அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 18, 2009

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி

பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: மலேசிய நாடாளுமன்றத்தில் பேராசிரியர் இராமசாமி


பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய மலேசிய அரசாங்கம், இதேபோன்று பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றும்படி மலேசியாவில் உள்ள பத்துகவான் நாடாளுமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில துணை முதல்வருமான பேராசிரியர் முனைவர் இராமசாமி உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேல் இராணுவத்தைப் போல் இலங்கை தமிழ் மக்களைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் சிறிலங்கா அரசாங்கம் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் ஈழத் தமிழ் மக்களும் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றனர். ஈவு இரக்கமின்றி தமிழ் மக்களைச் சிங்கள தமிழ் மக்களைச் சிங்கள அரசு வானூர்தி மூலம் குண்டுகளை வீசி அழித்து வருகின்றது.

பாலஸ்தீன மக்களைப் போல் இலங்கை தமிழ் மக்களையும் அழிவில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று பேராசிரியர் இராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்காக மலேசிய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியது.

அனைததுலக கவனத்தை ஈர்த்த இந்த சிறப்புக் கூட்டத்தில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனத்தை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேறுபாடின்றி மிக வன்மையாகக் கண்டித்தனர்.

இந்த சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பேராசிரியர் இராமசாமி, பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை எடுத்து விளக்கினார்.

சிங்கள அரசு இலங்கை தமிழர்களுக்கு எதிராக நடத்திக் கொண்டிருக்கும் இனப் படுகொலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அவரோடு இணைந்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் படும் துயரங்களைப் பற்றி பேசி அதற்குத் தீர்வு காண பாடுபடுவோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனோகரன், குலசேகரன், லிம் சோங் எங் குறிப்பிட்டுள்ளனர்.

மலேசிய அரசிடம் மலேசிய இந்தியன் காங்கிரசும் கோரிக்கை

இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று கோரி, மலேசிய அரசாங்கம் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மலேசிய இந்தியன் காங்கிரசின் இளைஞர் பிரிவின் ஆலோசகர் சா.வேள்பாரியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதல்களால் காசாவில் அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டு வருவதைப் போல், இலங்கையிலும் அப்பாவி தமிழ் மக்கள் மீது இராணுவம் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான போர் வானூர்தி குண்டுவீச்சுத் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் முதல் குழந்தைகள் வரை தினம் தினம் மடிந்து வருகின்றனர்.

மக்களின் மரண ஓலம் வானைப் பிளந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இலங்கை விவகாரத்திலும் உலக அமைப்பான ஐ.நா. உடனடியாக தலையிட வேண்டும் என்று மலேசியா சிறப்புத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும். இராணுவத்தின் தாக்குதலினால் காயமடைந்து இருக்கும் அப்பாவி தமிழ் மக்களும் குழந்தைகளும் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும். அங்கு அமைதி நிலை ஏற்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தொடர்பாக ஐ.நா. உடனடியாக சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வேள்பாரி கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் நடக்கும் போரில் கொல்லப்பட்டு வருகின்றவர்கள் இனத்தினாலும் மொழியினாலும் சமயத்தாலும் தமிழர்கள்.

எனவே, அங்கு நடக்கின்ற அட்டூழியத்தை மலேசிய இந்தியர்கள் என்ற முறையில் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மலேசிய ஆளுங்கட்சியில் ஓர் உறப்புக் கட்சி என்ற முறையில் மலேசிய இந்தியன் காங்கிரசின் இளைஞர் பிரிவு, இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்து மலேசிய அரசாங்கம் உடனடி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றது.
வேள்பாரியின் இந்த அறைக்கூவலை வரவேற்று பல சமூக இயக்கங்களின் தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: