அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 13, 2009

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!

இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம்!

ஓசூர்சிப்காட் பகுதியில், பேடர்பள்ளி அருகே டி.வி.எஸ். நிறுவனத்துக்கு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ராஜ்சிரியா என்ற ஆலை உள்ளது. இவ்வாலையில் நீண்ட காலமாகப் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு கூட வேலை நிரந்தரமோ,

அடையாள அட்டையோ, சட்டரீதியான சலுகைகள்உரிமைகளோ கிடையாது. எவ்வித உரிமைகளுமின்றி தொழிலாளிகளைக் கொத்தடிமைகளாக்கிச் சுரண்டி, இவ்வாலை இன்று 4 பிரிவுகளைக் கொண்ட பெரிய ஆலையாக வளர்ந்துள்ளது.


இவ்வாலையில் கடந்த நவம்பர் 19ஆம் தேதியன்று கொதிகலனில்(பாய்லர்) தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் பேரொலியுடன் கொதிகலன் வெடித்துச் சிதறி, அருகே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் உடலில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. நாகவேணி என்ற பெண் தொழிலாளி அலறியபடியே, உடலெங்கும் தீப்பற்றியெரிய ஆலைக்கு வெளியே ஓடிவந்து விழுந்து துடித்தார். இந்த விபத்தினால் ஆலையின் மேற்கூரையே பிய்த்தெறியப்பட்டுள்ளதால், இங்கு வேலை செய்த தமிழ் தெரியாத அசாமிய, கன்னட கூலித் தொழிலாளிகளின் நிலைமை என்னவானது என்றே தெரியவில்லை.


இவ்விபத்தையே மூடிமறைக்க எத்தணித்த நிர்வாகம், தீயணைப்பு வண்டி வந்தபோது, குற்றுயிராகக் கிடந்த தொழிலாளிகளை கழிவறைக்குள் அடைத்து வைத்தது. பின்னர், தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மட்டும் அளித்து, வேறெந்த மருத்துவநிவாரண உதவியுமின்றி வேலையிலிருந்து விரட்டியடித்தது. படுகாயமடைந்த நாகவேணி, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்களும் உள்ளூர் மக்களும் ஆலை நிர்வாகத்துடன் சண்டையிட்ட பின்னர், அவரை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தது. ஆனாலும் மருத்துவச் செலவுகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. 27 நாட்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகவேணி, கடந்த டிசம்பர் 16ஆம் நாள் மாண்டு போனார்.


இலாபவெறி பிடித்த ராஜ்சிரியா ஆலை நிர்வாகம் நடத்திய இப்படுகொலைக்கெதிராக இப்பகுதியில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மக்களை அணிதிரட்டியது. டிசம்பர் 17ஆம் தேதி ஆலை வாயில் முன்பு தொழிலாளர்களும் பகுதிவாழ் மக்களும் பெருந்திரளாகக் குவியத் தொடங்கியதும், போலீசின் உதவியோடு, விதவையான நாகவேணியின் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து


ரூ. 50,000/ நிவாரணமாகத் தருவதாகக் கூறியது. ஓட்டுக் கட்சிப் பிரமுகர்களும் சில பிழைப்புவாத மனித உரிமை அமைப்புகளும் கட்டப் பஞ்சாயத்து நடத்தி, போலீசை வைத்து மிரட்டினர். இதனை அம்பலப்படுத்தி பு.ஜ.தொ.மு. தோழர்கள் போராடியதும் பின்வாங்கிய போலீசு, அதிகாலை 3 மணிவரை இழுத்தடித்து, நாகவேணியின் உறவினர்களை மிரட்டி, உடலை அங்கு கொண்டு வந்து கிடத்தி விட்டுச் சென்றது.


மறுநாள் காலை இறுதி ஊர்வலத்துக்கு பு.ஜ.தொ.மு. வினரும் தொழிலாளர்களும் செங்கொடிகளுடன் அணிதிரள்வதைக் கண்டு பீதியடைந்த போலீசு, பெரும் படையுடன் வந்து ""கொடிபேனர்கள் கூடாது; மீறினால் கைது செய்வோம்'' என்று மிரட்டி அச்சுறுத்தியது. பு.ஜ.தொ.மு. தோழர் பரசுராமன் மற்றும் நிவாரணம் கோரிப் போராடியவர்கள் மீது பொய்வழக்கு சோடித்துள்ளது. இனி யாரும் இதுபோல் தொழிலாளியின் உரிமைக்காகப் போராடக்கூடாது என்று போலீசும் முதலாளிகளும் விடுத்துள்ள எச்சரிக்கைதான் இது.


இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். ஓசூர்சிப்காட் பகுதியில் கொத்தடிமைகளாக உழலும் தொழிலாளிக்கும், நெடுஞ் சாலையில் லாரியில் அடிபட்டுச் சாகும் நாய்க்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விட்டது. இப்பகுதியில் விபத்தில் பலியாகும் தொழிலாளியின் உடலை இரகசியமாகப் புதைத்துவிட்டு, "காணாமல் போய்விட்டார்' என்று ஆலை நிர்வாகங்கள் கைவிரிக்கின்றன. முட்புதர்களில் அனாதைப் பிணங்கள் கண்டறியப்படுகின்றன. போலீசாரோ, ஆலை நிர்வாகத்தின் அடியாட்களாகச் செயல்படுகின்றனர்.


தொடரும் இப்பயங்கரவாத கொடுமைக்கு எதிராக துண்டுப் பிரசுரம்சுவரொட்டிகள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு. அதன் தொடர்ச்சியாக 22.12.08 அன்று மாலை சிப்காட்ஐ பேருந்து நிறுத்தம் அருகே தொழிலாளர்களை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.


பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.

No comments: