அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 28, 2009

இந்து மதம் எங்கே போகிறது? 1.


மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், என்னும் வைணவப் பெரியார் (ஒரு இந்து மதப் பார்ப்பனர் )என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நம் " உண்மை" வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். சங்கராச்சாரியார் கைதைத் தொடர்ந்து நக்கீரன் இதழில் “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற தொடர் கட்டுரையைத் தீட்டினார்.அது அப்படியே ‘விடுதலை’யிலும் வெளியிடப்பட்டது. பின்னர் நூல் வடிவிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டது. அதன் தொடர்ச்சியாக நக்கீரன் இணைய இதழில் ‘சடங்குகளின் கதை’ என்ற தொடரை எழுதியுள்ளார் தாத்தாச்சாரியார். நக்கீரன்’ இதழில் தொடந்து வெளி வந்த இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. இத்தொடரை நக்கீரன் நூலாக வெளியிட்டுள்ளது. இந்நூலில் இந்து மதச்சடங்குகளை புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்த இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....

எந்தக் காலத்திற்கோ ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருத சடங்குகளை தமிழர்கள் இன்னும் சுமந்து கொண்டு திரிய வேண்டுமா? அவைகளைத் தூக்கி எறிய வேண்டாமா? என்ற கேள்வியே இந்நூலைப் படித்த போது எழுகிறது.

நூல்: சடங்குகளின் கதை (இந்துமதம் எங்கே போகிறது? - பாகம் 2)ஆசிரியர்: அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்வெளியீடு: நக்கீரன் பப்ளிகேசன்ஸ், ஜானி ஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14 பக்கம் 152 ரூ. 75.

பகுதி - 1
இந்து மதம் எங்கிருந்து வந்தது?
நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.
இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.
அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.

பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.இந்தப் பயத்தாங் கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.
அவர்களின் மூளைக் குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.

விளைவு...!கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.
நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்

உண்டாயிற்று வேதம்.
உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.
முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.
பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.

இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.

ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.
ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....
அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன.

வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.

ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்? ( தொடரும் )

No comments: