அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, February 28, 2009

மொத்த உற்பத்தியில் பெரும் சரிவு: ஆபத்தில் இந்தியப் பொருளாதாரம்

டெல்லி: எது நடக்கக் கூடாது என ஒவ்வொரு இந்தியரும் வேண்டினார்களோ அந்த ஆபத்து இந்தியப் பொருளாதாரத்தையும் பீடிக்கத் தொடங்கி விட்டது. ஆம்..... இந்தியப் பொருளாதாரமும் இப்போது வீழ்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது.

இந்த நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், சர்வதேசப் பொருளாதாரம் தடுமாறத் துவங்கியதிலிருந்து பல்வேறு கட்டமாக சலுகைகளை வழங்கி வந்தது இந்திய அரசு. ஆனால் இந்த சலுகைககளால் எதிர்பார்க்கப்பட்ட சாதக விளைவுகள் தோன்றாமல் போனது மட்டுமல்ல... பாதக விளைவுகளைத் தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.

இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் நாட்டின் மொத்த உற்பத்தி கடந்த ஆண்டைவிட 3.6 சதவிகிதம் குறைந்துவிட்டது. இந்த காலாண்டில் எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சியை விட மிகவும் குறைந்து 5.3 சதவிகிதமாக உள்ளது GDP எனப்படும் மொத்த உற்பத்தி அளவு.

இது உண்மையிலேயே நமது பொருளாதாரத்துக்கு அடிக்கப்பட்டுள்ள அபாய மணியாகும்.

உற்பத்தித் துறையில் 0.2 சதவிகிதம் இந்தக் காலாண்டில் மட்டும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எப்பாடுபட்டாவது 7 சதவிகித பொருளாதார வளர்ச்சியை பராமரிப்போம் என மத்திய அரசு கூறி வந்தது. ஆனால் அந்த குறைந்தபட்ச வளர்ச்சியைக் கூட இப்போது காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் மீண்டும் எப்படியாவது 7 சதவிகித வளர்ச்சியைக் கொண்டு வருவோம் என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்துள்ளார்.

அப்படியெனில் அரசு கடந்த அக்டோபரிலிருந்து 3 கட்டங்களாக அரசு அறிவித்துள்ள ரூ.4 லட்சம் கோடி ஊக்கச் சலுகை என்னவானது?

'அந்த சலுகைகள் உடனடியாக பலன் தந்து விடாது. கொஞ்சம் காலம் பிடிக்கும். குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்' என்கிறார் அமைச்சர் பன்சால்.

ஆனால் அதற்குள் பொருளாதார வளரச்சி பாதாளத்துக்குப் போய்விடுமே... அதை எப்படி தடுத்து நிறுத்தப் போகிறார்கள்!

இதன் பின் விளைவாகத் தொடரவிருக்கும் வேலையிழப்புகள், உற்பத்தியின்மை, விலைவாசி போன்ற, மக்கள் அன்றாடம் சந்திக்கிற பெரும் பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி? மத்திய அரசு இதற்கென ஏதேனும் திட்டங்களை யோசித்து வைத்துள்ளதா? என்ற பொருளியல் நிபுணர்களின் கேள்விகளுக்கு இப்போதைக்கு மத்திய அரசிடம் ஒரு பதிலும் இல்லை என்பதே பரிதாபமான உண்மை!

No comments: