தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள் இஸ்லாமியர்கள்: பேராசிரியர் மு. அப்துல் சமது
திருச்சி, பிப். 24: தமிழுக்கு இஸ்லாமியர்கள் முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்தனர் என்றார் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி பேராசிரியர் மு. அப்துல் சமது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் உயராய்வு மையம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற அபூபக்கர் அறக்கட்டளைச் சொற்பொழிவில் "தாய்த்தமிழுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் அவர் பேசியது:
"தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று காயிதே மில்லத்தான் முதல் முதலாக குரல் கொடுத்தார்.
கடந்த 1926 ஆம் ஆண்டு எம்.எல்.சியாக இருந்த திருச்சி கெüஸ் முகைதீன் தமிழுக்குத் தனிப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் குரல் கொடுத்தார்.
உலகில் முதல் மொழி தமிழ் என்பதால், தமிழுக்கு முதன்மையும், முக்கியத்துவமும் கொடுத்து இஸ்லாமியர்கள் குரல் கொடுத்து வந்தனர்.
தமிழ் பண்பாடு, கலாசாரத்துக்கு ஏற்ப, அதே நேரத்தில் தங்களது தனித் தன்மையையும் விட்டுக் கொடுக்காமல், இலக்கியத்தைப் படைத்து வந்தனர்.
இவற்றையெல்லாம், மாணவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால், நிறைய இலங்கியங்கள் வெளி வராமல் இருக்கின்றன.
எனவே, இஸ்லாமிய இலக்கிய அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு இஸ்லாமிய இலக்கியங்களைக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, மலேசியாவில் உள்ள பரக்கத் அலியின் தந்தை அபுபக்கர் நினைவாக பாரதிதசான் பல்கலைக்கழகத்தில் முதல் அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த ஆண்டுக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த அற்க்கட்டளை நிறுவப்படும்.
அரேபியாவிலிருந்து வந்த இஸ்லாமியர்களுக்கு முதலில் தமிழில் பேச மட்டும்தான் தெரியும். எழுதத் தெரியாது. தமிழ் சொல்களை அரேபிய வரி வடிவத்தில் படைத்தனர். இதுபோல நிறைய செய்யுள் இலக்கியங்களைப் படைத்தனர். இவற்றை மாணவர்கள் படிக்க வேண்டும்' என்றார் அப்துல் சமது.
துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ தலைமை வகித்தார்.
பாரதிதாசன் உயராய்வு மையத் தலைவர் ச.சு. ராமர் இளங்கோ வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் சித்ரப்ரியா நன்றி கூறினார்
No comments:
Post a Comment