ஜனவரி 21-ல் சென்னை பல்கலை. விழாவில் தலாய் லாமா பங்கேற்பு
சென்னை, ஜன. 17: திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய்லாமா இம்மாதம் 21-ம் தேதி சென்னை பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்துள்ள "அமைதியும் - மகிழ்ச்சியும்' என்ற தலைப்பில் பேசுகிறார் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். ராமச்சந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, வரும் இம்மாதம் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சந்திரயான் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் மயில்வாகனன் நடராஜன் ஆகியோருக்கு "கௌரவ டாக்டர் பட்டம்' (டி.எஸ்சி.) வழங்கப்படுகிறது.
பி.எச்டி. ஆய்வு படிப்பை முடித்த 287 பேருக்கு, முதன்முறையாக பல்கலை.யின் இணைவேந்தர் பொன்முடி பட்டங்களை வழங்குகிறார். மற்றவர்களுக்கு வேந்தர் சுர்ஜித்சிங் பர்னாலா பட்டங்களை வழங்குவார். மொத்தம் 40,106 பேருக்கு பட்டம் வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை குறித்து இந்தியத் தணிக்கைத் துறை ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 123 ஆசிரியர் காலிப்பணியிடங்களில் 35 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் 70 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளன. ஜூன் மாதத்திற்குள் அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும்.
பல்கலைக்கழகத்தில் 3,000 மாணவர்களுக்கு 350 ஆசிரியர்கள் உள்ளனர். 1:8 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
ரூ.100 கோடியில் வகுப்பறைகள், ஆய்வகங்கள்: கடந்த 2 ஆண்டுகளில் 50 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வகுப்பறைகள் பற்றாக்குறை நிலவுகிறது. 2.5 லட்சம் சதுர அடியில் கிண்டி, தரமணி, சேப்பாக்கம் வளாகங்களில் ரூ.100 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்பட உள்ளன.
முதற்கட்டமாக கிண்டி வளாகத்தில் அடுத்த 2 மாதத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். அதைத்தொடர்ந்து தரமணி, சேப்பாக்கம் வளாகங்களில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி தொடங்கும். இந்தப் பணிகள் ஓராண்டில் முடிந்துவிடும். இந்த ஆண்டில் ரூ.45 கோடியில் ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35 கல்வி நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு அளித்து வருகின்றன. இதில் சென்னைப் பல்கலைக்கழகம் 15-வது இடத்தில் உள்ளது. 19-வது இடத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
இந்த ஆண்டில் பல்கலைக்கழக வளர்ச்சி பணிகளுக்கு ரூ. 64 கோடி நிதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 மாணவர் தங்கும் விடுதிகள் கட்டப்பட உள்ளன. இதில் 700 மாணவர்கள் தங்கலாம். சர்வதேச மாணவர் தங்கும் விடுதி கட்டும் திட்டம் உள்ளது என்றார் ராமச்சந்திரன்.
No comments:
Post a Comment