இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம்" என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது. வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். "கர்மயோகின்" என்ற வார ஏட்டைத் தொடங்கினார். துணிந்த வாலிப உள்ளங்களே காரியமற்ற கனிந்த உள்ளத்தோடு வருக! என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்த்து. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை. "ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும் தானே நிறுவி இருக்கிறொம். இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார். "அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?" "தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக்கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்தபதில். அவர் ஒரு வழியாக தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்றுதடைவிதித்தன. 1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார். புரட்சி உலகக் கூடங்களில் படம்போட்ட வீரராக அனுபவக் களஞ்சியமாக 1912 ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர்.. "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான்.. அதற்காக அவர் அல்ஹிலால் என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. இந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது. இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது.மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள்விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும். இந்த ஏட்டில் ஆசாத் என்ற பூனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் அல்பலாக் என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப் டெல்லி, உத்திரபிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். 1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின்தலைமையில் தான் நிறைவேற்றப்பட்டது.. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்க்ளின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார். 1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது. ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே.. ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது.கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார். "அவரை கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன் தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார் நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09) |
ஷேக் அப்துல் காதர்
No comments:
Post a Comment