ தன்னையும், தனது வீரத்தையும் வார்த்தையிலாவது நிலைநாட்ட, அரசுக்கு எதிரான சிங்கள ஊடகவியலையும் அரசின் எதிர்கட்சிகளின் செய்திகளை சார்த்து இருக்கும் அவலம். தமிழ் ஊடகவியல் முதுகெலும்பிழந்து, தவண்டு சென்றே நக்குகின்றது. சிங்கள ஊடகவியல் கடைப்பிடிக்கும் குறைந்தபட்ச நேர்மை, தமிழ் ஊடகவியலிடம் கிடையாது.
தமிழ் மக்கள் புலிகளால் துன்புறுத்தப்படவில்லையா!? அவர்களால் ஒடுக்கப்படவில்லையா!? எந்தச் செய்தியாளன், 'சுதந்திர" செய்தியாளனாக இவற்றையெல்லாம் செய்தியாக்கினான்.
தமிழ் செய்தியின் நேர்மை, உண்மைத்தன்மை என்று எதுவும் கிடையாது. அது பச்சோந்தித் தனத்தையும், அதன் மூலம் நக்கித்தின்னவும் வெளிக்கிட்டு அனைத்தையும் மூடிமறைக்கின்றது. தமிழினம் படுகின்ற சொல்லொணா அவலத்தையும், அவர்களின் வாழ்வின் துயரத்தையும் செய்தியாக கூட கொண்டுவராத அனைவரும,; தமிழ் மக்களின் முன் உண்மையான துரோகிகள் தான். மனித வரலாறு மன்னிக்க முடியாத குற்றம்.
பி.இரயாகரன்
10.01.2009
No comments:
Post a Comment