அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 18, 2009

சென்னையில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

சென்னையில் பயங்கரவாத எதிர்ப்பு பொதுக் கூட்டம்!

சென்னை தாஷாமக்கானில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை மாவட்ட 39வது வட்டம் சார்பில், தீவிர பயங்கரவாத எதிர்ப்பு தெருமுணைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. இதில் சிறப் புரையாற்றிய, கோவை மாநகர முஸ்லிம் லீக் தலைவரும் மாநில விவசாய அணி அமைப்பாளரு மான நாவலர் கோவை நாஸர் எம்.சி., பேசும்போது குறிப்பிட்டதாவது:-

தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என சொல்கிறார்களே, தென்காசியில் ஒரு இடத்தில்-தொப்பியும்-கைப்பையும் வைத்துவிட்டு, யாரோ சென்றுவிட்டார்கள். பிறகு, வெடிவைப்பு நடக்கிறது. நடந்த வெடிவைப்பு சம்பவத்தை அந்தப் பகுதி போலீஸ் கமிஷனர் தலைமையில் உள்ள குழு முதன் முதலில் கண்டுபிடித்து, இந்த வெடி வைப்பு-சகோதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்த சதி என்று சொன்னாரே.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்துவிட்டு, பிறகு இந்தச் செயல்களை முஸ்லிம் மக்கள்தான் செய்தார்கள், என்று முஸ்லிம்கள் மேல் பழிசுமத்தி, தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்களா? இந்தச் செயல்களெல்லாம் நியாயம்தானா?

அரபிக் கல்லூரிகளில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்று நாட்டின் உயரிய மதிப்புமிக்க மன்றத்திலே சொன்னார்கள். இந்தியத் துணைக்கணடத்தில் உள்ள ஆயிரக் கணக்கான அரபிக் கல்லூரிகளை அரசு அதிகாரிகள் சோதனையிட்டதில் ஒரு கல்லூரியில்கூட தீவிரவாதம் போதிக்கப்படவில்லை என்று சோதனையிட்ட அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டார்களே இப்போது எங்கே தீவிரவாதம் இருக்கிறது தெரியுமா?

இன்று இந்தியாவிலே புகழ்பெற்ற மடங்களிலே அதன் மடாதிபதிகள் மடத்திலேயே தன் இனத்தைச் சேர்ந்தவர்களையே கொன்று குவித்து இன்று சிறைக்கூடங்களிலே-நீதி மன்றங்களிலே அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு பெண் சாமியார்கள் கூட விதிவிலக்கல்ல.

யார் என்ன செய்தாலும், அது முஸ்லிம்கள்தான் செய்கிறார்கள் என்று சொல்லக்கூடிய நிலை மாறிக்கொண்டிருக்கிறது. நியாய ரீதியாக உள்ள கோரிக்கைகளை நாம் நிச்சயம் யார் ஆட்சியாளராக இருந்தாலும் நாம் கேட்போம். எங்கு கேட்கப்படவேண்டுமோ அங்கு உரத்த குரலிலே கேட்போம். எந்த ஆட்சியிலே நாம் பங்கு கொண்டிருந்தாலும் ஆட்சியாளரிடம் கேட்போம். உதாரணமாக பாராளுமன்ற உரையிலே பி.ஜே.பி. உறுப்பினர் மல்ஹோத்ராவின் வாதத்திற்கு பாராளுமன்றத்திலேயே பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., இப்படியும் இருக்கிறதா? என்று மன்ற உறுப்பினர்கள் வியந்தனரே இது போன்ற காரியங்களை முஸ்லிம் லீக் ஒன்றுதான் செய்ய முடியும்.

இவ்வாறு கோவை நாசர் பேசினார்.

வட சென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன் பேசும்போது கூறியதாவது:-

இன்று மும்பையில் நடைபெற்ற தீவிரவாத-பயங்கரவாதத் தாக்குதல் களினால் நாடே திணறிக்கொண்டிருக்கிறது. இதுகூட முஸ்லிம்கள்தான் செய்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பு நடந்த மலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் முஸ்லிம்கள் தான் செய்தார்கள் என்று அன்று எல்லோரும் ஒருமித்த கருத்திலே சொன்னார்கள் பத்திரிக்கைகளின் விஷமப் பிரச்சாரமும் அதுதான்.

இந்த விஷமப் பிரச்சாரத்தில் துளியளவும் முஸ்லிம்களுக்கு சம்பந்தமில்லை என்று, கண்டு பிடிக்க, மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்டிருந்த காரணத்தால் நமது பெருந்தலைவர் பேராசிரியர் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக இருந்த காரணத்தால் மலேகான் சம்பவம் விசாரிக்கப்பட வேண்டும் என்று சொன்ன காரணத்தால் விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில் சங்பரிவார், அமைப்புகள், பெண் துறவி பிரக்யாசிங் தாக்கூர், சாமியார் பாண்டே, போன்றவர்கள் மலேகான் நிகழ்வுக்கு காரணம் என்று மஹாராஷ்டிரா மாநில புலனாய்வுத்துறை உயரதிகாரி ஹேமந்த் கார்கரே, மற்றும் உயர் அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் அறிவித்தவுடன், ஒரு சம்பவத்தை நிகழ்த்தி மூன்று அதிகாரிகளையும் சம்பந்தமில்லாத இடத்திற்கு வரவழைத்து அவர்கள் மூன்று பேர்களும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து பாருங்கள்.

இவ்வாறு வடசென்னை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் பேசினார்.

முன்னதாக எஸ்.எம். கனி சிஷ்தி, எஸ்.கே. அப்துர் ரஹ்மான், ரப்பானி கே.ஏ. அப்துல் குத்தூஸ், இஸ்மாயில் மற்றும் பலர் பேசினர். முடிவில் ஜலால்தீன் கவிதை வாசிக்க, எஸ். சலீம்கான், நன்றி கூறினார்.

No comments: