பெங்களூர்: புதிதாக ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்திவிட்ட இன்போசிஸ் நிறுவனம் தற்போது ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கும் முடிவுக்கு வந்துள்ளதாக மனிதவள துறை இயக்குனர் மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உச்சக்கட்ட பாதிப்பை சந்தித்துள்ளன. ஆட்குறைப்பு தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது.
இந்நிலையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான இன்போசிஸ் ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
மோகன்தாஸ் பை கூறுகையில்,
ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதி நிறுவனத்தின் லாபத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது லாபம் குறைந்து வருவதை அடுத்து சம்பளமும் குறைக்கப்படும்.
இந்த ஆண்டு யாரும் சம்பள உயர்வை எதிர்பார்க்க முடியாது. கடந்தாண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சுமார் 20,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.. இந்தாண்டு புதியவர்கள் யாரையும் வேலைக்கு எடுக்கும் எண்ணம் இல்லை.
நாங்கள் பொறுப்பா?:
சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிலர் எங்களை நாடி வருகின்றனர் என ஏற்கனவே எங்கள் தலைமை செயல் அதிகாரி கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வந்தால், தனியாக தனியாக அவர்களது சூழ்நிலை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வோம் என்றார் மோகன்தாஸ் பை.
உலகிந் டாப் 20 நிறுவனங்களில் இன்போசிஸ்:
இதற்கிடையே ஹய் குரூப் மற்றும் சீப் எக்சிக்யூட்டிவ் பத்திரிகையும் இணைந்து நடத்திய சர்வேயில் சிறந்த தலைவர்களை உருவாக்கும் உலகின் டாப் 20 நிறுவனங்களில் இன்போசிசும் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனங்கள் பொருளாதர நெருக்கடியை சமாளிக்க கூடிய திறமையும், பொருளாதார சீரமைப்புக்கு பின் வேகமாக வளரக் கூடியவை என்றும் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இவ்வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே இந்திய நிறுவனமான இன்போசிஸூக்கு 14வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று இடங்களை 3 எம், புராக்டர் அண்ட் கேம்பிள் மற்றும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்கள் பிடித்துள்ளன.
No comments:
Post a Comment